ரூ85 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல

Date: 2013-03-17@ 03:01:23

சென்னை: மலேசியாவுக்கு விமானம் மூலம் கடத்த இருந்த ரூ85 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து பாங்காங் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற்றுவதற்காக வந்த பார்சல்களை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர். அப்போது ராயபுரத்தில் இருந்து மலேசியாவுக்கு பால் பவுடர் என்ற பெயரில் ஸ்பீடு போஸ்டில் பதிவு செய்யப்பட்டிருந்த பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை பிரித்தபோது, அதற்குள் கேட்டமைன் என்ற போதை பொருள் 8.5 கிலோ இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ஸி85 லட்சம். அதில், ராயபுரம் ஆதம்சாகிப் தெருவை சேர்ந்த சுந்தரம் என்ற பெயரும் செல்போன் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது. நம்பரை அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது செல்போன் நம்பர் போலியானது என்பதும், அப்படி ஒரு நபரே இல்லை என்பதும் தெரிந்தது. இதையடுத்து பார்சலை பெற்று கொள்ளும் முகவரியில் மலேசியாவில் உள்ள சிலாங் பகுதி சுகுமார் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதை தொடர்பு கொண்டபோது, அதுவும் போலியான முகவரி என தெரிந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட போதை பொருளை போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, கைப்பற்றப்பட்ட போதை பொருளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஏர் இந்தியா பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர். சுங்கத் துறை அதிகாரிகள் ரூ85 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை பெற்று கொண்டு போலியான முகவரியை பயன்படுத்தி பால்பவுடர் என்ற பெயரில் நூதன முறையில் மலேசிய நாட்டுக்கு கடத்த முயன்ற கும்பல் யார், எங்கு உள்ளனர். இதில், யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை விசாரித்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News