SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இட்லி, தோசைக்கு ஏற்ற அரிசி!

2018-10-09@ 14:58:30

பசுமைப் புரட்சியின் இன்னொரு முகம் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். பசுமைப் புரட்சியால் நம் பஞ்சம் தீர்ந்தது. சோற்றுப் பிரச்சனை ஓரளவு தீர்ந்தது. ஆனால், கடந்த அரை நூற்றாண்டுகளாக நவீன நெல், கோதுமை ரகங்களையும் செயற்கையான வேதி உரங்களையும் பூச்சிகொல்லிகளையும் நிலத்தில் கொட்டியதில் உருவான பாதிப்புகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. சூழலியலில் மட்டும் அல்லாமல் வேறு பல விஷயங்களிலும் பசுமைப் புரட்சியின் விளைவாய் உருவான நவீன வேளாண்மையால் நாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். நீர் வளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி தனியே நூலே எழுதும் அளவுக்கு சிக்கல்கள் உள்ளன.


பாரம்பரிய நெல், கோதுமை ரகங்களைவிட நவீன ரகங்களுக்கு அதிகமான நீர் வளம் தேவை. இதனால் இருநூறு முதல் முன்னூறு சதவீதம் வரை அதிகமான நீர் தேவையை நாம் எதிர்கொள்ள நேரிட்டது. பாரம்பரிய கோதுமைப்பயிருக்கு பனிரெண்டு அங்குலம் நீர் தேவைப்படும் என்றால் கலப்பின ரகங்களுக்கு முப்பத்தாறு அங்குலம் தேவைப்பட்டது. இதனோடு கோதுமை, நெல் போன்ற பயிர்களையே திரும்ப திரும்ப ஆண்டு முழுதும் ஒரே வயலில் சாகுபடி செய்ததால் நீர் தேவை முன்பைப் போல் பத்து மடங்கு அதிகமாக உயர்ந்தது. இன்னொருபுறம் அரசு பெருகிவரும் நீராதாரங்களைக் கருத்தில் கொண்டு பெரிய பெரிய அணைகளை உருவாக்கியது.

வெள்ளங்களைக் கட்டுப்படுத்த என உருவாக்கப்பட்ட இவற்றால் காட்டு வெள்ளங்கள் ஏற்பட்டு பயிர்கள் பல்லாயிரக்கணக்கில் நாசமாகின. பெரிய அணைகள் மிகப் பெரிய பிற்போக்குத் தொழில்நுட்பம் என்று வேளாண் அறிஞர்களுமேகூட சொல்லும் நிலை உருவானது. நிலத்தடி நீரை நம்பியிருக்கும் விவசாய நிலங்களில் எல்லாம் நிலத்தடி நீரில் அளவு ஆண்டு தோறும் இரண்டு மூன்று அடி குறைந்துகொண்டே வந்தது. தற்போது தமிழகத்தின் பல இடங்களில் நிலத்தடி நீரின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. ஐந்து நதிகளின் பெயரால் மாநிலம் அமைந்திருக்கும் பஞ்சாபிலேயே தொடர்ச்சியான நெல், கோதுமை சாகுபடியால் கடந்த நாற்பதாண்டுகளில் நிலத்தடி நீர் சுமார் இரு நூறு அடி வரை குறைந்திருக்கிறது.

ரசாயன உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது நோய்களின் பெருக்கத்தை கடுமையாக அதிகரித்துள்ளது. பூச்சி மருந்துகளால் சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, சரும பாதிப்புகள் போன்ற தொந்தரவுகள் கிராமப்புறங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. வயல்களில் ரசாயன உரங்கள் போடுவதாலும் வேதியியல் பூச்சி மருந்துகள் தெளிப்பதாலும் இந்த வேலைகளைச் செய்யும் விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களில் பாடுபடுபவர்களுக்கும் இப்படியான நோய்கள் ஏற்படுகின்றன. ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் பயன்பாட்டால் அதில் விளையும் உணவுப் பொருட்களை உண்பவர்களுக்கும் மேற்சொன்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இன்று ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் இல்லாமல் உற்பத்தியாகும் உணவுப்பொருளே இல்லை எனலாம். அதிலும், முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவை எல்லாம் முழுமையாக ரசாயனத்தில் மூழ்கவைத்துத்தான் நம் வீட்டுக்கே வருகின்றன. இப்படியான உணவுகளை கடந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக உண்டதன் விளைவுதான் தோல் நோய், ஆஸ்துமா, அலர்ஜி, பார்கின்சன்ஸ் போன்றவை. கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் என்பது யாரோ ஒருவருக்கு வருவது என்பதாகத்தான் கேள்விப்பட்டிருப்போம். இன்றோ புற்றுநோய் என்பது ஏதோ தலைவலி, காய்ச்சல் என்பதைப் போன்ற நோயாக மாறிவிட்டது. உடலின் எல்லா பாகங்களிலும் புற்றுநோய் வருகிறது.

குறிப்பாக, குடல் புற்றுநோயும், மலக்குடன் புற்றுநோயும் மிகவும் அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவில் உள்ள ரசாயனங்கள்தான்.
பசுமைப் புரட்சியை முதலில் கொண்டுவந்த பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு ‘புற்றுநோய் விரைவு ரயில்’ ஒன்று தினசரி இயக்கப்படுகிறது. நாள்தோறும் சுமார் நூறு பேருக்கு மேல் இந்த ரயிலில் ஏறிச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்புகிறார்கள். எண்டோசல்பான் என்ற ரசாயன உரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு சூழலியல் ஆர்வலர்கள், மருத்துவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக எண்டோசல்பானை கேரளத்தின் காசர்கோட்டில் இருக்கும் முந்திரிக்காடுகளின் மேல் விண்ணிலிருந்து தெளித்ததால் அங்கு நிலமே மலடாகிவிட்டது.

அங்கு பிறக்கும் குழந்தைகள் பல உடல், மனக் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. மேலும், பருந்து போன்ற பறவைகள் அரியவகை உயிரினங்கள்
பட்டியலுக்குள் நுழைந்திருக்கின்றன. பூச்சிகொல்லிகளில் ஒருவகை அழியாத தன்மை கொண்டவை இதை, POPs அதாவது Persistent Organic Pollutants என்பார்கள். இந்த வகை பூச்சி கொல்லிகள் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் எவ்வளவு தொலைவு பயணித்தாலும் அழியாது நம் உணவுச் சங்கிலியிலேயே தங்கியிருக்கும். DDT, ஆல்ட்டிரின், லிண்டேன், என்ட்ரின், டை என்ட்ரின் போன்ற ரசாயனங்களை மேற்கத்திய நாடுகளில் தடைவிதித்திருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அவை இன்றும் தாராளமாகப் புழங்குகின்றன.

தொடர்ச்சியான பயன்பாட்டால் புற்றுநோயைக்கூட உருவாக்கும் மோசமான விஷம் இது. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட உரங்களையும், பூச்சிகொல்லிகளையும் இந்தியாவில் தாராளமாக நடமாடவிட்டிருக்கிறார்கள். நமது அரசும் அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதே இல்லை. இதன் பின்னணியில் பூச்சிகொல்லி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களின் மிகப்பெரிய லாபி இயங்குகிறது. அவர்கள் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து இப்படியான பூச்சி மருந்துகளை தடை செய்வது குறித்த விஷயங்களோ உரையாடல்களோ எழாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக முணுமுணுப்பாக எழும் எதிர்ப்புகளையும் மிகுந்த கவனமுடன் அமுக்கிவிடுகிறார்கள்.

இத்தனை ஆண்டு காலமாக பூச்சிகொல்லிகளைத் தெளிப்பதால் அந்தப் பூச்சிகள் ரசாயனங்களின் பாதிப்பை எதிர்கொள்வதற்கான பரிணாம வளர்ச்சியைப் பெற்று தங்களை தகவமைத்துக்கொண்டுள்ளன. இதனால், பூச்சிகளைக் கட்டுப்படுத்த இரண்டு, மூன்று வகையான மருந்துகளைக் கலந்து தெளிப்பது என்ற உத்தியை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். இதனாலும் சுற்றுச் சூழலும் ஆரோக்கியமும் மேலும் கெட்டுப்போகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் சுமார் இருபது லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். பசுமைப் புரட்சியால் உற்பத்தி அதிகரித்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது ஏன் நிகழ்கிறது. இங்குதான் இருக்கிறது பசுமைப் புரட்சி யாருக்கு லாபமானது என்கிற சூழ்ச்சி வலையின் முக்கிய கண்ணி.

பசுமைப் புரட்சியின் பலன்கள் பணக்கார விவசாயிகளை, நில உடமையாளர்களை மட்டுமே சென்றடைந்தது. இதனால், பெரிய மற்றும் சிறிய விவசாயிகள் இடையே இருந்த வித்தியாசம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. விதைகள், உரங்கள், பூச்சிகொல்லிகள், இடுபொருட்கள், ட்ராக்டர், மின்சாரம் என உற்பத்திப் பொருட்கள் நாளுக்கு நாள் விலையேற விவசாயிக்கு அந்த விலையேற்றத்தின் நியாயமான பங்கு கிடைக்கவில்லை. வணிகத்தில் ஒரு பக்கம் தரகர்கள், குத்தகைதாரர்களின் தலையீடும் பேராசையும் விவசாயிகளை நிரந்தரக் கடனாளிகளாக்கிவிட்டன. பட்டுக்கோட்டையார் பாடியது போல ‘காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்குக் கையில் காலும்தானே மிச்சம்’ என்ற நிலைக்கு விவசாயி தள்ளப்பட்டார்.

இதில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டது என்றால் அது பருத்தி விவசாயிகள்தான். நம் பாரம்பரிய பருத்தி ரகங்களும் பாரம்பரிய உற்பத்தி முறையும் இருந்தவரை பருத்தி சாகுபடியில் பூச்சிக் கட்டுப்பாடு என்பது விவசாயிகளின் கைம்மீறிச் செல்வதாய் இல்லை. ஆனால், நவீன பருத்தி ரகங்களும் நவீன பூச்சி மருந்துகளும் வந்தபோதுதான் சீரழிவு தொடங்கியது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியா முழுதும் மூன்று லட்சம் பருத்தி விவசாயிகள் இறந்திருப்பார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அந்நிய ரகங்களைத் தாக்கும் அந்நியப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மேலும் மேலும் ரசாயன உரங்கள் தெளித்ததால் பூச்சிகள் மேலும் மேலும் தகவமைப்பு பெற்றன.

ஒரு கட்டத்தில் இடுபொருட்களுக்கான அடக்கத்துக்குக்கூட உற்பத்தியான பருத்தி தேறாமல் போகவே வரிசையாகத் தற்கொலை செய்துகொள்ள தொடங்கினர் நமது விவசாயிகள். இப்படி, ஒவ்வொரு உணவு தானிய உற்பத்திகளிலும் பிற பணப் பயிர் உற்பத்திகளிலும் ரசாயன உரங்களின் நுழைவு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தின. சரி, இந்த இதழின் நெல்லான பெருங்கார் நெல்லைப் பற்றி பார்த்த பின் நவீன விவசாயம் பற்றி அடுத்த இதழில் தொடர்ந்து பார்ப்போம்.
பாரம்பரிய நெல் ரகங்களில் பெருங்கார் எனும் நெல் திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி வட்டாரத்தில் புகழ்பெற்றது. குறிப்பாக, அங்கு உள்ள தக்கண்டாபுரம் எனும் பகுதியில் இது அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 1400 கிலோ நெல் தானியமும், சுமார் 1500 கிலோ வைக்கோலும், மகசூலாகக் கிடைக்கும். குறுகியகால நெல் வகையைச் சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான குறுவைப் பட்டம் எனும் இப்பருவத்தில், 120 நாள் நெற்பயிரான பெருங்கார் பயிரிடப்படுகிறது. மேலும் ஜூன், மற்றும் ஜூலை மாதங்களில் தொடங்கக்கூடிய குறுவைப் பட்டத்தில் கரூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் இதைப் பயிரிட்டு குறுவை சாகுபடி செய்கிறார்கள். நேரடி நெல் விதைப்பு மற்றும் ஒற்றை நாற்று முறை என இரண்டுக்குமே ஏற்ற நெல் ரகம் இது. நேரடி விதைப்புக்கு முப்பத்தைந்து கிலோ விதை நெல்லும் ஒற்றை நாற்றுமுறையில் பயிரிட நாற்பது கிலோ விதை நெல்லும் தேவைப்படும்.

நாலரை அடி உயரத்துக்கு வரும் இந்தப் பயிர் தண்டு துளைப்பான், கதிர் நாவாய்ப் பூச்சிகளையும் இயற்கையாக எதிர்த்து வளரும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. காய்ச்சலும் பாய்ச்சலுமான நீர் வளம் கொடுத்து, ஊட்டச்சத்துகள் கொடுத்து, களை நீக்கிப் பயிரிட்டால் நல்ல மகசூல் கொடுக்கக்கூடிய பாரம்பரிய நெல் ரகம் இது. இட்லி, தோசை போன்ற டிபன் வகைகள் செய்யவும், முறுக்கு போன்ற பலகாரங்கள் செய்யவும் ஏற்ற ரகம் இது. எளிதில் ஜீரணமாகும் என்பதால் வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள், செரிமானம் எளிதாக நிகழத் தேவையுள்ள பைல்ஸ் நோயாளிகள், மலக்குடல் புற்றுநோய் உள்ளவர்கள், வயதானவர்கள் இதை அடிக்கடி சாப்பிடலாம். உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் என்பதால்  குழந்தைகளுக்கும் நல்லது.

(செழிக்கும்)

- இளங்கோ கிருஷ்ணன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nheru_soniaa11

  நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

 • malar_modi12

  2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

 • peruearthqq1

  பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்