SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவசர காலங்களில் வீரர்கள் செல்ல அரசு வாகனம் இல்லாத தேசிய பேரிடர் மீட்பு படை

2018-10-14@ 02:17:09

நாகர்கோவில்: தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தியாவில்  ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக்  கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும், தனியாரால் ஏற்படுகின்ற பேரிடர்களையும் சமாளிக்கும் வழிமுறைகளையும்  நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ஆணையம் ஆகும். மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு பேரிடர் மேலாண்மையை தேசிய முன்னுரிமையாக அங்கீகரித்து ஆகஸ்ட் 1999ல் ஓர் உயர் ஆற்றல்மிக்க குழுவை உருவாக்கியது. 2001 குஜராத் பூகம்பத்திற்கு பிறகு பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்தும் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் பரிந்துரைகளை மேற்கொள்ள ஒரு தேசிய குழுவை ஏற்படுத்தியது. 2005 டிசம்பர் மாதம் 23ம் தேதி மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றியது. அதன் அடிப்படையில், பிரதமர் தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

நாடு முழுவதும் 10 பட்டாலியன்கள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் 12 பட்டாலியன்கள் என அதிகரிக்கப்பட்டு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பட்டாலியன் தமிழகத்தில் அரக்கோணத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக பணியாற்றி 535 உயிர்களை காப்பாற்றினர். வெள்ளத்தில் சிக்கிய 24 ஆயிரத்து 600 பேரை மீட்டனர். அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானபோது அது புயலாக மாறக்கூடும், பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் கருதிய அரசுகள் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் வீரர்கள் 50 பேரை 5ம் தேதி கன்னியாகுமரிக்கு அனுப்பி வைத்தது. நாகர்கோவிலில் கமாண்டர் ரோஹித்குமார் தலைமையில் 25 பேரும், தக்கலையில் கமாண்டர் உமேஷ் மெக்கன்டே தலைமையில் 25 பேர் என இரு குழுக்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் நிலைமை சீராக இருந்தநிலையிலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து முகாமிட்டிருந்தனர். 6ம் தேதி இரவு நாகர்கோவில் வருகை தந்த இவர்கள் மூன்று நாட்கள் தங்கியிருந்த நிலையில் 9ம் தேதி மதியம் அரக்கோணம் திரும்பிச் சென்றனர்.

முன்னதாக இந்த வீரர்கள் அக்டோபர் 5ம் தேதி மாலை சென்னையில் இருந்து புறப்பட்டுவிட்டதாகவும், 6ம் தேதி காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் வந்துசேர்ந்துவிடுவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு வந்து சேர்ந்து விடுவார்கள் என தெரிவித்தனர். மாலை 5.50 மணிக்கு நாகர்கோவில் வந்துவிடுவார்கள் என கூறினர். ஆனால் இரவு 7 மணியளவில் வீரர்கள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்ட இரண்டு தனியார் பள்ளி பஸ்களில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து சேர்ந்தனர். அவசர காலத்தில் விரைவாக இயங்க வேண்டிய தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல போதிய வாகன வசதி இல்லாத அவலம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.  பேரிடர் மீட்பு பணிகள் என்று அழைக்கப்பட்ட உடன் வாகன வசதிக்காக அருகில் உள்ள ஏதேனும் தனியார் பள்ளிகளை நாட வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

திடீர் திடீரென சாலை மறியல் வேளையில் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து செல்ல அவ்வழியே செல்கின்ற மினி பஸ்களையோ, அரசு பஸ்களையோ பயன்படுத்துவது வழக்கம். அதுபோன்று 50 பேர் வருவதற்கு கூட  தனியார் பஸ்களை நம்பி பேரிடர் மீட்பு படை செயல்பட வேண்டிய அவலம், இப்படை தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும் நீடிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரக்கோணம் பட்டாலியனை பொறுத்தவரையில் அந்தமான் நிகோபர் தீவுகள், கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளுக்கு  செல்ல வேண்டியுள்ளது. எனவே இனி வரும் காலங்களிலேனும் போதிய அளவில் வீரர்களுக்கு தகுந்த வாகன வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க, அரசு வாகனங்களை மாற்று ஏற்பாட்டிற்கு பயன்படுத்தத்தக்க வகையில் தயார்படுத்த ேவண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பேரிடர் மீட்பு படை
* தேசிய பேரிடர் மீட்பு படையில் 12 பட்டாலியன்கள் நாடு முழுவதும் உள்ளது. இதில் பிஎஸ்எப்-3, சிஆர்பிஎப்-3 பட்டாலியன்களும், சிஐஎஸ்எப், ஐடிபிபி மற்றும் எஸ்எஸ்பியில் தலா 2 பட்டாலியன்களும் உள்ளன.
* ஒவ்வொரு பட்டாலியனிலும் 18 தன்னம்பிக்கையுள்ள வீரர்கள் உட்பட 45 பேர் குழுவாக இடம்பெற்றுள்ளனர். இதில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், எலெக்ட்ரீஷியன்கள், மோப்பநாய் பிரிவு வீரர்கள், மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் பிரிவைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
* ஒவ்வொரு பட்டாலியனிலும் உள்ள வீரர்களின் மொத்த எண்ணிக்கை 1149 ஆகும். அனைத்து பட்டாலியன்களிலும் உள்ள வீரர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள், மீட்பு கருவிகளை இயக்க திறம்பெற்றவர்கள். கெமிக்கல், பயலாஜிக்கல், ரேடியாலஜிக்கல் மற்றும் நியூக்ளியர் பேரிடர்களிலும் பணியாற்றும் வகையில் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • buffalorace

    தாய்லாந்து நாட்டில் விமர்சையாக கொண்டாடப்பட்ட எருமை பந்தய திருவிழா

  • dronehelicop

    பயணிக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் வடிவ ஹெலிகாப்டர்

  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்