SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தகவல் பலகை

2018-10-03@ 17:31:27

1 இறந்த பிறகும் உலகை பார்க்கலாம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆக.25 முதல் செப்.8ம் தேதி வரை தேசிய கண்தான இருவார விழா கொண்டாடப்படுகிறது. பார்வையின்மையை கட்டுப்படுத்தும் விதமாக இது அனுசரிக்கப்பட்டு வருகிறது. கண்பார்வை இழப்பு இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 சதவீதம் பேர் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதுதான் வேதனை. 40 லட்சத்திற்கும்மேல் கார்னியா குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு கருவிழிக்காக ‘காத்து கொண்டுள்ளனர்’. ஆனால் கிடைக்கும் கருவிழிகளோ ஆண்டிற்கு 19 ஆயிரம் மட்டும்தான். இதனால் ‘உலகை பார்க்கும் வாய்ப்பு இருந்தும்’ லட்சக்கணக்கானோர் தொடர்ந்து இருளிலே பரிதவித்து வருகின்றனர்.

பற்றாக்குறை இருப்பதால்தான் ஒரு கண்ணிற்காவது பார்வை கிடைக்கட்டுமே என்ற நோக்கில் ஒருவருக்கு ஒரு கருவிழி வீதம் பொருத்தப்பட்டு வருகிறது. கார்னியா பாதித்தால் ஏன் பார்வை தெரியவதில்லை? ஏனென்றால் கார்னியா எனப்படும் விழிவெண்படலம் பாதிக்கப்பட்டால் ஒளிக்கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்பட்டுவிடும். இதனால் விழித்திரையில் பிம்பம் படியாமல் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. தொற்றுநோய்கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண்சிகிச்சை குறைபாடு மற்றும் பிறவியிலேயே இப்பிரச்னை ஏற்படலாம். கண்தானத்தை பொறுத்தளவில் ஒருவயது நிரம்பிய குழந்தை முதல் எந்தவயதினரும் செய்யலாம். கண்ணாடி அணிந்தவர்களும் கண்ணில் கண்புரை நீக்க அறுவைச்சிகிச்சை (காட்ராக்ட்) செய்தவர்களும்கூட தானம் அளிக்கலாம்.

எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, வெறிநாய்க்கடி, பாம்புக்கடி, புற்றுநோய், மூளைக்கட்டி போன்றவற்றால் இறந்தவர்களின் கண்கள் தானமாக பெற முடியாது. இறந்தவர்களின் கண்களை அப்படியே எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தப்படுகிறது என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. கண்ணில் உள்ள கார்னியா எனும் கருவிழியை மட்டுமே எடுத்து பார்வையிழந்தவர்களுக்கு பொருத்தப்படுகிறது. கண்தானம் பெற்றபிறகு இமைகளை மூடி தைத்துவிடுவதால் முகம் விகாரமாக தோன்றாது. பதிவுசெய்யாதவர்களிடம் இருந்து கூட கண்கள் தானமாகப் பெறப்படுகிறது. இதற்கு இறந்தவரின் மகன், மகள் ஆகியோரின் ஒப்புதல் இருந்தால் போதுமானது. இறந்து சுமார் 6 மணிநேரத்திற்குள் இவற்றை பெற்று 48 மணிநேரத்திற்குள் மற்றவர்களுக்குப் பொருத்திவிட வேண்டும்.

மருத்துவர்குழு வரும்வரை கண்களில் சுத்தமான தண்ணீர்விட்டு இமைகளை மூடிவைக்க வேண்டும். அல்லது சுத்தமான ஈரத்துணியை போட்டு வைக்கலாம். இது கார்னியா குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையணை வைத்து இறந்தவர்களின் தலையை உயர்த்தி வைக்க வேண்டும். மின்விசிறியை அணைத்து வைக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடத்திற்குள் கண்கள் தானமாக எடுத்து கொள்ளப்படும். தானம் அளிக்க விரும்பும் உறவினர்கள் அருகில் உள்ள அரசுமருத்துவமனை, கண்வங்கிகளுக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்தால் போதும். மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவைவிட இலங்கை பல மடங்கு குறைவு. ஆனால் இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே பெறப்படுகிறது. காரணம், இலங்கையில் கண்தானம் கட்டாயமாக்கப்பட்டிருப்பதுதான். நம்நாட்டிலும் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

2 முடி வளர்ச்சிக்கு உதவும் வேப்ப எண்ணெய்

குளிர்ச்சியினால் வரும் தலைவலி, பிடரிவலிக்கு வாரம் ஒருமுறை வேப்ப எண்ணெய்யை தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் தலைக்கு குளித்து வந்தால் குணமாகும். அன்றைய தினம் பகலில் தூங்கக்கூடாது. தினமும் வேப்ப எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை ஒழியும். முடிகொட்டுவது நிற்பதுடன், முடியும் நன்றாக செழித்து வளரும். மூக்கடைப்பு ஏற்பட்டால் இரவில் தூங்குவது கஷ்டமாக இருக்கும். எனவே படுக்க செல்லும் முன் மூக்கின் துவாரத்தில் தடவினால் மூக்கடைப்பு சரியாகும்.

வாதநோய் தாக்குதலால் கை, கால்கள் உணர்விழந்து விடும். அதற்கு வேப்ப எண்ணெய்யில் வதக்கிய ஆமணக்கு இலையினை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைத்து கட்ட மெல்ல மெல்ல குணமாகும். தினமும் சிறிது வேப்ப எண்ணெய்யை சாப்பிட்டால் நீரிழிவு எனும் சர்க்கரை நோய் கட்டுப்படுவதாக நம்பப்படுகிறது. குளிர்காலத்தில் கைகால் சில்லிட்டு விட்டால் 50மிலி வேப்ப எண்ணெய்யை சூடாக்கி அதில் கட்டிக்கற்பூரத்தை பொடித்து போட்டால் கற்பூரம் கரைந்து விடும். இந்த எண்ணெய்யை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்றாக சூடு பறக்க தேய்த்தால் கை, கால் சில்லிட்ட நிலை மாறி விடும்.

3 மலிவான விலையில் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிய காகிதம்

சீனர்கள் முதலில் எலும்பு மற்றும் மூங்கில் பட்டைகளில்தான் எழுதினர். சுமேரியர்கள் ஈரமான களிமண் கொண்டு பலகைகள் உருவாக்கி அதில் எழுதி வந்துள்ளனர். எகிப்தியர்கள் பப்பிரைஸ் என்ற நாணல் புல்லில் எழுதினர். தமிழர்கள் பனை ஓலையை  பக்குவம் செய்து எழுத்தாணி கொண்டு எழுதினர். தமிழ்இலக்கியங்கள் பலவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே. தொடர்ந்து கல்வெட்டு, ஆட்டின்தோல், கன்றில்தோல் போன்றவற்றிலும் எழுதப்பட்டது. இருப்பினும் சீனர்கள்தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினர். 8ம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனா மீது படையெடுத்து வெற்றி பெற்று, தாள்களை உருவாக்க தெரிந்தவர்களை அடிமைகளாக்கி அழைத்து சென்றனர்.

அவர்களிடம் இருந்து அரேபியர்கள் கற்று அவர்களிடம் இருந்து ஐரோப்பியர் கற்று உலகமெங்கும் இந்த யுக்தி பரவியது. பழைய காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாகவும், எடையும் அதிகளவில் இருந்தன. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். நவீன காகிதத்தை 1799ல் நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் கண்டுபிடித்தார். இது மரக்கூழினால் தயாரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மூங்கில் போன்ற மரங்களை சிறுசிறு துண்டுகளாக்கி நன்றாக அரைத்து கூழாக்கினர். இதுவே செல்லுலோஸ் எனப்படும் காகிதக்கூழ் ஆகும். இதனை நன்கு காய்ச்சி, நீரை வடித்து கனமான தகடு போன்ற பொருளினால் அழுத்தி தாள்களை உருவாக்கினர். ஊசியிலை மரங்கள், மூங்கில், யூகலிப்டஸ், பருத்தி, சணல்கழிவு, துணிகள், நார்கள், புற்கள், கரும்புசக்கைகள் உள்ளிட்டவை இதற்காக பயன்படுத்தப்பட்டன.

தற்காலத்தில் மரத்துண்டுகளுக்கு பதிலாக ரசாயனமுறையில் அமிலங்களைச் சேர்த்து வேகவைத்து காகிதக்கூழ் தயாரிக்கின்றனர். மரக்கூழுடன் ஆலும் என்னும் வேதிப்பொருளை சேர்க்கின்றனர். இதனால் காகிதங்கள் அமிலத்தன்மையை அடைகின்றன. இயந்திரமயமாக்கப்பட்ட காகித உற்பத்தி குறிப்பிடத்தக்க பண்பாட்டு மாற்றங்களை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. எழுதுவதும், அச்சிடுவதும் மிகவும் எளிதாயிற்று. அமிலத்தன்மை உடைய காகிதங்கள் விரைவாக எழுத்துக்களை அழியச்செய்கின்றன. எனவே தற்போது புத்தகங்களை அச்சிடும் நிறுவனங்கள் அமிலத்தன்மை உடைய காகிதங்களை தவிர்க்கின்றன. காகிதம் உருவானதால் கடிதங்கள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் மூலம் மலிவான தகவல் பரிமாற்றத்திற்கு வழி ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்