SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை தொடங்குவது எப்போது?

2018-10-14@ 02:04:14

* சிபிஐ அதிகாரிகள் விளக்கம்
* மேல்முறையீடு செய்ய அரசு முடிவு
* உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு

சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் கிடைத்ததும் விசாரணை தொடங்கப்படும் என்று சிபிஐ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய திமுகவும் திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் வரையிலான 70.20 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலைக்காக 1,515 கோடி திட்ட ஒதுக்கீடு, திருநெல்வேலி - செங்கோட்டை- கொல்லம் வரையிலான 45.64 கிமீ தூரத்துக்கு நான்கு வழிச்சாலை திட்டத்திற்கான 900 கோடி ஒதுக்கீடு, ராமநாதபுரம்,

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் கோட்டங்களில் சாலை பராமரிப்பு பணிகளுக்காக 2000 கோடி உள்ளிட்ட ஒப்பந்தங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது சம்பந்தி பி.சுப்பிரமணியம் மற்றும் நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், பினாமி எஸ்.பி.கே.நாகராஜன் செய்யாத்துரை ஆகியோருக்கு வழங்கியுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி நெடுஞ்சாலை துறை மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், ‘ இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசுத் தரப்பு வாதமும் அதே நிலையில்தான் உள்ளது. மாநிலத்தின் முதல்வர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படும்போது, குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதுபோல் செயல்படவில்லை. இதுவே நீதிமன்ற அவமதிப்புதான். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி நேர்மையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றம் செய்வது தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களும் கடை பிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாழ்க்கைக்கு வரும்போது அனைத்து மக்களிடமும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதுவும் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த நேர்மையை கண்டிப்பாக கடை பிடிக்காமல் ஊழலில் சிக்கினால் மக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.

எனவே, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்கள், சான்றாவணங்கள், விசாரணையில் சேகரித்த பொருட்கள் ஆகியவற்றை தென் மண்டல சிபிஐ இணை இயக்குநரிடம் ஊழல் தடுப்புத் துறை ஒரு வாரத்திற்குள் தர வேண்டும். அதன் பின்னர் எஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரியை விசாரணை அதிகாரியாக சிபிஐ இணை இயக்குநர் நியமிக்க வேண்டும். விசாரணை அதிகாரி, இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், உலக வங்கி அதிகாரிகள், திட்டத்தில் தொடர்புடையவர்கள், மனுதாரர் உள்ளிட்டோரிடம் ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்திற்குள் நடத்த வேண்டும்.விசாரணையில் மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்படி சிபிஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து சிபிஐ உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தான் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் நகல் எங்களுக்கு கிடைத்ததும், சிபிஐ இயக்குநருடன் ஆலோசனை நடத்தப்படும். அதன்பின் விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார். விசாரணை அதிகாரியை இயக்குநர்தான் முடிவு செய்வார். குட்கா வழக்கில் சென்னை அதிகாரிகள் விசாரிக்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் புகார் எழுந்ததால் டெல்லி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இந்த வழக்கில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டவுடன் விசாரணை ஒரு வாரத்தில் துவங்கும்’’ என்றார். அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், தமிழக அரசு அல்லது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தால், தங்களிடம் கேட்காமல் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்று கூறி திமுகவும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்