SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனிச்சிறப்பு மிக்க தளச்சேரி

2018-10-03@ 17:18:20

தாமிரபரணியை கொண்டாடுவோம்

கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் கோவிலில் கல்வெட்டுக்கள்  பல உள்ளன. அதை வைத்து தான் தளச்சேரி மடத்துக்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிப்பிட முடிகிறது. 11-12-1596ல் வெட்டப்பட்ட கல்வெட்டில் மானேந்தியப்பர் கோவில் திருநாள் நடக்கும் படிக்கு வீரப்பநாயக்கர் என்பவரும் மற்றும் முதலிநயினார் என்பவரும் கோவிலுக்கு செய்த தானம் குறித்து எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் அம்பலத்தாடும் மடம்  என குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மடம் திருவாவடுதுறையின் கிளை மடமான தளச்சேரி மடமாகும். தென் தமிழ்நாட்டில் திருவாடுதுறையின் கிளைகள் உருத்திரகோடி தேசிகர் காலத்தில் துவங்கப்பட்டது.

தளச்சேரி மடத்துக்கும் மானேந்தியப்பர் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மடத்தின் சிலைகள் உள்பட பல பொருள்கள் இக்கோவிலில் உள்ளன. மடத்தின் கட்டளையும் இக்கோயிலுக்கு உண்டு. இக்கோவிலில் அபிஷேகம் செய்ய பல ஓதுவார்கள் இங்கிருந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் பெரியவர்கள் கூறுகிறார்கள். மடத்தின் மூலம் ‘விளா பூஜைக் கட்டளை’ இக்கோவில் மூலமாக செய்து வருகிறார்கள். குறிப்பாக கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் கோவில் உள்ள பகுதி தளச்சேரி என்று அழைக்கப்படுகிறது. தளி என்றால் கோவில். கோவில்கள் அதிகமாக உள்ள பகுதி தளச்சேரி என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தளச்சேரி என்றால் நடனமாதர் வசிக்கும் தெரு என்று பொருள் கூறலாம். அல்லது மேடான இடம் என்பதால் தளச்சேரி என்று பெயர் வந்து இருக்கலாம்.
தளச்சேரி மடத்தில் நடைபெறும் தை திருவிழா நாலாவது மண்டகப்படியில் சிங்கம்பட்டி ஜமீன் கட்டளை நடைபெறும். அப்போது தீர்த்தபதி ராஜா தனது குடும்பத்துடன் வந்து தளச்சேரி மடத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் கூட்டி ஒன்றாக உணவு அருந்துவார். பின்பு மடத்துக்குள் வரும் நீராழி மண்டபத்தின் அருகே அமர்ந்து மக்களுடன் பேசி மகிழ்வார். இந்த நீராழி மண்டபம் மிகச்சிறப்பு வாய்ந்தது.

கன்னடியன் கால்வாயில் இருந்து பிரியும் ஒரு குறுகிய கால்வாய் தளச்சேரி மடத்துக்குள் வந்து அங்குள்ள நீராழி மண்டபத்துக்குள் பிரவேசித்து காட்சி தரும். இங்குதான் ஆதின கர்த்தாக்களும், தம்பிரான் சுவாமிகளும் ஸ்நானம் செய்வார்கள். தாமிரபரணி ஆற்றில் இவ்விடத்தில் மட்டுமே இதுபோன்ற சிறப்பு அமைப்பு உண்டு. தளச்சேரி மண்டபத்துக்கு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் உள்பட பல முக்கிய தலைவர்கள் வந்து சென்றுள்ளார்கள். இந்த தளச்சேரி மடத்தில் 23வது குருமாக சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீசிவப்பிரகாச தேசிக சுவாமிகள் காலத்தில் தென்னந்தோப்பை உருவாக்கி 14-06-1989ல் சேரன்மகாதேவி சப்கலெக்டர் அதை துவக்கி வைத்துள்ளார்.

இந்த தோட்டத்துக்குள் திருவாவடுதுறை ஆதினத்தில் முக்கிய பிரம்மாக்கள் பரி பூரணம் ஆகி உள்ளனர். அவர்களுக்கு குரு பூஜை விழா குறிப்பிட்ட நாளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 16-வது ஆச்சாரியார் காலத்தில் சின்னப்பட்டம் ஸ்ரீநமச்சிவாய தேசிகர் தை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார். அதேபோலத்தான் 14-வது ஆச்சாரியார் காலம் சின்னப்பட்டம் ஸ்ரீகனகசபாபதி தேசிகரும், தை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார். ஆகவே இருவருக்கும் குருபூஜை தை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

23-வது ஆச்சாரியார் காலத்தில் இளைய சன்னிதானம் சீர்மிகு அம்பலவாணர் தேசிக கவிராயர் தை மாதம் 28ம் தேதி (10-02-1997) உத்திராதி நட்சத்திரத்தில் இறைவனடி சேர்ந்தார். இவருக்கு குருபூஜை உத்திராதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. இவர்கள் 3 பேருமே அடக்கமான இடத்தில் நினைவுச் சின்னங்கள்  எழுப்பப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சி மிக அதிகமான கோயில்களை கொண்ட அருமையான தலம். இங்கு வசிப்பவர்கள் வீடுகளின் புறவாசல் வழியாக கன்னடியன் கால்வாய் ஓடுவது ஓர் அற்புதம். இங்குதான் மற்றொரு சிறப்பு மிக்க கொசக்குடி பெருமாள் குடி கொண்டுள்ளார் தெரியுமா!

(நதி வற்றாமல் ஓடும்)


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்