SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை அரசு குடியிருப்புகளில் வாடகை உயர்வு செல்லும் விதிமீறி ஆணை பெற்றவர்களை காலி செய்ய வேண்டும்: வாடகை செலுத்த தவறுபவர்களையும் அப்புறப்படுத்த அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

2018-10-24@ 01:09:59

சென்னை: வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு அரசு வாடகையை உயர்த்தி பிறப்பித்த அரசாணையை உறுதி செய்த உயர் நீதிமன்றம், வாடகை செலுத்த தவறுபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  சென்னைக்கு வேலை தேடி வருபவர்களின் வசதிக்காக கடந்த 1970ம்  ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, சிஐடி நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டது. அப்போதிருந்து, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் சதுரடிக்கு 2 ரூபாய் 50 காசு என குடியிருப்புகளுக்கு வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வாடகையை, சதுர அடிக்கு 7 ரூபாய் 31 காசு என உயர்த்தி கடந்த 2017ல் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அரசாணை பிறப்பித்தது.  இந்த அரசாணையை ரத்து செய்ய கோரியும், பழைய வாடகையான ₹1,438யே வசூலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் 75க்கும் மேற்பட்ட வாடகைதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.   வீட்டு வசதி துறை தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, ‘‘கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. சில கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் இடித்து விட்டு மீண்டும் கட்ட வேண்டியுள்ளது. அரசு நிர்ணயம் செய்த வாடகை என்பது அந்த பகுதிகளில் உள்ள சந்தை நிலவரத்தை விட குறைவு’’ என்று வாதிட்டார்.

 வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:  தற்போது ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் 500 சதுர அடி கொண்ட ஒற்றை படுக்கை அறை  வீடுகளுக்கு வெளிச்சந்தையில் ₹9,775 வசூலிக்கப்படும் நிலையில்  வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500 சதுர அடிக்கு ₹1438 மற்றும் ₹1250 மட்டுமே வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசின் இந்த வாடகை உயர்வு ₹6,727 ரூபாய் மட்டும்தான். இந்த வாடகை உயர்வு நியாயமானதுதான். எனவே அரசின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.அரசு குடியிருப்புகளில் வேண்டியவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருப்ப உரிமை ஒதுக்கீடாக வீடுகள் ஒதுக்கீடு செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.  விதிகளுக்கு முரணாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த ஒதுக்கீடுகள் குறித்து வீட்டு வசதி துறை மறு ஆய்வு செய்ய வேண்டும். விதிகளை மீறி ஒதுக்கீடு பெற்றவர்களை உடனடியாக காலி செய்ய வீட்டு வசதித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள் இல்லாத, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு குறைந்த வாடகையில் வீடு வழங்கும் இந்த திட்டத்தை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை வேதனை அளிக்கிறது. வாடகையை செலுத்தாதவர்களை அரசு குடியிருப்புகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
 
சதுர அடி ₹575 என்ற அடிப்படையில் குடியிருப்புக்கு ₹6775 வாடகையை கண்டிப்பாக செலுத்த வேண்டும். வாடகையை மாதம் தவறாமல் அதிகாரிகள் வசூலிக்க வேண்டும். வாடகையை தராமல் இழுத்தடிப்பவர்கள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் குடியிருப்பில் வாடகை தராமல் குடியிருப்பவர்களை எப்படி அனுமதிப்பதில்லையோ, அதுபோல அரசு குடியிருப்பு விவகாரத்தில் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது தடுக்கப்படும். வாடகை பாக்கி தராதவர்கள் மீது எந்த கரிசனமும் காட்டக்கூடாது. அவ்வாறு கரிசனத்துடன் செயல்படும் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகையை செலுத்த தவறினால் அவர்கள் அரசு அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களை அப்புறப்படுத்த எந்த தயக்கமும் காட்டக்கூடாது. இந்த நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்