SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் : கைக்குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

2018-10-12@ 18:19:07

ஆவடி: கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படுவதை கண்டித்து கைக்குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். மேலும் ஜேசிபி இயந்திரத்தை அடித்து உடைத்தனர். போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அடுத்த கொரட்டூர் ஏரியை சுற்றி கள்ளிக்குப்பம், கருக்கு, மேனாம்பேடு, உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு குடிநீர், சாலை, மின்சார வசதி, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள  அட்டை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது. 25 ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அம்பத்தூர் வருவாய் துறையினர், கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுத்தனர்.

அப்போது, மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர், கங்கை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரியின் மத்தியில் 598 வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 முறை நோட்டீஸ் வழங்கினர். இருந்தபோதிலும் வீடுகளை காலி செய்ய மறுத்து மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்க போவதாக அறிவித்தனர். இதையடுத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், 3 தினங்களுக்கு முன்பு அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆக்கிரமிப்பாளர்களில் முக்கிய பிரமுகர்களுடன் சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம், அம்பத்தூர் ஆர்டிஓ பன்னீர்செல்வம், தாசில்தார் சிராஜ்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், கோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்துள்ளோம். நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று கலெக்டர் கூறினார். அதற்கு மறுத்து தெரிவித்து, வீடுகளை காலி செய்ய மாட்டோம் என்று கூறினர். இந்நிலையில் நேற்று மதியம் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், வீடுகளை காலி செய்ய கூடாது என்று தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள், ‘இன்று (12ம் தேதி) முதல் வீடுகளை இடிக்க உள்ளோம்’ என்று கூறினர். இன்று காலை 9.30 மணியளவில் வருவாய் துறை, பொதுப்பணித்துறையினர், அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர் பகுதிக்கு வந்தனர்.

அவர்களுடன் 2 துணை கமிஷனர், 7 உதவி கமிஷனர், 20 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக வந்தனர். 25க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரத்துடன் ஊழியர்களுடன் வந்தனர். அவர்கள், ஏரியில் உள்ள வீடுகளை இடிக்க முற்பட்டனர். இதை அறிந்து உண்ணாவிரதத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் ஓடி வந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். வீடுகளை இடிக்க கூடாது என்று பெண்கள், கைக்குழந்தையுடன் ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தினர். ஒருசிலர், ஜேசிபி இயந்திரம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்தது. அதற்கு பிறகும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை தொடர்ந்தனர்.

இதனால் பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். ஒருசிலர் வீடுகளை உட்புறமாக பூட்டி கொண்டு கதவை திறக்க மறுத்தனர். சிலர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சில பெண்கள், குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரேம் ஆன்ந்த் சின்கா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆக்கிரமிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு பிறகும் ஆக்கிரமிப்பு இடிக்கும் பணி தொடர்ந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்