SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் 67,654 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று 4வது இறுதி கட்ட சிறப்பு முகாம்

2018-10-14@ 02:09:01

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இன்று 4வது இறுதி கட்ட சிறப்பு முகாம் 67,654 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. கடந்த மூன்று முகாம்களில் மட்டும் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 11.25 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 01.01.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி வெளியிடப்பட்டது. elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 1-9-2018 முதல் 31-10-2018 வரை 2 மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், நீக்கம், முகவரி மாற்றம் செய்யலாம். அலுவலக நாட்களில், உள்ளாட்சி அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் காலை முதல் மாலை வரை வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரியிடம் விண்ணப்பத்தை பெற்று பெயரை சேர்த்துக் கொள்ளலாம். மேலும், அலுவலகம் செல்பவர்களுக்கு வசதிக்காக, 9.9.2018, 23.9.2018, 7.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, முதல் சிறப்பு முகாம் கடந்த மாதம் 9, 23 மற்றும் அக்டோபர் 7ம் தேதி என தமிழகம் முழுவதும் 3 கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த மூன்று முகாம்களிலும் சேர்த்து  மொத்தம்  11,24,710 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் பெயர் சேர்க்க 8,62,373  பேரும், நீக்கம் செய்ய 77,879 பேர், திருத்தம் செய்ய 1,07,418 பேர், முகவரி  மாற்றம் செய்ய 11,24,710 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், 4வது இறுதி கட்ட சிறப்பு முகாம் இன்று (14ம் தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் முழுவதும் உள்ள 67,654 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்குச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ரேஷன் கார்டு, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது, ஆதார் கடிதம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை முகவரி சான்றாக சமர்ப்பிக்க வேண்டும். 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை கட்டாயம் வழங்க வேண்டும். வயது சான்றாக பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது பள்ளி சான்றிதழின் நகல் அளிக்கலாம். www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்வது உள்ளிட்ட விண்ணப்பித்த 11.25 லட்சம் பேரின் விண்ணப்பங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து விண்ணப்பித்தவர்களின் வீடு வீடாக சென்று களஆய்வு செய்தபிறகு புதிய பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களும், இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களுக்கு சென்று தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளலாம். இல்லையென்றால் புதிதாக விண்ணப்பம் செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்