SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் மீண்டும் பெரும் குழப்பம் நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது?

2018-11-11@ 00:03:29

 * தேர்தல் அறிவிப்பை ஆணையம் வாபஸ் பெற வேண்டும்
* சிறிசேனாவின் சட்ட ஆலோசகர் கருத்தால் பரபரப்பு
* சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட விக்ரமசிங்கே முடிவு

கொழும்பு: இலங்கையின் 19வது அரசியலமைப்பு சட்டத்தின்படி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிபர் சிறிசேனாவின் சட்ட ஆலோசகர் விக்ரமரத்னே கருத்து தெரிவித்துள்ளதால் இலங்கையில் மீண்டும் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் பொருளாதார கொள்கைகளில், அதிபர் சிறிசேனாவுக்கு உடன்பாடு இல்லை. மேலும், சிறிசேனா மீதான கொலை சதி விவகாரத்தை, ரணில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் அதிபர் சிறிசேனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக சிறிசேனா கடந்த மாதம் 26ம் தேதி நியமித்தார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் எனக் கூறிய ரணில், அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை ராஜபக்சே திரட்டும் வகையில் நாடாளுமன்றத்தை வரும் 14ம் தேதிக்கு சிறிசேனா ஒத்திவைத்திருந்தார். ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களை சமரசம் செய்யும் அதிபர் சிறிசேனாவின் முயற்சிகள் தோல்வியடைந்தன. ராஜபக்சேயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேறு வழியின்றி இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கலைத்தார். உடனே பொதுத்தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதுகுறித்து ரணில் வி்க்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள செய்தியில், ‘‘நாடாளுமன்றத்தை இலங்கை அதிபர் சிறிசேனா கலைத்தது சட்டவிரோதம். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்வோம். அதிபரின் சர்வாதிகார நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கும்படியும், அரசியலமைப்பு சாசனத்தையும் சட்ட விதிமுறைகளையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுக்கும்’’ என கூறியுள்ளது. ரணில் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரா கூறுகையில், ‘‘சிறிசேனாவின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து நீதிமன்றத்திலும், நாடாளுமன்த்திலும், தேர்தலிலும் போரிடுவோம்’’ என கூறியுள்ளார். சிறிசேனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திணேஷ் குணவர்தனே கூறுகையில், ‘‘அதிபர் சிறிசேனா உத்தரவை மீறி, சபாநாயகர் கரு ஜெயசூர்யா சட்டவிரோத உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். அதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது’’ என்றார். ராஜபக்சே அளித்த பேட்டியில், ‘‘பொதுதேர்தல் மட்டும்தான் நிலையான ஆட்சியை ஏற்படுத்தும்’’ என்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ளது. ஆனால் 21 மாதங்களுக்கு முன்பாகவே அது கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் சிறிசேனாவின் சட்ட ஆலோசகர் ஜெயம்பதி விக்ரமரத்னே அளித்துள்ள பேட்டியில், ‘‘இலங்கையில் மாற்றியமைக்கப்பட்ட 19வது அரசியல்சாசனப்படி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது. இதை எதிர்த்து ரணில் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றால், அதிபர் உத்தரவு ரத்தாகிவிடும். எனவே தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் உடனே வாபஸ் பெற வேண்டும்’’ என கூறியுள்ளார். இதனால் இலங்கையில் மீண்டும் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HodeidahYemen

  ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

 • PizzaGuinnessArgentina

  அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

 • JordanFloodPetra12

  ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

 • EbolaCongoAfrica200

  தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

 • AssemblyChattisgarElection18

  சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்