SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிடிவியுடன் ரகசிய உறவில் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார் விக்கியானந்தா : wiki யானந்தா

2018-09-20@ 00:13:50

‘‘வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் யாரோ அக்கப்போர் செய்கிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நந்தனம் கோட்டத்தில் உள்ள லாயிட்ஸ் காலனியில் அரசு அதிகாரிகள். அரசியல் பிரமுகர்கள் பெருமளவில் குடியிருந்து வருகிறார்கள். இந்த காலனியில் ஏ.ஆர்.ஓ. ஒருவர் செய்யும்  அத்துமீறல்களுக்கு அளவே இல்லையாம். இந்த காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளியார் வாகனங்கள் வாடகை கார்கள், வேன்கள், பஸ்கள் இரவில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இவற்றிற்கு ₹1500 முதல் 3 ஆயிரம் வரை  மாதம்தோறும் வசூல் செய்யப்படுகிறதாம். இதன் காரணமாக இரவில் குற்றச் செயல்கள் பெருகி வருகிறதாம். இது தவிர வீடு ஒதுக்கீடு பெற்றவர்களிடம் நீங்கள் உள்வாடகைக்கு விட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. நடவடிக்கையை தவிர்க்க என்று கூறி ₹50 ஆயிரம் வரை மிரட்டி வாங்கப்படுகிறதாம். பணம் தராதவர்கள் விசாரணை  விளக்கம் என்று இழுத்தடிக்கப்படுகிறார்களாம். இறந்த ஒதுக்கீட்டுதாரர்களின் வாரிசுகளிடம், நடவடிக்கை எடுத்து வீட்டை திரும்ப பெறாமல் இருக்க ₹1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பெறப்படுகிறதாம்.

 யாராவது கேட்டால் நான் அமைச்சருக்கு வேண்டியவன் என்னை ஒன்றும் செய்ய முடியாது. வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுகிறாராம். இதனால் அதிருப்தியுற்ற குடியிருப்புதாரர்கள் முதல்வரை சந்தித்து புகார் மனு தர திட்டமிட்டுள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘சிறைகளில் அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் எப்பிடியிருக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் செல்போன், டிவி, ஏசி, ஓட்டல்களில் இருந்து உணவு என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக படத்துடன் செய்திகள் வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் 18 டிவிக்கள், கேபிள் இணைப்புகள், எப்எம் ரேடியோக்கள், செல்போன் மற்றும் கைதிகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். சோதனையில், தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.  இதனால் சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை குறித்த செய்திகள் படங்களுடன் வெளியானதில் உஷாரான சிறைத்துறை போலீசார் கைதிகளுக்கு வழங்கியிருந்த சிறப்பு சலுகைகளையும், செல்போன்களையும் உடனடியாக  அவர்களிடம் இருந்து பறித்துக் கொண்டதே இதற்கு காரணம். மேலும் ஒரு சில சிறைக்காவலர்கள், கைதிகளிடம் இன்னும் ஓரிரு மாதத்திற்கு சிறைக்குள் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கிடைக்காது. புழல் சிறையால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கி பிரச்னை  குறைந்தவுடன் மீண்டும் வழக்கம் போல சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்களாம். அதனை கைதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டிடிவியுடன் புதுவை எம்எல்ஏக்கள் ரகசிய உறவில் இருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உண்மைதான். விரிவா சொல்றேன்.. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு புதுவை அதிமுகவிலும் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி அணி என மூன்று அணிகளாக செயல்பட்டு வந்தது. பின்னர் ஓபிஎஸ்,  எடப்பாடி இணைந்தாலும், புதுவையில் தொடர்ந்து மூன்று அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களான அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகிய 4 பேரும் மாநில  செயலாளர் புருசோத்தமன் சேர்ந்து கொண்டு எடப்பாடி அணி பக்கம் சாய்ந்தனர். இவர்கள் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். தனிதனியாக பேட்டியும் அளித்து வருகின்றனர்.

ஆனால் 4 எம்எல்ஏக்களும், எடப்பாடியுடன் நெருங்கிய உறவு கிடையாது. இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடியிடம் ஒட்டிக் கொண்டுகிறார்கள். மற்றபடி டிடிவியுடன் நான்கு எம்எல்ஏக்களும் ரகசிய உறவு வைத்திருப்பதாக  அவரது நெருங்கிய நண்பர்களே கூறுகின்றனர்.முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்திசேகர் நடத்தும் நிகழ்ச்சியில் 4 எம்எல்ஏக்களும் பங்கேற்பதில்லை. மாநில செயலாளர் புருசோத்தமனும் என்வழி தனி வழி என்பது போல் செயல்படுகிறார். 4 எம்எல்ஏக்களுக்கும் டிடிவி தினகரன் மீது  ஒரு நெருங்கிய பாசம் இருப்பதாகவே பேசப்படுகிறது. எது, எப்படி இருந்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏக்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடும்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்