SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் ‘ஆபரேஷன் தாமரை’ திட்டம்: ‘குதிரை பேரம் நடப்பதால் ராஜினாமாவை ஏற்காதீர்’...சபாநாயகரிடம் காங்., மஜத கட்சிகள் கடிதம்

2018-09-23@ 20:03:23

பெங்களூரு: கர்நாடகாவில் ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் காங்., மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜ முயற்சித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆட்சியை தக்கவைக்க சபாநாயகரிடம் குதிரை பேரம் நடப்பதாகவும்,  எம்எல்ஏக்கள் எவராவது ராஜினாமா கடிதம் கொடுத்தால், அதை ஏற்க வேண்டாம் என்றும், காங்., மஜத கட்சிகள் சார்பில், சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதல்வர் குமாரசாமி கடந்த மே மாதம் பொறுப்பேற்றார். இந்த ஆட்சி அமைந்து சுமார் 4 மாதங்களே ஆகின்றன.

ஆனால், கர்நாடகா அரசியலில் புதுப்புது குழப்பங்கள் வருவதால், அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகோதரர்களான ரமேஷ் ஜார்கிஹொளி, சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர், தங்களுக்கு முக்கிய அமைச்சர் பதவியும், தங்களது ஆதரவாளர்களுக்கு வாரியத் தலைவர் பதவியும் வழங்க வேண்டும் எனக்கூறி, முதல்வர் குமாரசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் அவர்களது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர், மகாராஷ்டிராவில் முகாமிட்டு கர்நாடக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, பெங்களூருவில்  காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவகுமார், தினேஷ் குண்டு ராவ், ஜி.பரமேஸ்வரா, சித்தராமையா ஆகியோருடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். எம்எல்ஏக்களை வளைக்கும் வேலையில் பாஜ ஈடுபட்டு, ஆபரேஷன் தாமரை என்ற பெயரில், குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தொடர்ந்து, வரும் 25ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, நேற்று மஜத கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், 32 எம்எல்ஏக்களில் 17 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கற்றனர். அவர்களில், 20 பேர் எங்கு சென்றனர் என்ற விபரம் மர்மமாக இருப்பதால், முதல்வர் குமாரசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அமைச்சரவை விரிவாக்கம்  தொடர்பாக, ரமேஷ் ஜார்கிஹொளி சகோதரர்களிடம், அக்டோபர் முதல்வாரம் வரை காத்திருக்குமாறு முதல்வர்  குமாரசாமி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ‘‘எங்கள் கட்சி எம்எல்ஏவிடம், ரூ.5 கோடி தருவதாக பாஜவினர் குதிரை பேரம் பேசியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பான ஆதாரங்களை, வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்து இருப்பதாகவும் கூறினார். மேலும், கருப்பு பணத்தை கொண்டு பாஜ தலைவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், ஆட்சி கவிழ்ப்பு நடக்கவாய்ப்பில்லை என்றும், இதுதொடர்பாக, சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மஜத சார்பில், சபாநாயகரிடம் வழங்கிய கடிதத்தில், ‘குதிரை பேரம் நடக்கிறது. அதனால், எம்எல்ஏக்கள் எவரேனும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால் ஏற்கக்கூடாது. இந்த விஷயம் தொடர்பாக, விசாரணை நடத்தாமல் எந்த  முடிவும் எடுக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்