ஷிகார் தவான் உலக சாதனை
இந்தியா அபார ரன் குவிப்பு
கருத்துகள்
மொகாலி: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில், அறிமுக வீரராகக் களமிறங்கிய ஷிகார் தவான் 85 பந்தில் சதம் விளாசி உலக சாதனை படைத்தார். இந்தியா விக்கெட் இழப்பின்றி 283 ரன் குவித்துள்ளது. மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸி. அணி 2ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்திருந்தது. ஸ்மித் 58, ஸ்டார்க் 20 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஸ்மித் 92 ரன் (185 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டார்க் 99 ரன் (144 பந்து, 14 பவுண்டரி) எடுத்து துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டனர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அடுத்து முரளி விஜய்யுடன் இணைந்து அறிமுக வீரர் ஷிகார் தவான் (27 வயது, டெல்லி) இந்திய இன்னிங்சை தொடங்கினார். முரளி பொறுமையாக விளையாட, அதிரடி காட்டிய தவான் ஆஸி. பந்துவீச்சை சிதறடித்தார். பவுண்டரிகளாக விளாசித் தள்ளிய அவர் 85 பந்தில் சதம் அடித்து (21 பவுண்டரி), அறிமுக போட்டியில் அதிவேக சதம் விளாசிய வீரராக உலக சாதனை படைத்தார். மூன்றாம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 283 ரன் குவித்துள்ளது. விஜய் 83 ரன் (181 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), தவான் 185 ரன்னுடன் (168 பந்து, 33 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் உள்ளனர்.
பதற்றமாக இருந்தேன்: அரை சதம் மற்றும் சதத்தை நெருங்கியபோது உள்ளுக்குள் கொஞ்சம் உதறலாகவே இருந்தது. ஆனாலும், சமாளித்துக் கொண்டு விளையாடினேன். அதிரடியாக விளையாட வேண்டும் என்று எண்ணவில்லை. இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். அதற்காக தீவிரமாகப் பயிற்சி செய்து வந்தேன். அதற்கு பலன் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது மனைவி ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இரண்டு குழந்தைகளுடன் மெல்போர்னில் வசித்து வருகிறார். அவரது பிரார்த்தனை பலித்துவிட்டது. தொலைபேசியில் பேசியபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்தேன். , ஷிகார் தவான்
கை கொடுத்த அதிர்ஷ்டம்: இந்திய இன்னிங்சில், முதல் பந்தை வீச வந்த ஆஸி. வேகம் மிட்செல் ஸ்டார்க்கின் கையில் இருந்து தவறுதலாக நழுவிய பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. அப்போது பவுலிங் முனையில் இருந்த ஷிகார் தவான் ரன் எடுக்க ஆயத்தமாக கிரீசுக்கு வெளியே இருந்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் முறையிட்டிருந்தால் ஐசிசி விதிப்படி தவான் அவுட் என அறிவிக்கப்பட்டு இருக்கும். ஆனால், ஆஸி. வீரர்கள் முறையீடு எதுவும் செய்யவில்லை. கேப்டன் கிளார்க் மட்டும் சிரித்துக் கொண்டே ‘டிவி ரீப்ளே’ வேண்டும் என விளையாட்டாக சைகை செய்தார். ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் ஆக இருந்த தவான் அதிர்ஷ்டவசமாக தப்பியதுடன், அதிவேக சதம் விளாசி உலக சாதனையும் படைத்துவிட்டார்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!