SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவலஞ்சுழியில் கிடைத்த முருகன்

2018-10-03@ 17:19:34

கல்லிடைக்குறிச்சியில் 11ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பெரிய பிரான் கோயில் தான் கொசக்குடி பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்திற்கு தெற்கே கம்பீரமாய் காணப்படும் கோயிலை காணும் போது பாண்டிய மன்னர்களின் அர்ப்பணிப்பு கண்ணுக்குள்  பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பழமை வாய்ந்த இக்கோவில் அருகே குயவர்கள் வாழ்ந்து வருவதால் இக்கோவிலை ‘குயவர்குடி பெருமாள் கோவில்’ என்று மக்கள் அழைத்து வருகின்றனர். குயவர்குடி நாளடைவில் மருவி கொசக்குடி என்றாகி விட்டது. கி.பி. 1190 முதல் 1218 வரை முதலாம் குலசேகர பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்துள்ளான். இவருடைய கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. ஆகவே இக்கோவில் 11ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது புலனாகிறது.

இக்கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டில் நயினார் குலசேகரமுடையார் கோயில், நயினார் பெரியபிரான் கோயில், நயினார் நாலாயிர ஈச்சரமுடைய கோவில் என 3 கோவில் இவ்வூரில் உள்ளது போல எழுதப்பட்டுள்ளது. 1359ல் வெட்டப்பட்ட கல்வெட்டில் வீரகேரளன் என்ற மன்னன் முள்ளி நாட்டு மதில் குறிச்சியில் உள்ள பெரிய பிரான் கோயிலில் நமச்சிவாய நயினாரும் மற்றவரும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க தானம் வழங்கியுள்ளார். அதன்படி தினமும் அமுது படைக்க 5 நாழி நெல்லும், கனி அமுது படைக்க எரிக்கரும்பு உட்பட நாழி நெல்லும் வழங்க நிலம் தானம் செய்துள்ளார்.

இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளை வைத்து பார்க்கும் போது கேரள மன்னர் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி கி.பி 15ம் நூற்றாண்டு முற்பகுதியில் தலைநகராய் இருந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது. குசக்குடி பெருமாள் கோயிலில் விஷ்ணு தேவியர் பெயர்களில் ஒன்றான மணவாள நாச்சியார் இடம்பெற்றுள்ளார். இக்கோயிலில் ஓங்கி உலகளந்த உத்தமன் வடிவில் பெரிய பிரான் இருந்துள்ளார். இவருக்கு ரத தண்டி, திரிதண்டி என்ற விஷ்ணு அடியாளர்கள் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரமுடையார் கோயில், குலசேகரமுடையார் கோயிலைக் காட்டிலும், பெரியபிரான் கோயில் பெரியது.

கல்லிடைக்குறிச்சியில் உள்ள பழைய கோயில்கள் அனைத்திலும் கல்வெட்டுகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளது நாகேஸ்வரமுடையார் கோயில். சிற்ப நேர்த்தியில் முதன்மை வகிக்கும் கோயில் இது என்றால் மிகையில்லை. நாயன்மார்கள் பெயர்களில் பல்வேறு காலங்களில் மடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பெயரில் மதுரையில் 1638ல் ஒரு மடம் இருந்துள்ளது. இம்மடத்திற்கு கல்லிடைக்குறிச்சியில் வைராவிகுளத்தையொட்டி நிலம் தானமாக வழங்கப்பட்டு உள்ளது. மதுரை திருமலை நாயக்க மன்னர் இதற்கான நிலங்கள் வழங்கியுள்ளார். இதுபோல் பல தகவல்கள் பிரமிப்பூட்டும் விதத்தில் கல்லிடைக்குறிச்சியில் உள்ளன.

அம்பாசமுத்திரமும், கல்லிடைக்குறிச்சியும் இரட்டை நகரமாக தாமிரபரணியின் கரையில் அமைந்து பழமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.
பழமைகள் பல நிறைந்து இருந்தாலும்  நவீன யுகத்தில் உருவான கோயில்களும் கல்லிடைக்குறிச்சியில் உண்டு. அவ்வாறு உருவான கோயில் தான் கல்லிடைக்குறிச்சி முருகன் கோயில். இந்த சம்பவம் நடந்து சுமார் 300 ஆண்டுகள் இருக்கும். கல்லிடைக்குறிச்சியில் வைகுண்டம் பிள்ளை என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் மிகப்பெரிய செல்வந்தர். மாதம் தோறும் வெள்ளிக்கிழமை வில் வண்டியில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்று சுப்பிரமணிய சுவாமியை வணங்குவார். அதன் பிறகு தான் ஊருக்கு வருவார்.

ஒரு நாள் பயங்கரமான காற்றுடன் மழை பெய்தது. இதனால் வில் வண்டி பூட்ட முடியவில்லை. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பயணத்தினை துவங்க முடியவில்லை. திருச்செந்தூர் முருகனை வழிபட முடியாத பிள்ளை இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தார். ‘முருகப்பெருமானே’ ஏன் இந்த சோதனை என்று மனமுருக வேண்டி நின்றார். பிள்ளை சிறிது கண் அயர்ந்த போது கனவு தோன்றியது. அதில் முருகன் தோன்றினார். கனவில் தாமிரபரணி ஆற்றில் ஊர்காடு அருகே உள்ள திருவலம்சுழியில் என்னுடைய சிலை உள்ளது.

அதை எடுத்து பிரதிஷ்டை செய்து வணங்கு. திருச்செந்தூர் சென்ற பலன் கிடைக்கும் என்று கூறினார். மறுநாள் காலை மழை நின்றதும் பிள்ளை தனது ஆட்களை கூட்டிக்கொண்டு ஊர்காடு சென்றார். அங்கு திருவலம்சுழியில் தோண்டிப்பார்க்க ஏற்பாடு செய்தார். கனவில் முருகன் கூறியது வீண் போகவில்லை. முருகப்பெருமானின் சிலை கிடைத்தது. அதை எடுத்து கொண்டு கல்லிடைக்குறிச்சியில் பிரதிஷ்டை செய்தார்கள். அதுதான் கல்லிடைக்குறிச்சி குமார கோவில். தாமிரபரணி கரையில் பிறந்த 23வது  திருவாவடுதுறை  ஆதீன கர்த்தா  வரலாறை நாளை பார்க்கலாம்.

(நதி வற்றாமல் ஓடும்)


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்