SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசின் கொள்கையால் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ள தீப்பெட்டி தொழில்

2018-10-14@ 02:10:00

வேலூர்:  ஆட்கள் கிடைக்காமை, அதிகாரிகள் காட்டும் கெடுபிடிகள், தேவையற்ற வரிவிதிப்பு, மூலப்பொருட்கள் மீதான விலை உயர்வும், ஆள் பற்றாக்குறை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளின் கெடுபிடி உள்ளிட்ட காரணங்களால் கொஞ்சம், கொஞ்சமாக நசிந்து வந்த தீப்பெட்டி தொழில் இன்று ஜிஎஸ்டி வரி விதிப்பால் மேலும் நசிந்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் முதலாவதாக 1923ல் சிவகாசியில் தீப்பெட்டித் தொழில் அறிமுகமானது. அடுத்த சில மாதங்களில் இத்தொழில் குடியாத்தத்தில் தொடங்கப்பட்டது. குடியாத்தம் பகுதிகளில் 780 சிறிய, பெரிய தீப்பெட்டி தொழிற்சாலைகள் குடியாத்தம் பகுதியில் இயங்கி வந்தன. தற்போது வெறும் 80 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முன்பு இத்தொழிலில் 30 ஆயிரம் பேர் வரை நேரடி மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பை பெற்றிருந்தனர். இன்று நேரடியாக 1,050 பேரும், மறைமுகமாக 1,500 பேரும் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

 குடிசை தீப்பெட்டி தொழிலை தொடங்க சுமார் 1200 சதுர அடி கட்டடமும், ஒரு லட்சம் ரூபாய் முதலீடும் போதுமானது. இதனால் குறைந்தபட்சம் 20 பேருக்கு வேலை கொடுக்கலாம். இதன் அடிப்படையில் 2010ல் இந்தியாவிலேயே தமிழகத்தில் குடியாத்தத்தில் பொது பயன்பாட்டு மையம் கன்சார்டியம் அமைக்கப்பட்டது. இதில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 25 பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். குடியாத்தத்தில் தொடங்கப்பட்ட பிறகுதான் சாத்தூர், விருதுநகர், கழுகுமலை, கோவில்பட்டி, வில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களில் கன்சார்டியங்கள் தொடங்கப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரத்தின் ஒரு பகுதியில் குச்சிகளை கொட்டினால், அதுவே குச்சிகளை பாலிஷ் செய்து, அதில் மெழுகு பதித்து, மருந்து தோய்த்த தீக்குச்சிகளை வெளியே தள்ளும்.

கன்சார்டியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், தங்கள் தேவைக்கேற்ப தீக்குச்சிகளை எடுத்துச் சென்று பெட்டிகளில் அடைத்து தங்கள் நிறுவன லேபிள்களை ஒட்டி விற்பனைக்கு அனுப்புவர். தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முழு இயந்திர உற்பத்தி தீப்பெட்டி தொழிலுக்கு இதுவரை விதித்திருந்த 28 சதவீத வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது. 12 சதவீதமாக இருந்த பகுதி இயந்திர உற்பத்தி தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுதி இயந்திர தீப்பெட்டித்தொழில் முழுமையான இயந்திரமய தீப்பெட்டி தொழிலுக்கு நிகராக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருளான மரக்குச்சி மீது இதுவரை இல்லாமல் இப்போது வரி போடப்பட்டுள்ளது. மெழுகு மீதான 8 சதவீத வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கந்தகம், குளோரைட் மீதான வரியும் உயர்ந்துள்ளது. தீப்பெட்டித் தயாரிக்க பயன்படுத்தப்படும் அட்டை மீதான வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலில் திடீரென சரிவு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கை மூலம் முழு இயந்திர உற்பத்தி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தித்திறனை அதிகரித்து சந்தைக்கு அனுப்புவர். அவர்களது யானை பலத்துக்கு ஈடாக சிறிய அளவில் நடைபெறும் பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் போட்டியிட வழியின்றி தங்கள் தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். இதனை தவிர்க்க பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கு விதித்துள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கதவடைப்பு போராட்டம் தொடங்கினர். மேலும், பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் தமிழகத்தில் குடிசைத்தொழில் பட்டியலில் உள்ள பகுதி இயந்திர தீப்பெட்டி தொழில் கேள்விக்குறியாகியுள்ளது.

இத்தொழிலை மரணத்தில் இருந்து மீட்டெடுக்க மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து பகுதி இயந்திர குடிசைத்தீப்பெட்டி தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர்கள் மற்றும் இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரும், கன்சார்டியம் நிர்வாக இயக்குனருமான வி.ஜி. தனபால், கன்சார்டியம் சேர்மன் சடகோபன் ஆகியோரிடம் கேட்டபோது, ‘முழுமையான இயந்திரமய தீப்பெட்டித்தொழிலுக்கு ஈடாக பகுதி இயந்திரமய குடிசை தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீத வரி நியாயமில்லை. எங்களுக்கு வரியை குறைக்க வேண்டும். அதேநேரத்தில் மூலப்பொருள்கள் மீதான விலை, வரி, உயர்வு, ஆள் பற்றாக்குறை, கூலி பற்றாக்குறை போன்ற காரணங்களால் இத்தொழில் பெரிதும் நசிந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. குடிசை தீப்பெட்டி தொழிலுக்கு விதித்துள்ள 5 சதவீத வரியை மத்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்