SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி கொள்ளை லாபம்: அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி: மு.க.ஸ்டாலின் கண்டனம்

2018-10-12@ 02:43:40

* கோல் இந்தியா’ விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாத்தனமாகவும் கைலாகுத்தந்திரமாகவும் தெரிகிறது.
* காற்றாலை மின்சார ஊழல்” “நிலக்கரி கொள்முதல் ஊழல்” “மின்சாரம் கொள்முதல் ஊழல்” என்று மெகா ஊழல்களின் “நரகபூமியாக” மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக் கொண்டிருக்கிறது.

சென்னை: அரசுப் பணத்தை சூறையாட வசதியாக டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு, கொள்ளை முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலமெங்கும் மின்வெட்டு வரப் போகிறது என்று பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் முன் கூட்டியே எச்சரிக்கை செய்தும், அதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஒரு செயற்கையான நிலக்கரிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி இப்படியொரு கொள்ளை லாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அதிமுக அரசும், அமைச்சர் தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு 5008.45 ரூபாயும்,  ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவுக்கு டன்னுக்கு 5098 ரூபாயும் கொடுப்பதற்கு அதிமுக அரசு ஒப்புக்கொண்டு, டெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. ‘கோல் இந்தியா’ விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாத்தனமாகவும் கைலாகுத்தந்திரமாகவும் தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் தங்கமணி “மின்பகிர்மானக் கழகத்திடம் போதிய நிலக்கரி கையிருப்பு இருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை” என்று கூறினார். ஆனால் முதலமைச்சரோ “நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது. உடனே நிலக்கரி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரியுங்கள்” என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார். மின் பகிர்மானக்கழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை இருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே முரண்பாடுள்ள. ள்ள நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு வந்தது?.
அதானியின் கம்பெனிகள் ஏற்கனவே தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கம்பெனிகள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடக்கும் போது, மீண்டும் அதே கம்பெனியிடமிருந்து நிலக்கரி வாங்குவது ஏன்? தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும், அரசின் மின்துறைச் செயலாளரும் எப்படி டெண்டர் இல்லாமல் நிலக்கரி வாங்க ஒப்புக் கொண்டார்கள்? என பல்வேறு கேள்விகள் வரிசையில் நிற்கின்றன.

அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. “காற்றாலை மின்சார ஊழல்” “நிலக்கரி கொள்முதல் ஊழல்” “மின்சாரம் கொள்முதல் ஊழல்” என்று மெகா ஊழல்களின் “நரகபூமியாக” மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக் கொண்டிருக்கிறது. நிலக்கரி கொள்முதல் ஊழல் பற்றி மத்திய தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டினாலும், எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும், “நாங்கள் திருந்தவே மாட்டோம்” என்று பிடிவாதமான முடிவு எடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

ஆகவே டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள் மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை அ.தி.மு.க அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். ஆளத் தெரியாதவர்கள் அரசாங்கப் பணத்தை சூறையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த கொள்ளைக்குத் துணை போகும் அதிகாரிகளும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய கால கட்டம் வரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினுடன் என்.ஆர். தனபாலன் சந்திப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். அங்கு அவரை ஏராளமான திமுகவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்தித்து பேசினார். பின்னர், என்.ஆர்.தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் எந்த பணிகளும் நடைபெறவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. கோபாலபுரத்தில் பார்வையாளர்களை மு.க.ஸ்டாலின் சந்திப்பது கருணாநிதியின் வழியை அவர் பின்பற்றுவதையே காட்டுகிறது. திருப்பரங்குன்றம், திருவாரூரில் இடைத்தேர்தலை உடனே அறிவிக்க வேண்டும். மழையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்தது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்