SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

2018-10-12@ 00:06:31

ஐதராபாத்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதில்,  இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா  வெறும் மூன்றே நாளில், இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. அறிமுக வீரர் பிரித்வி ஷா, கேப்டன் கோஹ்லி அபார சதம்  அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது.வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைப் பொறுத்த வரையில், அனுபவமும் இல்லை, தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவானவர்களாகவும் இல்லை.  இதனால், நம்பர்-1 அணியான இந்தியாவுக்கு எதிராக தாக்குபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், அனுபவ  பந்துவீச்சாளர் ரோச் இருவருமே முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. இதில், ஹோல்டர் இன்னும் 100 சதவீதம் காயத்திலிருந்து  குணமடையவில்லை. ஹோல்டரும், ரோச்சும் ஐதராபாத் டெஸ்டில் களமிறங்கினாலும் கூட  அவர்களால் இந்திய அணியை எந்தளவுக்கு  கட்டுப்படுத்த முடியும் என்பது கேள்விக்குறியே.

இதற்கிடையே, வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியலும் காயமடைந்துள்ளதால் 2வது டெஸ்டில் அவர் களமிறங்குவது சந்தேகமாக உள்ளது. சுழல்பந்துவீச்சாளர் பிஷூ பெரிய அளவில் சோபிக்காததால் 2வது டெஸ்டில் கழற்றிவிடப்பட வாய்ப்புள்ளது. பேட்டிங்கிலும் அந்த அணி  வலுவாக இல்லாததால், டிரா செய்வதே அவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். அதே நேரத்தில் சொந்த மண்ணில் இந்திய அணி முழு பலத்துடன்  உள்ளது. முதல் டெஸ்டில் வென்ற அதே கூட்டணியே 2வது டெஸ்டிலும் களமிறங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.முதல் டெஸ்டில் அறிமுக வீரராக சதம் அடித்து பல சாதனை படைத்த பிரித்வி ஷா இம்முறையும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளார்.  அவருடன் கோஹ்லி, புஜாரா ஆகியோரும் ரன்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். சமீபகாலமாக திணறி வரும் துணைக்கேப்டன் ரகானே இம்முறையாவது இழந்த பார்மை மீட்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது. சுழல் பந்து வீச்சில்  ஜடேஜா, குல்தீப், வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கு முன் 2011ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 0-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான  2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்றது. பின்னர் 2013ல் தென் ஆப்ரிக்காவிடம் தோற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 டெஸ்டையும் தலா 3 நாட்களிலேயே வென்றது. எனவே,  இந்தியாவுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் சரணடையும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐதராபாத்தில் தாக்குபிடிக்குமா என்பதை பார்க்கலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்