உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
கருத்துகள்
குமரி மாவட்டத்தின் செழிப்புக்கு முக்கிய நீராதாரம் குழித்துறை தாமிரபரணி ஆறு. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் கோதையாறு, கிழவியாறு, குற்றியாறு, சாத்தாறு ஆகியன இணைந்து தாமிரபரணி ஆறாக ஓடி குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளை வளம் கொழிக்கச் செய்கிறது. சுமார் 64 கி.மீ நீளமுள்ள இந்த தாமிரபரணி, தேங்காய்பட்டணம், இரயுமன்துறை பகுதிகளில் கடலில் கலக்கிறது. வற்றாத ஜீவநதியாக ஓடும் இதுதான் குமரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. குழித்துறை கூட்டுக்குடிநீர் திட்டம், விளாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டம், மெதுகும்மல் , களியக்காவிளை குடிநீர் திட்டம், ஏழுதேசம் , கொல்லங்கோடு கூட்டுக்குடிநீர் திட்டம், வில்லுக்குறி , ஆளூர், 79 கடற்கரையோர கிராமங்களை இணைக்கும் சுனாமி கூட்டுக்குடிநீர் திட்டம், கட்டாத்துறை மற்றும் பத்மநாபபுரம் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 16 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 48 பேரூராட்சிகள், 55 ஊராட்சிகள், 3 நகராட்சிகளில் உள்ள சுமார் 5 லட்சம் மக்கள் இவற்றின் மூலம் பயனடைந்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்று தண்ணீர் தேங்காய்பட்டணம் பொழிமுகம் வழியாக கடலில் கடப்பது வழக்கமாக நடைபெற்று வந்தது. இதனால் ஆற்றுநீரில் கடல்நீர் கலப்பது தடுக்கப்பட்டு வந்தது. தாமிரபரணி ஆற்றில் மங்காடு பகுதியில் சப்பாத்து பாலம் அமைக்கப்பட்டிருந்ததால் கடல்நீர் ஆற்றில் ஏறினாலும் 5 கி.மீ தூரம் வரைக்கு மட்டுமே வரும். இதனால் பெரிய அளவு பாதிப்பு இல்லாமல் இருந்தது. 1992 வெள்ளப்பெருக்கின் போது இந்த சப்பாத்து பாலம் உடைந்தது. தடுப்பணை போல் செயல்பட்டு வந்த சப்பாத்துப் பாலம் இல்லாததால் தற்போது கடல் நீர் குழித்துறை வரை சுமார் 12 கி.மீ தூரத்துக்கு ஆற்றில் கலந்துள்ளது. எனவே ஆற்று நீரில் உப்புதன்மை அதிகரித்து குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டங்கள் அனைத்தும் இந்த 12 கி.மீ பகுதிக்குள் வருவதால் குடிநீர் திட்டங்கள் மூலம் விநியோகிக்கப்படும் நீர் உப்பு சுவை ஏறிவிட்டது. எனவே இதனை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த குடிநீர் திட்ட கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் மணல் கொள்ளையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மணல் திருடியதால் இந்த பகுதிகளில் ஆற்றின் ஆழம் 50 அடிக்கும் அதிகமாக உள்ளது. ஆற்றின் அகலமும் அதிகரித்து இந்தப் பகுதி தண்ணீர் வற்றாத ஏரியை போல் மாறிவிட்டது. இதனால் ஆற்றில் கலந்து கடல்நீர் மீண்டும் பாய்ந்து கடலுக்குச் செல்வதற்கு பதில் நிலத்தடி நீரில் கலந்து வருகிறது. இதனால் ஆற்றையொட்டி உள்ள கிணறுகளில் உள்ள நீரும் உப்பு நீராக மாறியுள்ளது. இதை தடுக்க பெருஞ்சாணி அணையில் இருந்து 50 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார். தண்ணீர் திறந்து விட்டும் உப்புச்சுவை மாறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெருமழை பெய்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால் தான் இந்த உப்பு நீர் மீண்டும் கடலுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் அவ்வாறு சென்றாலும் போதிய தடுப்பணைகள் இல்லாதபட்சத்தில் மீண்டும் கடல்நீர் ஆற்றில் கலக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. குழித்துறை கூட்டுக் குடிநீர் திட்டம் மேற்கு மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல, மாவட்ட தலைநகரான நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மாற்று திட்டமாகவும் உள்ளது. இந்த தாமிரபரணி ஆற்றை தான் எதிர்காலத்தில் நாகர்கோவில் நகர மக்களும் நம்ப வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் குழித்துறை தாமிபரணி ஆற்றுநீர் உப்பு நீராக மாறி வருவது மாவட்டம் முழுவதுமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தண்ணீரில் உப்புதன்மை நாளுக்குள் நாள் அதிகரிப்பதால், மாற்று நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகம் உடனடியாக யோசிக்க வேண்டும். தற்போது கடல்நீர் ஆற்றுக்குள் புகுவதால் குடிநீர் திட்டங்கள் பயனற்றதாக போய்விடும். இவற்றை தடுப்பதற்காக தடுப்பணைகள் கட்டப்படுவதோடு இயற்கை வளங்கள கொள்ளையடிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ இது குறித்து கூறியதாவது: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணைகள் அமைக்கப்படாததால் 12 கி.மீ தூரத்திற்கும், மணக்குடி கடலில் கலக்கும் பழையாற்றில் 1 கி.மீ தூரத்துக்கும், மணவாளக்குறிச்சி பகுதியில் கலக்கும் வள்ளியாற்றில் 1 கி.மீ தூரத்துக்கும் கடல்நீர் உட்புகுந்து உள்ளது. இதனால் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பதிக்கப்பட்டுள்ளன. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மேலும் உப்புநீர் ஏறாமல் தடுக்க குழித்துறை, மங்காடு, கணபதியான்கடவு பகுதிகளில் தடுப்பணைகள் உடனடியாக அமைக்க வேண்டும். இவ்வாறு அமைத்தால் கடல்நீர் உட்புகுவது தடுக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும். இதனால் விவசாய நிலங்களும் பாதுகாக்கப்படும் என்றார்.
நல்ல தண்ணீரா... உப்பு தண்ணீரா
ரூ28 கோடி மதிப்பில் சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம், ஸி14 கோடி மதிப்பில் விளாத்துறை கூட்டுக்குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம், ரூ18 கோடி மதிப்பில் மெதுகும்மல் , களியக்காவிளை, ஏழுதேசம் , கொல்லங்கோடு கூட்டுக்குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம் உள்பட பல சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால் அதில் கலந்துள்ள உப்பு அகற்றப்படுவதில்லை. எனவே சுத்திகரிக்கப்பட்ட நீரும் உப்பு சுவை உடையதாகவே உள்ளது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் இயந்திரங்களின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. அதில் தண்ணீரின் சுவையை மாற்றுவது சாத்தியப்படாது என்றார்.
அரசு நடவடிக்கைகள்
குழித்துறை ஆறு 12 கிமீ தூரம் உப்பாக மாறியதால் கலெக்டர் நாகராஜன் பொறியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். குடிநீரின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கடல் கொந்தளிப்பினாலும், கடல்நீர் ஆற்று நீரில் ஊடுருவியதாலும், ஆற்றில் நீர் வரத்து இல்லாததாலும் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பொழிமுகம் பகுதியில் கடல்நீர் ஆற்றுக்குள் வராமல் தடுக்க மண்தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது. உடனடியாக இந்த பணியினை மேற்கொள்ள குடிநீர் வாரிய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் ஆற்றுநீர் கடலில் கலப்பதற்கு ஏதுவாக மண்தடுப்பினை அகற்றிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மண் எடுப்பதால் ஆபத்து
தாமிரபரணி ஆற்றோரம் தனியார் நிலங்களில் இருந்து மண் எடுத்து செங்கல் தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர். இதற்காக அளவுக்கு அதிகமாக 50 அடி ஆழம் வரை மண் வெட்டி எடுக்கபடுகிறது. தனியார் நிலங்களில் மண் எடுப்போர் ஆற்றோர புறம்போக்கு நிலங்களையும் விட்டு வைப்பதில்லை. இதனால் ஆறு பாதை மாறும் நிலை உள்ளது. அத்துடன் மழைக்காலங்களில் ஆற்று நீர் ஊருக்குள் புகுந்து அதிக சேதம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல்களை தடுக்க வேண்டிய அதிகாரிகள் பலர் விலைபோய் விடுவதால் தாமிரபரணி ஆற்றின் இயற்கை தன்மை அழிந்து போய் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே இதனை பாதுகாக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!