SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளப்பெருக்கை அடுத்து அடுத்த அதிர்ச்சி கேரளாவில் வேகமாக வற்றும் ஆறு, குளங்கள்: கடும் வறட்சி அபாயம்

2018-09-16@ 01:16:44

திருவனந்தபுரம்:  கடந்த மாதம் கேரளாவை மிரட்டிய பேய்மழையின் கோர தாண்டவத்தின் பிடியிலிருந்து கேரள மக்கள் இன்னும் மீளவில்லை.   இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா ஆகிய 6 மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, நிலங்களை இழந்தனர். சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். கேரளாவில் ஓடும் அனைத்து ஆறுகளும் அபாயகட்டத்தை தாண்டி வெள்ளப்பெருக்குடன் பாய்ந்தன.   கேரளாவிலுள்ள பெரிய அணையான இடுக்கி அணையில், வரலாற்றில் முதல்முறையாக 5 மதகுகளும் திறக்கப்பட்டன. கேரளாவில் சிறியதும், பெரியதுமாக 50க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த மழைக்காலத்தில் தான் முதல்முறையாக இந்த அனைத்து அணைகளும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டன.கேரளாவில் இந்த மழைக்காலத்தில் மட்டும் 150 சதவீதத்திற்கும் அதிகமாக மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 100 ஆண்டுகளில் இப்படி ஒரு மழையை கேரளா பார்த்ததில்லை. கேரளா பொதுவாகவே அதிக மழை பெறும் மாநிலங்களில் ஒன்றாகும். ஜூனில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும். பின் அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை  டிசம்பர் வரை நீடிக்கும்.இப்படி வருடத்தில் 7 மாதங்கள் வரை மழை பெய்வதால் இந்த மாநிலத்தில் வறட்சி என்பது மிகவும் அபூர்வமான சம்பவமாகும். ஆனால் கடந்த மாதம் பெய்த பேய்மழையின் சுவடு மறைவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கேரளாவை மிரட்ட கடும் வறட்சி வரப்போவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் வரை கரைபுரண்டு ஓடிய பல ஆறுகளிலும், கால்வாய்களிலும் தற்போது தண்ணீர் வற்றியது தான் அதற்கு காரணமாகும்.

பாரதப்புழா, இருவஞ்சி, கோரப்புழா, பூனூர் புழா உட்பட பல ஆறுகள் கோடைகாலத்தைப் போல இப்போதே வறண்டு காணப்படுகின்றன. கோழிக்கோட்டில் ஓடும் இருவஞ்சிப் புழா ஆறு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் செப்டம்பர் மாதத்திலேயே வறண்டு விட்டது. கடந்த வாரம் வரை கரைபுரண்டு ஓடிய பல ஆறுகள் இப்படி திடீரென வறண்டு போனது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மத்திய நீர் ஆதார ஆராய்ச்சி மேலாண்மை மைய அதிகாரிகளுக்கு கேரள அரசு தகவல் கொடுத்தது. இதையடுத்து இந்த மையத்தின் வல்லுநர்கள் கேரளா சென்று வறண்ட ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆராய்ச்சியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பொதுவாக ஆறுகளின் அடிப்பகுதியில் நிலத்தடி நீரை குறையாமல் காக்கும் ஒரு மேலடுக்கு காணப்படும். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த மேலடுக்கு பகுதி அடித்துச் செல்லப்பட்டது தான் ஆறுகள் வறண்டு போவதற்கு காரணமாக அமைந்துள்ளது. சாதாரணமாக மழைக்காலங்களில் இந்த மேலடுக்கு அடித்துச் செல்லப்படுவது வழக்கமானது தான் என்றாலும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 100 செ.மீ. ஆழத்தில் மேலடுக்கு பகுதி அடித்துச் செல்லப்பட்டு விட்டது.தற்போது வறண்டுள்ள ஆறுகளை ஒட்டியுள்ள கிணறுகள் மற்றும் குளங்களிலும் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவது வல்லுனர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் குறித்து அறிய மேலும் கூடுதல் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம் என்று நீர் ஆதார ஆராய்ச்சி மேலாண்மை மைய அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

கேரளாவில் கோடை காலமாக இருந்தால் கூட எங்காவது ஒரு இடத்தில் ஒரு நாளாவது மழை பெய்யாமல் இருக்காது. ஆனால் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இதுவரை கேரளாவில் ஒரு பகுதியில் கூட மழை பெய்யவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேரளா முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கோடையை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வருகிறது. இதுவும் நீர் நிலைகள் வற்ற ஒரு காரணமாக அமைந்துள்ளது.அடுத்த மாதம் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வேண்டும். இந்த பருவமழை ஒருவேளை பொய்த்தால் கேரளாவுக்கு அடுத்த அதிர்ச்சி கடும் வறட்சியாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். டிசம்பர் மாதத்திலேயே குடிநீருக்கு கூட திண்டாட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்