SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேஸ் - ஹோல்டர் பொறுப்பான ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 295

2018-10-13@ 00:55:19

ஐதராபாத்: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில் ரோஸ்டன் சேஸ், கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்துள்ளது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் கெமார் ரோச் சேர்க்கப்படவில்லை. இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் அறிமுகமானார். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடும் 294வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. கிரெய்க் பிராத்வெய்ட், கியரன் பாவெல் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சை தொடங்கினர். அறிமுக வேகம் தாகூர் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில், துரதிர்ஷ்டவசமாக காயம் அடைந்து பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய பிராத்வெய்ட் - பாவெல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 32 ரன் சேர்த்தது. பாவெல் 22 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ஜடேஜா வசம் பிடிபட்டார்.

பிராத்வெய்ட் 14 ரன் எடுத்து குல்தீப் சுழலில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்த ஷாய் ஹோப் 36 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் பெவிலியன் திரும்ப, ஹெட்மயர் 12 ரன் மற்றும் அம்ப்ரிஸ் 18 ரன் எடுத்து குல்தீப் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 38.5 ஓவரில் 113 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், சேஸ் - டோவ்ரிச் ஜோடி 6வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 69 ரன் சேர்த்தது. டோவ்ரிச் 30 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து சேஸ் உடன் இணைந்த கேப்டன் ஹோல்டர் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய வீரர்களின் பொறுமையை சோதித்த இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்து மிரட்டியது.

ஹோல்டர் 52 ரன் (92 பந்து, 6 பவுண்டரி) விளாசி உமேஷ் வேகத்தில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்துள்ளது (95 ஓவர்). சேஸ் 98 ரன் (174 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), பிஷூ 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் குல்தீப், உமேஷ் தலா 3, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மைதானத்தில் ஊடுருவிய ரசிகரால் பரபரப்பு...
ஐதராபாத்தில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று, போலீசாரின் பலமான பாதுகாப்பு வளையத்தையும் மீறி மைதானத்துக்குள் நுழைந்த ஒரு ரசிகர் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியை கட்டிப் பிடித்ததுடன் முத்தமிடவும் முயன்றார். அவரிடம் இருந்து விலகிச் சென்ற கோஹ்லி, பின்னர் செல்பி எடுத்து கொள்ள அனுமதித்தார். ஏற்கனவே ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போதும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்திய வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்