SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்முதல் நிலையம் திறக்கவில்லை 10ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைகின்றன

2018-10-03@ 19:36:16

தஞ்சை: தஞ்சை அருகே வயலூர் நரசநாயக்கபுரத்தில் கடந்த ஒரு மாதமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை முடிந்து விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வதற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் போதுமான அளவுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் தனியாரிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் போதுமான சாக்கு, சணல் இல்லை. இதற்கு எடுத்துகாட்டாக தஞ்சை அருகே வயலூர் நரசநாயக்கபுரத்தில் விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல்லை வாங்குவதற்கு கடந்த ஒரு மாதமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்லை வாங்குவதற்கு கூட அரசு தயாராக இல்லை.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: வயலூர் நரசநாயக்கபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு வயலூர், ராமபுரம், குருவாடி, தோட்டக்காடு, கரம்பை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 350 ஏக்கர் உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் குறுவை, சம்பா நெல் கொள்முதல் செய்யப்படும். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த 7,000 நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பும், சாலைகளிலும் குவித்து வைத்துள்ளோம். இந்நிலையில் தஞ்சை பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீடித்தால் அறுவடை செய்துள்ள நெல்லை எப்படி விற்பனை செய்ய முடியும். 17 சதவீத ஈரப்பத்துக்குள் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும். கடந்த 3 நாட்ளாக மழை பெய்வதால் நெல் முளைக்கும் அபாயம்
உள்ளது. அறுவடை செய்த நெல்லை தனியாரிடம் விற்பனை செய்யலாம் என்றால் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. எனவே காலதாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தஞ்சை- கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

கொள்முதல் நிலையம் 1ம் தேதி திறப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒரு மாதமாக திறக்காததால் குவித்து வைத்துள்ள நெல்லை சாக்கு மூட்டைகளை போர்த்தி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இரவு, பகலாக நெல்லை பாதுகாப்பதால் நாள் ஒன்றுக்கு ரூ.300 செலவாகிறது. இதற்கிடையே நேற்று எங்கள் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஆர்டிஓ சுரேஷ் வந்தார். அப்போது விவசாயிகள் ஒன்றுகூடி நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென முறையிட்டனர். அதற்கு 1ம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று ஆர்டிஓ சுரேஷ் தெரிவித்தார். இதை கேட்ட விவசாயிகள் ஏற்கனவே நேரடி கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்த நெல் தேங்கியுள்ளது. இந்நிலையில் 1ம் தேதி திறக்கப்படும் என்றால் எந்த 1ம் தேதி என்று தெரியாமல் புலம்பினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam-5

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்

  • 06-12-2019

    06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • cambodiyaa_insects1

    கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்

  • saxophomne_chinaaa

    40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!

  • jayalalitha_admk11

    இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்