SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரில் எரிபொருள் சேமிக்க சில எளிய வழிகள்

2018-09-23@ 00:52:02

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசலுக்கு செலவிடும்  தொகையை கட்டுக்குள் வைத்திருக்க சில டிப்ஸ்...

* சிலர் வீட்டுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக சின்ன சின்ன வேலைகளுக்குகூட காரை எடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஷாப்பிக் மற்றும் இதர வீட்டு வேலைகளுக்காக காரை எடுக்க வேண்டி  இருந்தால் முதலில் திட்டமிடுங்கள். அனைத்து வீட்டு வேலைகளையும் ஒரே தடவையில் செய்து முடிப்பது சாலச்சிறந்தது. காரணம், பல மணிநேரம் நிற்க வைக்கப்பட்டு இருக்கும் காரின் இன்ஜின் குளிர்ச்சியில் இருக்கும்போது,  ஒவ்வொரு முறையும் ஸ்டார்ட் செய்யும்போது சற்றே கூடுதல் எரிபொருள் செலவாகும். இதனால், மைலேஜ் குறையும். அருகில் இருக்கும் வீட்டு வேலைகளை செய்ய நடந்துசெல்வதும், இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதும்  சிறந்தது.

* தினசரி அலுவலகம் செல்வோர், போக்குவரத்து நெரிசல் நேரங்களை தவிர்த்து அரை மணி நேரம் முன்னதாக செல்வதும், சில கி.மீ கூடுதலாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் குறைவான சாலைகளை தேர்வுசெய்து  செல்வதும் ஓரளவு பயன்தரும். டிராபிக் ஜாமில் சிக்கினால், முதல் கியரில் வைத்து, கிளட்ச் அதிகம் பயன்படுத்தும்போது எரிபொருள் அதிகம் செலவாகும். அதேபோன்று, திரும்பும்போது சற்று தாமதமானாலும், போக்குவரத்து  நெரிசல் குறைவான நேரத்தில் வீடு திரும்புவது எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான வழியாக இருக்கும்.

* கார் மெதுவாக செல்லும்போது ஜன்னல் திறந்து வைத்திருந்தால் பரவாயில்லை. ஆனால், 20 கி.மீ வேகத்தை தாண்டிச்செல்லும்போது ஜன்னல்களை மூடிவிடுங்கள். அதேபோன்று, சன்ரூப் இருந்தாலும் மூடி வைப்பது நல்லது.  காரின் ஏரோடைனமிக்ஸில் பாதிப்பு ஏற்பட்டு அதிக எரிபொருள் செலவாகும்.

* காரில் கேரியர் மற்றும் ரூப் ஸ்கை பாக்ஸ் ஆகியவை இருந்தால் தேவைப்படாத நேரத்தில் கழற்றி வைத்துவிடுவது அவசியம். ஸ்கை பாக்ஸில் பொருட்கள் இல்லாமல் காலியாக இருந்தால்கூட அது ஏரோடைனமிக்ஸில்  பாதிப்பு ஏற்படுத்தி மைலேஜ் குறைய காரணமாகிவிடும். தற்போது வரும் கேரியர் மற்றும் ஸ்கை பாக்ஸ்களை எளிதாக கழற்றி மாட்ட முடியும். மேலும், கேரியர் மற்றும் ஸ்கை பாக்ஸ் எடையும் மைலேஜ் குறைய காரணமாக  இருக்கும்.

* காரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில், எக்ஸ்ட்ரா பம்பர் உள்ளிட்ட தேவையில்லாமல் ஏராளமான ஆக்சஸெரீகளை பொருத்துவதால் அதிக எடையை சுமக்கும் நிலை ஏற்படுகிறது. இதுவும் எரிபொருள் சிக்கன அளவில்  பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக இருக்கும். அதேபோன்று, சில பேர் கார் டிக்கியில் விளையாட்டு பொருட்கள், உடைமைகளை தேவையில்லாமல் போட்டு வைத்திருப்பதும் வழக்கம். இதுவும் மைலேஜ் குறைய வாய்ப்பை  ஏற்படுத்தும்.

* காரை எடுத்தவுடன் அதிக ஆக்சிலரேட்டரை கொடுத்து உறுமச்செய்து எடுப்பது சிலரின் வாடிக்கை. இதுவும் தேவையில்லாத வேலையே. காரை சில வினாடிகள் ஐட்லிங்கில் விட்டு எடுத்தால் போதுமானது. ஆக்சிலரேட்டரை  அதிகப்படியாக கொடுத்து எரிபொருளை வீணடிக்காதீர். இது எரிபொருள் விரயத்தால் பர்ஸுக்கு பதம் பார்ப்பதோடு, புகையால் காற்று மாசுபடுதலும் அதிகரிக்கிறது.

* பொதுவாக கார் குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும், சீரான வேகத்தில் இயக்குவது அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும். இதற்கு சரியான கியரில் இயக்குவது அவசியம். குறிப்பாக, டாப் கியரில் வைத்து சீரான வேகத்தில்  ஓட்டும்போது நீங்கள் நினைத்ததைவிட அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். நெடுஞ்சாலையில் செல்லும்போது மணிக்கு 80 கிமீ வேகத்தை கடைபிடிக்கும்போது மிக அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற  முடியும்.

* அடிக்கடி பிரேக் பிடிப்பதும் காரில் தேவையற்ற எரிபொருள் விரயத்தை ஏற்படுத்தும். முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளியில் செல்வதும், நிதானமான வேகத்தை கடைபிடிப்பதும், போக்குவரத்தை  கணக்கில்கொண்டு ஓட்டும்போதும் தேவையில்லாமல் பிரேக் பிடிப்பதை தவிர்க்க முடியும்.

* மேலே சொன்ன காரணங்கள் மட்டுமின்றி, காரின் பராமரிப்பும் மிக முக்கியம். தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரையின்படி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியான பராமரிப்பில் வைத்திருப்பதும் அவசியம். 5,000 கி.மீ  தூரத்திற்கு ஒருமுறை காருக்கு பராமரிப்பு பணிகள் செய்வது அவசியமாகும். கார் இன்ஜின் பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் எப்போதும் இருக்கவேண்டும். மேலும், டயரில் காற்றழுத்தம் அளவையும் அவ்வப்போது  பரிசோதிப்பது அவசியம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • germanybuilding

  ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

 • siriyaa

  ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

 • londonprotest

  பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்