SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயிலில் ஓட்டை போட்டு ₹5.78 கோடி கொள்ளை ம.பி. கும்பலை சேர்ந்த 2 பேர் சென்னையில் கைது

2018-10-14@ 00:55:32

* 2 ஆண்டுகளுக்கு பின் சுற்றிவளைப்பு
* பரபரப்பு வாக்குமூலம்
* மேலும் 10 பேருக்கு வலைவீச்சு
சென்னை: சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் துளை போட்டு ரூ. 5.78 கோடி  கொள்ளையடித்த வழக்கில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேரை சென்னையில்  சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.  கொள்ளையடித்தது குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ரூ.342 ேகாடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டி இணைக்கப்பட்ட ரயில் இரவு 9.05 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்டது. அதிகாலை 3.55 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. காலை 10.55 மணிக்கு  வங்கி அதிகாரிகள் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது ரூ.5.78 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது. ரயிலின் மேற் கூரையில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஏடிஜிபி அம்ரேஸ் பூஜாரி  உத்தரவின்பேரில் ஐஜி ஸ்ரீதர், எஸ்பி ராஜேஸ்வரி ஆகியோரது தலைமையில் கூடுதல் எஸ்பி செந்தில்குமரன், டிஎஸ்பி கிருஷ்ணன், எஸ்.ஐ.க்கள் சாஸ்தா, இந்துசேகரன், சாமிக்கண்ணு, ஏட்டு தண்டபாணி ஆகியோரைக் கொண்ட  தனிப்படை அமைக்கப்பட்டது.  ரயிலில் நடந்த கொள்ளையை வைத்து, எந்த கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். சென்னை மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த கும்பலுக்கும் இந்த கொள்ளைக்கும்  தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. பழைய குற்றவாளிகளின் கைரேகைகளை ஒப்பிட்டுப் பார்த்து வந்தனர். அப்போதும் குற்றவாளிகள் குறித்த தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
 வடமாநில கொள்ளையர்களின் கைரேகைகளை  ரயிலில் கிடைத்த கைரேகைகளை ஒப்பிட்டுப் பார்க்க தனிப்படை, மத்தியப் பிரதேசம் உஜ்ைஜனி அருகில் உள்ள குணா மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாருடன் ஆலோசனை  நடத்தினர். அப்போது, வெளி மாநிலங்களில் போய் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களது கைரேகைளை ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது, மோஹர்சிங் மற்றும் கூட்டாளிகளின்  கைரேகைகளும், இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களின் கைரேகைகளும் ஒன்றாக இருந்தன. இதனால் இந்த கும்பல்தான் கொள்ளையில் ஈடுபட்டனர் என்பதை போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

அதில் இந்தக் கும்பலின் தலைவன் மோஹர்சிங், தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிறையில் இருப்பது தெரியவந்தது. கொள்ளை வழக்கில் அவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்று தெரியவந்தது. இதனால் இவனது  கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது மோஹர்சிங்கின் சொந்த ஊரில் போலீசார் விசாரித்தபோது, கொள்ளைக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை மக்களிடம் கொடுத்து மாற்றியது  தெரியவந்தது. இதனால் கூட்டாளிகளைப் பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் இறங்கினர். இந்தநிலையில், இந்த கொள்ளையில் ஈடுபட்ட சிலர் சென்னைக்கு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், ரட்லத்தைச் சேர்ந்த தினேஷ்(38), ரோஹன்பார்தி(29) ஆகிய 2 பேரையும் போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மோஹர்சிங்குடன் சேர்ந்து ரயில் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் போலீசில் பரபரப்பு  வாக்குமூலம் அளித்துள்ளனர்.  அவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்: ராஜஸ்தானில் பாவேரியா என்ற கொள்ளை கும்பல் உள்ளது. அது ஒரு இனத்தைச் சேர்ந்த கும்பல். அதேபோல நாங்கள் பார்த்தி என்ற இனத்தைச்  சேர்ந்தவர்கள். எங்கள் தொழிலே கொள்ளையடிப்பதுதான். நாங்கள் மோஹர்சிங்கின் தலைமையில் செயல்பட்டு வருகிறோம். கொள்ளையடிப்பதற்கு முன்னர், தகவல்களை முழுமையாக சேகரிப்போம். குறிப்பாக ரயில் நிலையம்,  தண்டவாளம், சாலையோரம் கூடாரங்களை அமைத்து தங்குவோம். கட்டிட வேலை, பலூன், பொம்மை வியாபாரம் செய்வதுபோல் நகர் முழுவதும் தகவல்களை சேகரிப்போம். பின்னர் கொள்ளையடிப்போம்.

 அதேபோலத்தான், எங்களுடைய ஆட்கள் இந்த ரயிலில் கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுக்கள் செல்வதை தெரிவித்தனர். ேசலத்தில் இருந்து விருத்தாச்சலம் வரை டீசல் மூலம்தான் ரயில் இயக்கப்படுகிறது. அதன்பின்னர்  மின்சாரம் மூலம் ரயில் இயக்கப்படுகிறது. இதனால் சேலம், விருத்தாச்சலம் இடையில் கொள்ளையை நடத்தி முடிக்க திட்டமிட்டோம். மேலும், ரயில் மீது ஏறி அமர்ந்து ஓட்டை போடவும் முடிவு செய்தோம். அதன்படி நாங்கள் 5 பேர் சின்னசேலம் ரயில் நிலையத்தில்  ரயில் நிற்கும்போது, மேற் கூரையில் அமர்ந்து கொண்டோம். பேட்டரியால் இயங்கும் வெல்டிங் மிஷின் மூலம் ரயிலின் மேற் கூரையை துளையிட ஆரம்பித்தோம். விருத்தாச்சலம் செல்வதற்குள் மேற்கூரையை துளையிட்டோம்.  2 பேர் மட்டும் துளையின் வழியே உள்ளே இறங்கி, மரப்பெட்டிகளை உடைத்து, பணக் கட்டுகளை எடுத்து, லுங்கியில் சுற்றி வைத்துக் கொண்டோம்.விருத்தாச்சலம் ரயில்நிலையம் வந்தவுடன் தண்டவாளம் அருகே எங்களது கூட்டத்தினர் காத்திருந்தனர். அவர்களிடம் பணத்தைக் கொடுத்து விட்டு தப்பி விட்டோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்தனர்.மேலும், இந்தக் கும்பலில் மோஹர்சிங்குடன் மேலும் சிலர் குணா மாவட்ட சிறையில் உள்ளனர். அவர்களை காவலில் எத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 10  குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்களை  மத்தியப்பிரதேசம் அழைத்துச் சென்று கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்தக் குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்