SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலை பக்தர்களை வரவேற்க தயாராகும் நிலக்கல்

2018-10-16@ 10:31:48

கம்பம் : சபரிமலை ஐயப்பன் கோயில் மாலை அணிவிப்பு தொடங்க உள்ள நிலையில் பக்தர்களை வரவேற்க பம்பை அருகே 300 ஏக்கரில் நிலக்கல் பார்க்கிங் தயாராகி வருகிறது. இந்தியாவின் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் கேரளா மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோயில் மிக முக்கியமானதாக உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதங்களில் இருந்து ஐயப்பன் பக்தர்கள் வருகை களைகட்டி காணப்படும். தமிழகம், புதுச்சேரி மட்டும் அல்லாமல் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, பீகார், மட்டும் அல்லாமல் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய சிங்கப்பூர், இலங்கை, கனடா, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் 40 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோயிலுக்கு வரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பக்தர்கள் அதிக அளவு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கையில் கேரளா தேவசம்போர்டு தயாராகி வருகிறது. கேரளாவில் கடந்த ஜூலை இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. இதில் முக்கியமாக ஐயப்பன் கோயிலில் புண்ணியநதியான பம்பா நதி திசைமாறி ஓடியது. இங்கு சன்னிதானம் செல்லும் 2 பாலங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.

அத்துடன் இங்குள்ள அனைத்து கட்டிடங்களும் உருக்குலைந்து மணற்காடாக காட்சியளிக்கிறது. கடந்த மாதம் வழக்கம்போல் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்களின் வாகனங்கள் பம்பையில் நிறுத்த அனுமதி தரவில்லை. ஏனெனில் அந்த இடங்கள் அனைத்தும் மணற்பாங்காகி கிடந்ததுடன், பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளும்இல்லாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த பம்பையில் இருந்து 18 கி.மீட்டர் தொலைவில் உள்ள நிலக்கல் பார்க்கிங் தயார் செய்யப்பட்டு வருகிறது. நிலக்கல் கார்பார்க்கிங் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் அமைந்துள்ளது. இங்கே இருந்து கேரள அரசுபோக்குவரத்து கழகம் பம்பைக்கு பஸ்களை இயக்கி வருகிறது. ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிலக்கல் பார்க்கிங் வாகனங்களை நிறுத்திவிட்டு பஸ்களில்தான் போகவேண்டும். கனரக வாகனங்கள் மட்டும் அல்லாமல் இலகுரக வாகனங்கள் கூட பம்பைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட உள்ளது.

இதனால் தற்போதே நிலக்கல் தயாராகி வருகிறது. இதில் பக்தர்களுக்கு தேவையான நடைபந்தல் அமைக்கும் பணி, நடமாடும் கழிப்பறை, சாலை வசதி, குடிநீர்வசதி, அரசு அதிகாரிகள் தங்குவதற்கான கட்டிடங்கள் உள்ளிட்டவை முழுவீச்சில் நடந்து வருகிறது.

கோயிலில் நாளை நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை நாளை (அக்.17) திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் சீசன் நவ. 17ந்தேதி நடைதிறந்து ஜன.20ம் தேதி வரை படிபூஜையுடன் முடிகிறது. இதற்கிடையில் மண்டல பூஜைக்காக டிச.26ம் தேதி நடை அடைக்கப்பட்டு 30ம் தேதி மீண்டும் திறக்கப்படும்.   இதற்கான வசதிகள் செய்ய கேரளா தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. மக்கள் நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு நிலக்கல் பார்க்கிங் தயாராகி விட்டது. பெண் பக்தர்கள் வசதிக்காக நிலக்கல் பார்க்கிங்கில் தங்குமிடம், பாதுகாப்பான கண்காணிப்பு, தனிக்கழிப்பறை, தனி பஸ்வசதி போன்றவை செய்துதர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தரை வாடகை அதிகரிப்பு

ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு நிலக்கல்லில் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்படும். பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இவர்களின் வசதிக்காக தற்காலிக கடைகள் நிலக்கல் அமைக்கப்படுகிறது. இதற்காக தேவசம்போர்டு பொது ஏலம் விடும். இந்த ஆண்டு பம்பையில் கடை இல்லாத காரணத்தினால் நிலக்கல்லில் கடை எடுப்பவர்கள் மத்தியில் போட்டி நிலவியது.

5 மீட்டர் நீளம், அகலம் உள்ள கடைக்கு ரூ. 5 லட்சம் வரை போட்டி போட்டு வியாபாரிகள் ஏலம் எடுத்துள்ளனர். ஹோட்டல்கள் 60 நாட்களுக்கு ரூ.10லட்சம் முதல் 20 லட்சம் வரை ஏலம் எடுத்துள்ளனர். இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் அதிக முதலீடு செய்து கடைகளை எடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2019

  20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்