பொது அதிகாரத்தை எழுதும் போது 30 நாட்களுக்குள் சான்று வேண்டும்: அனைத்து சார்பதிவாளர்களுக்கும் ஐஜி சுற்றறிக்கை
2018-10-14@ 01:59:16

சென்னை: பொது அதிகாரத்தை பயன்படுத்தி எழுதி கொடுக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் முன்பே பொது அதிகார முதல்வர் உயிருடன் உள்ளார் எனச் சான்று அளிக்க வேண்டும் என்று அனைத்து சார்பதிவாளர்களுக்கும் ஐஜி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 1.2.2013க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பொது அதிகார ஆவணத்தின் அடிப்படையில் முகவரால் எழுதி கொடுக்கும் ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் போது, பொது அதிகாரம் அளித்த முதல்வர் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்றும் தாக்கல் செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொது அதிகாரங்களின் வழி முகவரால் எழுதி கொடுக்கப்படும் ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் போது பதிவு அலுவலர்கள் முதல்வர் உயிருடன் உள்ளார் என்ற சான்றை ஆவணப்பதிவு தேதியன்று பெற்று வழங்க கோருவதாகவும், இதனால் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுவதாகவும் பெருமளவு புகார்கள் இவ்வலுவலகத்திற்கு வரப்பெற்றுள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவு படி ஆவணம் எழுதி கொடுக்கப்பட்ட நாளை கணக்கில் கொண்டு அதில் இருந்து 30 நாட்களுக்கு முன்பு வரை முதல்வர் உயிருடன் உள்ளார் என்ற சான்றை பெற்று அளிக்கலாம் என சுற்றறிக்கையை மாற்றி அமைத்துள்ளது. சுற்றறிக்கையில் கூறப்பட்ட ஆவணம் தாக்கல் செய்யும் நாளுக்கு பதில் ஆவணம் எழுதி கொடுக்கப்பட்ட நாளை முதன்மையாக கொண்டு உயிருடன் உள்ளார் என்ற சான்றின் காலவரையை கணக்கிட்டுள்ளது. அதன்படி ஆவணம் எழுதி கொடுக்கப்பட்ட தேதிக்கு முன் 30 நாட்களுக்குள் இச்சான்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்பாக வழங்கப்பட்டிருந்தால் அச்சான்று செல்லத்தக்கதல்ல. உதாரணமாக பொது அதிகார ஆவணம் பதிவு செய்த தேதி 14.5.2018. பொது அதிகாரத்தை பயன்படுத்தி ஆவணம் எழுதப்பட்ட நாள் 14.7.2018.
ஆவண பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்ட நாள் 25.7.2018. இந்நிகழ்வில் உயிருடன் உள்ளார் என்ற சான்று 14.6.2018 தேதியில் இருந்து 25.7.2018 தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் பெற்றால் போதுமானது. இவ்வாறு சார்பதிவாளர்கள் செயல்படுவதை மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணை பதிவுத்துறை தலைவர்கள் கண்காணிக்கவும் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி பதிவு அலுவலர்கள் செயல்படுவதை உறுதிப்படுத்தவும் கோரப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
போட்டி தேர்வுக்கு தயாராக புதிய வலைதளம்
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனருக்கு விருது
கம்பெனி அலுவலகத்தில் தீ விபத்து
மத நம்பிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது கருத்து சுதந்திரம் சவாலை எதிர்கொள்கிறது : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
அரசு வேலை பெற பணம் கொடுத்தாலும் நடவடிக்கை : பொது அறிவிப்பு வெளியிட டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு நகரும் வண்டி முதல்வர் எடப்பாடி வழங்கினார்