SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாச்சியார்களை பிரியாத வேணுகோபாலன்

2018-10-03@ 17:15:34

தாமிரபரணியை கொண்டாடுவோம்

முன்னொரு காலத்தில் சேர மன்னன் கேரளாவை ஆண்டு வந்தான். அவன் திருமாலுக்குக் கோயில் கட்ட விரும்பினான். தன்னுடைய மந்திரிகளையும், குருமார்களையும்  அழைத்து, ‘கோயிலை கட்ட என்ன செய்யவேண்டும்’ என வினவினான். அவர்கள், ‘எல்லாம் வல்ல இறைவன் தான் உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணத்தினை தோன்றச் செய்துள்ளார். எனவே அவர் நிச்சயம் உங்களுக்கு வழிகாட்டுவார். எனவே பொறுத்து இருங்கள். அதற்கும் இறைவன் அருள் புரிவான்’  என பதிலளித்தனர். மந்திரிகளின் பதிலை கேட்டு மன்னர் மன அமைதி அடைந்தார்.  அன்றிரவு அவனது கனவில் ருக்மணி சத்யபாமாவுடன் மகாவிஷ்ணு புல்லாங்குழல் இசைத்தபடி வேணுகோபாலராக காட்சி அளித்தார்.

அதன் பின்  ஜீவநதியான தாமிரபரணிக் கரையில் இருந்த புன்னை வனத்தைச் சுட்டிக் காட்டினார்.  அவ்விடத்தில் தனக்குக் கோயில் எழுப்புமாறு பணித்தார். இதனையடுத்து மன்னன் தான் கனவில் கண்ட வடிவத்திலேயே சுவாமிக்குச் சிலை வடித்தார். சுவாமி கூறியபடியே அவர் குறிப்பிட்ட இடத்தினை தேடி வந்தார். அம்பாசமுத்திரத்தில் அவ்விடத்தினை கண்டான். பின் அங்கு தான் செய்து கொண்டு வந்த சிலையை  பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான். மூலவர் சுவாமி வேணுகோபாலர் திருமேனி, நேபாளத்துக் கண்டகி நதி தீரத்தில் காணப்படும் சாளக்கிராமத்தால் உருவாக்கப்பட்டது.

வேணுகோபாலர் ஆதிசேஷசனைக் குடையாகவும், ருக்மணி சத்யபாமா சமேதராகவும் காட்சியளிக்கிறார். இவருக்கு எண்ணெய்க் காப்பும் பால் திருமஞ்சனமும் செய்யப்படுகிறது. உற்சவரும் எப்போதும் தனது நாச்சியார்களைப் பிரிவதில்லை. தீர்த்தவாரியின் போதும் சுவாமியின் பிரதிநிதியாக சக்கரத்தாழ்வாரே இருப்பார். ஆனால் இங்கு சுவாமியே தனது நாச்சியார்களுடன் தீர்த்தவாரி காண்கிறார். இதேபோன்றே வைகுண்ட ஏகாதசியின் போது, சொர்க்கவாசலைக் கடக்கையில் கூடத்தம் பத்தினியரைச் சுவாமி பிரிவதில்லை. ஆதலால் நித்யகல்யாணப் பெருமாள் என்ற பெயர் இவருக்கு உண்டு. ஆனால், வைகாசி பிரமோற்சவத்தின் 9ம் நாளும், வைகுண்ட ஏகாதசியின் போதும் பெருமாள் மோகினித் திருக்கோலத்தில் சத்யபாமாவுடன் காட்சி தருவதில்லை.

நவக்கிரக தோஷங்களைப் போக்கும் மூர்த்தியாக இங்கு சுவாமி அருள்கிறார். சனிக்கிழமைகளில் சுவாமிக்கு எள்சாதம் படைப்பர். மாணவர்கள் கல்வியில் சிறப்புற்று விளங்கிட புதன்கிழமைகளில் பாசிப்பயிறு படைத்து வழிபடுவர். வைகாசி பிரம்மோற்சவத்தின் போது 5ம் நாளில் ஐந்து கருடசேவை சிறப்பாக நடைபெறும். கிருஷ்ண ஜெயந்தி அன்று சுவாமிக்கு சங்குப்பால் தரும் வைபவம் சிறப்பாக நடைபெறும் அப்போது பக்தர்களுக்குப் பிரசாதமாக நெல் வழங்கப்படும். இதனை அரிசியுடன் கலந்து வைத்தால் அன்னத்திற்குப் பஞ்சம் வராது என்பது ஐதீகம்.

இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்திருக்கோயிலின் வடபுறம், பாவம் போக்கும் ‘ஹரிஹர தீர்த்தம்’ எனப் பெயர் பெற்ற திருக்குளம் ஒன்று  நடுவில் மண்டபத்துடன் உள்ளது. அம்மண்டபத்தில் சிவன், கிருஷ்ணன் ஆகியோர் திரு உருவங்கள் உள்ளன. சுவாமி கிருஷ்ணன் புல்லாங்குழலூதி நின்ற திருக்கோலத்துடன் அமைக்கப்பட்டுள்ளார். இத்திருக்கோயில் பெரிய கதவுகள் இரண்டிலும் திருமாலின் தசாவதாரக் காட்சிகள் அமையப் பெற்றுள்ளன. தல விருட்சம் புன்னை மரமாகும், பாஞ்சராத்திர ஆகமத்தின்படி கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள விமானம் ஆனந்த நிலைய விமானமாகும். இதேபோல் அம்பையில் உள்ள காசிபநாதர் கோயிலின் சிறப்புகள்.......!

(நதி வற்றாமல் ஓடும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்