மஞ்சள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

Date: 2013-03-16@ 00:06:46

ஈரோடு : ஈரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வெளி மார்க்கெட்டில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. மஞ்சள் விலை இந்த வார துவக்கத்தில் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.6,209 முதல் ரூ.7,695 வரை இருந்தது. கிழங்கு மஞ்சள் ரூ.5,809 முதல் ரூ.6,884 வரை இருந்தது.

நேற்று நடந்த ஏலத்தில் விவசாயிகள் 1,008 மூட்டை மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 946 மூட்டைகள் விற்பனையாகின. விரலி மஞ்சள் ரூ.7,109 முதல் ரூ.8,777 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.6,389 முதல் ரூ.7,099 வரையும் விலை போனது. நேற்று முன்தின விலையை விட நேற்று விரலி மஞ்சள் 1,082 ரூபாயும், கிழங்கு மஞ்சள் 215 ரூபாயும் அதிகரித்தது.

அதேபோல வெளி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் விரலி மஞ்சள் ரூ.5,706 முதல் ரூ.7,599 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.5,466 முதல் ரூ.6,599 வரையும் இருந்தது. நேற்று நடந்த ஏலத்தில் 1,513 மூட்டை வரத்து இருந்ததில் 239 மூட்டை விற்பனையானது. இதில் விரலி மஞ்சள் ரூ.5,899 முதல் ரூ.8,106 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.5,557 முதல் ரூ.6,909 வரையும் இருந்தது. விரலி மஞ்சள் 507 ரூபாயும், கிழங்கு மஞ்சள் 310 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு மஞ்சள் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News