SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நேரத்தில் தூர்வாரும் பணிகளில் கோட்டை விட்ட அதிகாரிகள்

2018-10-14@ 02:13:59

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணியை  உரிய காலத்தில் முடிக்காத காரணத்தால்  மீண்டும் பெரும் வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர். 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. புறநகர் பகுதிகளும் வெள்ளக்காடானது. இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசு தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சென்னையில் உள்ள பெரும்பாலான மழை நீர் வடிகால்கள் தூர்வாரப்படாமல்தான் உள்ளன. இந்தாண்டு மழை நீர் கால்வாய்களை தூர்வாரும் பணிக்கு 290 கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்தப் பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை என்றும், பல இடங்களில் பாதி வரைதான் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மழைநீர் கால்வாய்களுக்கு இந்த நிலை என்றால் நீர் நிலைகளின் நிலை இதை விட மிக மோசமாக உள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மொத்தம் 280 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை சீரமைக்க பொதுப் பணித்துறை 100 கோடி ஒதுக்கியது. குறிப்பாக  முடிச்சூர் கால்வாய்களை அடையாறு ஆற்றுடன் இணைக்க 18 கோடி, பக்கிங்காம் கால்வாய்களை அகலப்படுத்த  1.94 கோடி ஒதுக்கப்பட்டது.

இதை தவிர்த்து ஆதனூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், நன்மங்கலம்,  செம்பாக்கம், சிட்லபாக்கம், நாராயணபுரம், பள்ளிக்கரணை, செங்குன்றம் உள்ளிட்ட நீர்நிலைகளை இணைக்கும் பணிகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போதுதான் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்ய 30 நாட்கள் ஆகும். அதற்கு முன்னதாக வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கேசாவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆறு துவங்குகிறது. முந்தைய காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலப்போக்கில் பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறையினரின் அலட்சியத்தாலும், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, ஏரி ஆக்கிரமிப்பு ஆகிய காரணங்களாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை.

இதற்கிடையே, அவ்வப்போது பெய்யும் மழை நீரும் கடலுக்குள் சென்று வீணாகியது. இதனால் மழை பெய்தும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நிலத்தடி நீர்மட்டமும் உயராததால், மழைநீரை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. கல்லாறில் வரும் தண்ணீர் எப்போதும் கொற்றலை ஆற்றுக்கு செல்லும் வகையில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. கூவம் ஆற்றுக்கு பிரியும் இடத்தில், 16 ஷட்டர்கள் மூடப்பட்ட நிலையில் இருக்கும். கொற்றலை ஆறு வழியாக செல்லும் நீர் பூண்டி மற்றும் செங்குன்றம் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. பூண்டி மற்றும் செங்குன்றம் ஏரியில் நீர் நிரம்பிய பின்னரே கூவம் ஆற்றில் உள்ள மதகுகள் திறக்கப்படும்.
இந்த தண்ணீர் பேரம்பாக்கம், அதிகத்தூர், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம், பருத்திப்பட்டு, திருவேற்காடு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக 72 கி.மீ., தூரம் சென்று சென்னை நகருக்குள் நுழைந்து நேப்பியர் பூங்கா அருகே கடலுக்குள் செல்கிறது. சென்னை நகரில் கூவம் ஆறு என்றால் சாக்கடை என்பது வேறு விஷயம்.

இதில், ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள அணைக்கட்டில் இருந்து புதுச்சத்திரம், நேமம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்ல வசதியாக கிளை ஆறு பிரிகிறது. மேலும், கூவம் ஆற்றில் இருந்து 22 கால்வாய்கள் பிரிகின்றன. இக்கால்வாய்கள் வழியாக 22 ஏரிகளின் உபரிநீர் கூவம் ஆற்றுக்கு வரும். தற்போது இந்த நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளது. கூவம் ஆற்றுப்பாசனம் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்த ஆற்றில் நரசிங்கபுரம், பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, அதிகத்தூர், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மணல் திருட்டு அதிகளவில் நடந்துள்ளதால், ஆற்றில் மரங்கள் வளர்ந்து பாலைவனம் போல காட்சியளிக்கிறது. இவ்வாறு தொடரும் மணல் திருட்டாலும், ஏரிகளின் உபரிநீர் கூவம் ஆற்றுக்கு வரும் வகையில் இருந்த 22 ஏரிகளின் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பினாலும் இந்த ஆறு, கனமழை பெய்தாலும் வறண்டு கிடக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகளின் மாவட்டம் என்றும், தஞ்சை டெல்டா  மாவட்டத்துக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் என்றும் சிறப்புப் பெற்றது. அத்தகைய சிறப்பு பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியதும் சிறியதுமாக 1942 ஏரிகள் உள்ளன.  இவற்றில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் தாமல் ஏரி, தென்னேரி ஏரி, உத்திரமேரூர் ஏரி, பெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, கொளவாய் ஏரி, பாலூர் ஏரி, மணிமங்கலம் ஏரி, பி.வி.களத்தூர் ஏரி, காயார் ஏரி, மானாமதி ஏரி, கொண்டங்கி ஏரி, சிறுதாவூர் ஏரி, தையூர் ஏரி, மதுராந்தகம் ஏரி, பல்லவன்குளம் ஏரி ஆகிய 16 பெரிய ஏரிகள் உள்பட 912 ஏரிகளும்,  ஒன்றிய ஊராட்சிகளின் பராமரிப்பில், 1103 ஏரிகளும் உள்ளன. ஆனால் பல ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கூறுபோட்டு விற்று பல ஏரிகள் மாயமாகியுள்ளன.

அரசியல் குறுக்கீடு உள்ளது என்ற ஒரு காரணத்தை திரும்ப திரும்பக் கூறி, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பது, அதிகாரிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. ஏரியை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி, மின் இணைப்பு பெறும் வரை, இந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என, தெரியவில்லை. மேலும், அரசு புறம்போக்கு நிலம் என தெரிந்தும், மின்வாரியம் மின் இணைப்பு கொடுப்பது ஏன்? உள்ளாட்சிகள் சாலை அமைத்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஏன்? அங்கு குடியேறுவோர்க்கு வருவாய் துறை குடும்ப அட்டையும், வாக்காளர் பட்டியலில் பெயரையும் சேர்ப்பது ஏன்? என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.  ஏரியை ஆக்கிரமிக்கும் விஷயத்தில், பொதுப்பணி மற்றும் வருவாய் துறையின் கீழ் மட்ட அதிகாரிகளும் பின்னணியில் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசர்களின் ஆட்சி நடைபெற்ற காலத்திலே நீர் ஆதாரத்தைப் காக்கும் வகையில் குளம், குட்டை, ஏரி, கால்வாய்களை வெட்டினர். இதனால் குடிநீர், விவசாயம் மட்டுமன்றி கால்நடைகளுக்கும் பயன்பட்டது. நீர் வரத்துக் கால்வாய்கள் மூலம் ஏரி, குளம் மட்டுமல்லாது கோயில்களிலும் குளம் வெட்டி நீரை சேமித்தனர். காஞ்சிபுரத்தைப் பொறுத்த வரையில் இறையன்பு கலெக்டராக  இருந்தபோது அனைத்துக் கோயில் குளங்களும் தூர் வாரப்பட்டு வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. இதனால் மழைநீர் சேகரிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச்  மாதம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 1516 ஏரிகளைத் தூர்வார 100 கோடியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால்  இந்த குடிமராமத்துத் திட்டத்தையும் முறையாகச் செயல்படுத்தாமல் ஏரிகளில் உள்ள முள்புதர்களை வெட்டிவிட்டு இயந்திரங்களைக் கொண்டு ஓரிரு நாட்களில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டு கணக்கு காட்டி வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

புகார் அளிக்க
சென்னை
லலிதா, ஆணையாளர் (பொறுப்பு) ரிப்பன் மாளிகை, சென்னை. தொலைபேசி எண் : 044-25369444.
காஞ்சிபுரம்
பொன்னையா,மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம். தொலைபேசி எண் : 044-27237433.
திருவள்ளூர்
மகேஸ்வரி ரவிக்குமார்,மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர். தொலைபேசி எண் : 044-27661600.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

 • 17-06-2019

  17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்