SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி

2018-11-11@ 00:06:27

சென்னை: கச்சா எண்ணெய் விலை விழ்ச்சியடைந்தும் ெபட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி  எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பாண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
இது 22.87% வீழ்ச்சி ஆகும். கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தான் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அவற்றின் விலைகளும் கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி இருந்ததை விட 22.87% குறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19.34 குறைந்து 67.84 ஆக இருக்க வேண்டும்.

அதே போல் டீசல் விலையும் லிட்டருக்கு 18.20 குறைந்து 61.37-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால்,  சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல்  80.90, டீசல் 76.72 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது 22.87% குறைய வேண்டிய பெட்ரோல், டீசல் விலைகள் முறையே 7.20%, 3.66% என்ற அளவில் தான் குறைந்துள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாத விலை நிர்ணயமாகும். எந்த வகையில் பார்த்தாலும் இயல்பாக விற்பனை செய்ய வேண்டிய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 13.04 ரூபாயும், டீசல் விலை 15.93 ரூபாயும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இது மிகப்பெரிய கொள்ளையல்லவா?

பெட்ரோல் மீது ஏற்கனவே 118% வரி விதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும் பெட்ரோல் விலையில் 13.04 ரூபாயும், டீசல் விலையில் 15.93 ரூபாயும் மறைமுகமாக உயர்த்தி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? வழக்கமாக பெட்ரோல் விலையும், டீசல் விலையும் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன? என்பது குறித்த விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடும். ஆனால், அக்டோபர் 29-ஆம் தேதிக்குப் பிறகு இந்த விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடவில்லை. அந்த விவரங்களை வெளியிட்டால் உண்மை நிலை அம்பலமாகிவிடும் என்பதால் தான் அவற்றை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடாமல் ரகசியமாக வைத்து பாதுகாத்து வருகின்றன. மத்திய அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக  உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்