தம்பியை சுட்டு கொன்ற அண்ணன் கைது
கருத்துகள்
சேலம்: வேலையில் சேர ரூ.4 லட்சம் கேட்டு தகராறு செய்த தம்பியை அண்ணன் சுட்டுக் கொன்றார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கரியகோயில் வேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன்கள் ராஜு (26), சங்கர் (22). லட்சுமணன் இறந்துவிட்டார். அண்ணன் பராமரிப்பில் சங்கர் வசித்து வந்தார். பி.எஸ்சி., முடித்துள்ள சங்கர், வேலை தேடி வந்தார். வேலையில் சேர பணம் வேண்டும் என அண்ணனிடம் கேட்டுள்ளார். அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை என கூறிவிட்டார்.
தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் தோட்டத்தை விற்று பணத்தை தரும்படி சங்கர் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்றிரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜு, வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியால் சங்கரை சுட்டுக் கொலை செய்தார்.பின்னர் கரியகோயில் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். அவரிடம் இன்ஸ்பெக்டர் கருணாநிதி விசாரணை நடத்தினார். ‘‘கூட்டுறவு துறையில் ரேஷன் கடை விற்பனையாளர் பணியில் சேர ரூ.4 லட்சம் பணம் வேண்டும் என தம்பி கேட்டான். அவ்வளவு பணம் தரமுடியாது என கூறினேன். அப்பா சொத்தான 5 ஏக்கர் நிலத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை விற்று பணம் கொடு என கேட்டான். அதனால், அவனை சுட்டு கொன்றேன்’’ என போலீசாரிடம் ராஜு கூறியுள்ளார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!