சிக்கலில் தவிக்கும் சென்னை விமான நிலையம

Date: 2013-03-17@ 06:17:37

ஆசியாவில் உள்ள விமான நிலையங்களில் மிகப் பெரியது சென்னை விமான நிலையம். பெரிய அளவில் 2  ரன்வே உள்ள விமான நிலையம் என்ற பெயரும் உண்டு. சுமார் ரூ2 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு, உள்நாட்டு  முனையங்கள் முற்றிலும் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டது. ஆண்டுக்கு சுமார் 1 கோடி பயணிகளையும் 5 லட்சத்து 42,460 டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டுள்ளது. பரப்பளவு, கையாளும் திறன், நவீன வசதிகளில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. ஆனால், என்ன ஆச்சோ தெரியவில்லை... இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து ஏகப்பட்ட சோதனைகள்... முதல்கட்டமாக 2வது ரன்வே அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ரூ430 கோடி செலவில் ரன்வேயை 6,676 அடியிலிருந்து 11,269 அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இடப்பற்றாக்குறையால்  முழு அளவில் ரன்வே அமைக்க முடியவில்லை. சுற்றுச் சுவர் அமைக்க 15.5 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் தமிழக அரசிடம் கேட்டது. ஆனால், மணப்பாக்கம் கிராமத்தில் உள்ள நிலம் ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டது. ராணுவ பயிற்சி மையத்திலிருந்து விமான நிலையம் வரை அமைக்கப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டமும் இந்த 2வது ரன்வேக்கு இடம் ஒதுக்குவதில் பிரச்னையை ஏற்படுத்தியது. இடப்பற்றாக்குறை மற்றும் துறைகளுக்கு இடையேயான ஆவணப் பரிமாற்ற சிக்கலால் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2வது ரன்வேயில் 2,000 அடி மட்டுமே பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் தீர்வதற்குள் அடுத்த நெருக்கடி வந்தது. விமான நிலையத்தின் சரக்கு முனையங்களில் பணியாற்றும் சுமார் 1,500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்  அறிவித்தனர். லோடுமேன்கள், சூபர்வைசர்கள், லிப்ட் டிரைவர்கள், ஷெட்  பொறுப்பாளர்கள், ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள், சிப்ட் பொறுப்பாளர்கள் என்று சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பிரிவில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த  இந்த வேலை நிறுத்தத்தால் சரக்கு கையாள்வதில் நெருக்கடி ஏற்பட்டது. சரக்குகளை ஏற்றிவந்த சுமார் 250 டிரக்குகள் வெளியே நிறுத்தப்பட்டன. அழுகும் பொருட்களான பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் அதிகாரிகள் திணறினர். ஒரு வழியாக பேச்சுவார்த்தையால் பிரச்னை தற்காலிகமாக தீர்க்கப்பட்டது. மீண்டும் புது உத்வேகத்துடன் செயல்பட்ட சென்னை விமான நிலையத்துக்கு அடுத்த பிரச்னை ஆரம்பமானது. கடந்த செவ்வாய்கிழமை விமானக் கட்டுப்பாடு வளாகத்தில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எந்த தடங்கலையும் சமாளிக்கக் கூடிய மின் சப்ளை (யுபிஎஸ்) சிஸ்டம், கட்டுப்பாடு சிஸ்டம், தரைக்கட்டுப்பாடு ரேடார் இயக்கம் ஆகியவை தீ விபத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த பிரிவுதான் விமானங்கள் தரை இறங்குவது, புறப்படுவது ஆகியவற்றைக் கண்காணிக்கும் முக்கியமான பிரிவாகும். இந்த பாதுகாப்பான வளாகத்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தீ விபத்து நடந்த நேரத்தில் ஒரு சில கட்டுப்பாட்டு அதிகாரிகள் மட்டுமே பணியில் இருந்தனர். 2வது தளத்தில் இருந்த அந்த அதிகாரிகள்தான் விமானங்களை ஓட்டி வந்த விமானிகளுக்கு கட்டுப்பாட்டு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எச்சரிக்கை செய்தனர். இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. நெரிசல் நேரமாக இருந்திருந்தால் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும். இதுபோன்ற தொடர் பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் சர்வதேச தரச்சான்று பெற்ற சென்னை விமான நிலையத்தின் பெருமை குறைந்துவிடும் என்று விமான நிலையப் பணியாளர்களும், அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.


தீ தடுப்பு, புகை போக்க ஏற்பாடு : விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட யுபிஎஸ் அறையில் ஏற்கனவே இருந்த பேட்டரிகள் அனைத்தும் பழைய பேட்டரிகளாம். இந்த பேட்டரிகள் அனைத்தையும் மாற்றிவிட்டு புதிய பேட்டரிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒவ்வொரு பிரிவுகளிலும் உள்ள அறைகளில் உள்ள பழைய கம்ப்யூட்டர்கள் மாற்றப்பட்டு புதிய கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. எமெர்ஜென்சி தீ தடுப்பு சாதனங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய ஒரு தனிக் குழு அமைக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் செயல் இயக்குநரக அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எப்போ வரும் 2வது ரன்வே : வரும் ஏப்ரலில் 8000 அடி ரன்வே எப்படியும் பயன்பாட்டுக்கு வரும் என்று ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியாவின் ( இந்திய விமான நிலைய ஆணையம்) தலைவர் வி.பி.அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருந்தாலும் இந்த 2வது ரன்வேயில் 7 இருக்கைகளைக் கொண்ட விமானங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டால் 2வது ரன்வே முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பேக்கேஜ் ரேம்ப் பாதுகாப்பானதா?
சென்னை விமான நிலையத்தின் புதிய உள்நாட்டு முனையத்தின் கீழ் தளத்தில் பேக்கேஜ் ரேம்ப் அமைப்பது குறித்த பாதுகாப்பு தணிக்கை நடத்த வேண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணையத்திடம் சென்னை விமான நிலைய நிர்வாகம் கோரியது. அதன் அடிப்படையில் இந்திய விமான நிலைய ஆணையம் ஒரு தணிக்கை குழுவை ஏற்படுத்தியது. இந்த குழுவின் கூட்டம் மார்ச் 14ம் தேதி நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கூட்டம் திடீரென்று அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பேக்கேஜ் ரேம்ப் பாதுகாப்பாக உள்ளதா, பயணிகள் ஏறிச் செல்வதற்கு உகந்ததாக இருக்கிறதா என்று சான்று தர இந்த கூட்டம் நடந்தால்தான் முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

drug coupon card prescription drugs coupons drug discount coupons
sinemet megaedd.com sinemet

Like Us on Facebook Dinkaran Daily News