நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் அதிரடி குறைப்ப

Date: 2013-03-17@ 02:08:07

நாமக்கல்: பீகாரில் பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டை விலை 290 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் புருனியா மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் கடந்த மாதம் 27ம் தேதி கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து அந்த மாநிலத்தின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் பீதியால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள 700 கோழிப் பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் பறவை காய்ச்சல் தாக்கத்தால், ஏற்றுமதி அடியோடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிப்பண்ணையாளாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரத்தில் முட்டை விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையில் 15 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 290 காசாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மாதம் 385 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை கடந்த சில நாட்களுக்கு முன் 305 காசாக சரிந்தது. தற்போது பறவை காய்ச்சல் பீதியால் மேலும் 15 காசுகள் விலை குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஒரு கிலோ முட்டைக்கோழி விலை ரூ49 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ51 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News