SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு

2018-09-16@ 17:55:31

சென்னை: சென்னையில் 5 இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ஊர்வலம் புறப்படும் இடம் முதல் கரைக்கும் இடம் வரை கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 13ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகரில் பொது இடங்களில் 2,520 விநாயகர் சிலைகள் வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். அதன்படி இந்து அமைப்புகள், கோயில் நிர்வாகம் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 13ம் தேதி முதல் 17ம்தேதி வரை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர். அதைதொடர்ந்து பொது மக்கள் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் நேற்று கரைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மக்கள் முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உட்பட இந்து அமைப்புகள் சென்னை முழுவதும் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி இன்று காலை இந்து அமைப்புகள் சார்பில் பெருமளவில் விநாயகர் சிலைகள் ஈ.வே.ரா சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,

கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கதீட்ரல் சாலை, இராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டி.ஜி.எஸ் தினகரன் சாலை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கிரைன் உதவியுடன் பலத்த பாதுகாப்புடன் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. அதேபோல், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டது.

 விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையிலும், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊர்வலம் அமைதியான முறையில் நடப்பதற்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் 3 கூடுதல் கமிஷனர்கள், 6 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் பிரச்னை ஏற்படும் இடங்களான ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடி படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

விநாயகர் சிலைகள் ராட்சத கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டது. கடலில் யாரும் இறங்காத வகையில் சிலைகள் கரைக்கப்படும் பட்டினப்பாக்கம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் உட்பட 5 இடங்களில் தடுப்புவேலிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்