SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு விற்றதால் விபரீதம் வெடி விபத்தில் 2 தாய், மகன்களுடன் பலி

2018-10-24@ 01:10:00

சென்னை: சின்ன காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு விற்றபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 தாய்-மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தார். தீபாவளி பண்டிக்கை அடுத்த மாதம் 6ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு, அரசிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பல்வேறு துறைகளிடம் இருந்து தடையில்லா சான்று (என்ஓசி) வந்தால்தான் பட்டாசு தயாரிக்க முடியும். ஆனால், தீபாவளி காலத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது, குடோனில் பட்டாசு தேக்கி வைத்து சில்லறை வியாபாரம் செய்யப்படுவது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. இதனால், பல இடங்களில் வெடி விபத்து ஏற்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு விற்பனை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
சின்ன காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் வசிப்பவர் மைதீன். இவரது மனைவி ஷாகிராபானு (45), இவர்களது மகன் முஸ்தாக் (22). டிரைவராக வேலை பார்த்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு, மைதீன் வீட்டின் பட்டாசு விற்க முடிவு செய்து மொத்தமாக வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், மொத்தமாக வாங்கி வந்த பட்டாசுகளை, நேற்று வீட்டில் தனித்தனியாக பிரித்து பாக்கெட்டுகளில் மைதீன் குடும்பத்தினருடன் போட்டு கொண்டிருந்தனர். பின்னர், மைதீன் மட்டும் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பிற்பகல் சுமார் 3 மணியளவில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அதிகளவில் பட்டாசுகள் இருந்ததால் வெடிக்கும் சத்தம் அணுகுண்டு வெடித்தது போல் இருந்துள்ளது. இதனால், அருகில் வசித்த மக்கள் சிதறியடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர். பயங்கர வெடி விபத்து காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன. வீட்டில் இருந்த பொருட்களும் கொழுந்துவிட்டு எரிந்தது. திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த ஷாகிராபானு, அவரது மகன் முஸ்தாக், பக்கத்து வீட்டை சேர்ந்த மஸ்தான் (47), மஸ்தானின் தாய் ஷர்புதீன் பீவி (75)   ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வீட்டின் முன் நிறுத்திய 2 பைக்குகள், தீயில் கருகின. இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
தகவலறிந்து, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதைதொடர்ந்து டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம் நெமிலி பகுதியில் இருந்து, மைதீன் மொத்தமாக பட்டாசு வாங்கி வந்து அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்து  விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, மைதீனை கைது செய்த போலீசார், அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையில், திமுக பிரமுகர் எஸ்.கே.பி.சீனிவாசன் தலைமையில் இளைஞர்கள் அங்கு சென்று, அருகில் இருந்த வீடுகளில் இருந்த சிலிண்டர்களை அப்புறப்படுத்தி, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்