SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லிடைக்குறிச்சி என்னும் கல்யாண புரிகல்லிடைக்குறிச்சி என்னும் கல்யாண புரி

2018-10-03@ 17:17:11

தாமிரபரணியை கொண்டாடுவோம்

தாமிரபரணி ஆற்றில் அம்பாசமுத்திரத்துக்கு என்று தனி முத்திரை உண்டு. இவ்வூரை காசிக்கு இணையான ஊர் என்றும் அழைப்பர். கங்கையாற்றங்கரையில் காசியும், அதில் காசிவிஸ்வநாதர் கோயிலும் இருக்கின்றன. கங்கையாறு பொருநையுடன் கலந்து வருவதாக திருநெல்வேலித் தலபுராணம் கூறுகிறது. அக்கங்கையும், காசியையும் நினைத்து இவ்வூர் இறைவனுக்கு காசிநாதர் என பெயர் வைத்த வழிபடலாயினர் என்பது கூற்று. ஆற்றில் இத்துறை காசிதீர்த்தம் எனப்பட்டது. காசிபர் என்ற முனிவர் வழிபட்டமையால் இறைவன் காசிபநாதர் என அழைக்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது.

இத்திருக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளில் முள்ளி நாடு ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து இளங்கோக்குடி என இத்தலம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இறைவன் பெயர்கள் திருப்போத்துடைய நாயனார், திருப்போத்துடைய தேவர், திருப்போத்துடைய ஆழ்வார், திருப்போத்துடைய மாதேவர், திருப்போத்துடைய பட்டாரகர் எனவும் குறிப்பிடப்படுகிறார்கள். போத்து என்பது காளையை குறிக்கும். அதனை வாகனமாக உடைய பெருமான் என்பதால் இறைவன் இவ்வாறு அழைக்கப்படுகிறார். காளை = எருது என்பதை குறிப்பிடும் விதமாக இறைவன் எருத்தாளுடைய நாயனார் என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மருவி எரித்தாளுடையார் கோவில் எனவும் எரிச்சாவுடையார் கோவில் எனவும் வழங்கப்பெற்றது.

(கன்னடியன் கால்வாய் உருவான வரலாறு குறித்து நாம் ஏற்கனவே கூறியதை நினைவு கூர வேண்டும். மன்னருக்கு ஏற்பட்ட கொடிய நோயைத் தீர்த்ததால் கிடைத்த பொன்னை, கோவில் அர்ச்சரிடம் பாதுகாக்கச் சொல்லி கொடுத்து வைத்திருந்தான் பிரம்மச்சாரி அந்தணன் ஒருவர் அடைக்கலப் பொருளை அபகரித்து, பொய் சத்தியமும் செய்த அர்ச்சகரை புளியமரத்தோடு சேர்த்து எரித்து தண்டித்ததால், சுவாமி எரித்தாட் கொண்டார் எனவும், எரிச்சாவுடையார் எனவும் காரணப்பெயர் பெற்றதாகக் கூறப்பட்ட வரலாறு அம்பைத் தல புராணத்திலும் இடம் பெற்றுள்ளது.) காசிபநாதர் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்க, எரிச்சாளுடையார் சுயம்புவாக மேற்கு முகமாக காட்சி தருகிறார்.

அங்கு எரித்தாட்கொண்ட புளியமரமும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்திருக்கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் பெருமையுடையது. நீதியைக் காத்துத் தருமத்தை நிலைநாட்டிய எரித்தாட் கொண்ட மூர்த்தி காசிப முனிவரின் யாக அக்னியில் முளைத்தலிங்கம் என்பர். ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடனக்காட்சி, திருவாட்சி, பள்ளியறை மணியடி மண்டப தூண்கள், வசந்த மண்டப தூண்களில் காணப்படும் சிற்பங்கள், ஆறுமுக நயினார், வள்ளி, தெய்வானை, மயில் மீது அமர்ந்திருக்கும் ஒரே கல் சிற்ப வேலைப்பாடுகள் சிறப்பான அம்சங்கள். முன்பகுதியில் உள்ள பெரிய மரக்கதவில் நுட்பமாக திருவிளையாடல் புராணக் கதைகள் செதுக்கப்பட்டுள்ளன.

திருக்கோவிலில் சுவாமி கர்ப்பகிரக வடபுறச்சுவர் மற்றும் தென்புறச்சுவர்களில் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. இவை மூலம் திருக்கோவிலின் தொன்மை, ஊர், பெயர், தானம், நிவந்தம் முதலியவை பற்றி அறிய முடிகிறது. பங்குனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. முக்கியமான எட்டாம் திருநாள் அன்று சுவாமி, அம்மன் அகத்தியப் பெருமானுக்கு திருமணக் காட்சி அருளுதல் சிறப்பாக நடைபெறுகிறது. ஒன்பதாம் திருநாள் திருத்தேரோட்டம். இவைத்தவிர திருவாதிரை, தைப்பூசம், கந்தசஷ்டி, சிவராத்திரி திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகிறது. தற்போது இந்த கோயிலில் ராஜாகோபுரம் கட்டும்பணியை  அடியார்கள் மிகச்சிறப்பாக  செய்து வருகிறார்கள்.

அடுத்து கல்யாண புரி என அழைக்கப்படும் கல்லிடைக்குறிச்சி குறித்து காணலாம். கல்+இடை+குறிச்சி இது தான் கல்லிடைக்குறிச்சி என்று அழைக்கப்படுகிறது என்ற கருத்து  இங்குள்ள குடியானவர்களால் பேசப்படுகிறது. இரண்டு கற்களுக்கு இடையை உள்ள குறிச்சி. குறிச்சி என்றால் இருப்பிடம். இரண்டு கல் என்று குறிப்பது மணிமுத்தாறுக்கும், அம்பாசமுத்திரத்துக்கும் இடையே உள்ள ஊர் என்பதை குறிக்கிறது. இந்த இரண்டு ஊர் கல்களும் இடையே உள்ள குறிச்சி கல்லிடைக்குறிச்சி என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்லிடைக்குறிச்சி முன்பு வழங்கப்பட்ட பெயர் கல்யாணபுரி.

அகத்திய பெருமான் சிவசக்தி திருமணம் பார்க்க தென்திசை வந்த போது இவ்வூரில் இருந்தும் கல்யாண காட்சியை பார்த்து உள்ளதாகவும், அதனால் இவ்வூர் கல்யாணபுரி என்று அழைக்கப்பட்டது என்றும் அதுவே நாளடைவில் மருவி கல்லிடைக்குறிச்சி ஆகி இருக்க வேண்டும் என்றும் ஒரு கருத்தை கூறுகிறார்கள்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இவ்வூர் அருகே ஆறு ஓடும் சத்தம் கல்லின் ஒலியுடன் ஓடுகிறது. ஆகவே அந்த சத்தத்தை உடைய இந்த ஊர் கல்லிடைக்குறிச்சி என்று அழைக் கப்பட்டிருக்கலாம் என்று கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் புலவர் இரா.சமுத்திரபாண்டியன் எழுதிய செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்கு பெயர் பெற்ற ஊர். தமிழகத்தில பல இடங்களில் அப்பளம் தயார் செய்யப்பட்டாலும் கூட கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. தாமிரபரணி தண்ணீரில் செய்யப்படும் அல்வா எப்படி ருசி பெறுகிறதோ அதேபோலவே அப்பளமும் ஒருவித வித்தியாசமான சுவை பெறுகிறது. கல்லிடைக்குறிச்சியில் 300 வருடங்களாக அப்பளத்தொழில் நடந்து வருகிறது. கல்லிடைக்குறிச்சி குறித்து கல்வெட்டுகள் என்ன கூறுகின்றன?

(நதி வற்றாமல் ஓடும்)


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்