SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்: திமுக தலைமையிலான அணியில் சேர்ந்து பாஜ, அதிமுக அரசுகளை வீழ்த்துவோம்: வைகோ தியாகத்துக்கு துரைமுருகன் பாராட்டு

2018-09-16@ 00:53:20

ஈரோடு: திமுக தலைமையிலான அணியில் சேர்ந்து பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகளை வீழ்த்துவோம்’’ என்று ம.தி.மு.க. மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியார்-அண்ணா பிறந்தநாள், ம.தி.மு.க. வெள்ளி விழா, வைகோ பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழா மாநாடு, ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். மாநாட்டை கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி திறந்து வைத்தார். கட்சி கொடியை துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். தந்தை பெரியார் சுடரை புலவர் செவந்தியப்பன், அண்ணா சுடரை செஞ்சிமணி ஆகியோர் ஏற்றி வைத்தனர். தந்தை பெரியார் படத்தை திருப்பூர் துரைசாமி, அண்ணா படத்தை பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:  
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கும் புகழஞ்சலி செலுத்துவது, மக்கள் ஆட்சி தத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்கி வருகிற மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வரும் அ.தி.மு.க. அரசை வீழ்த்துவதற்கு தி.மு.க. தலைமையில், தோழமை கட்சிகளுடன் அணி சேர்வது, மத்திய அரசு பள்ளிகளில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.   காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட வேண்டிய சட்ட பொறுப்பை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவிலும், ராசி மணலிலும் தடுப்பு அணை கட்ட கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. தமிழக அரசு அணைப்பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தை தமிழக அரசு வலிந்து செயல்படுத்த முனைவதற்கு மதிமுக கண்டனம் தெரிவிப்பதுடன், இத்திட்டத்தை கைவிட வேண்டும். அதிமுக அரசின் அடக்கு முறைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது. லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என கேட்டு கொள்வது, உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துரைமுருகன் பேச்சு: மாநாட்டில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்து பொருளாளர் துரைமுருகன் பேசுகையில், ``வைகோவின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் அவர் ஏற்படுத்திய அதிர்வு ஏராளம். 50 ஆண்டுகாலம் எரிமலை மீது நடந்து வந்ததுதான் அதிகம். வைகோவின் தியாகங்கள் வீண் போகாது.

அரசியலில் பிரிவுகள் வரலாம். ஆனால் கொள்கையில் என்றைக்கும் பிரிவு வரக்கூடாது. தி.மு.க.வில் இருந்து வைகோ பிரிந்து சென்றபோதிலும் ஒருபோதும் தன்னுடைய கொள்கையில் மாறவில்லை. வைகோ அரசியலில் எந்த லாபத்தையும் எதிர்பார்க்காமல் தியாகம் செய்தவர்’’ என்று புகழாரம் சூட்டினார். கலந்து கொண்டவர்கள்:  மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஜித்மேமன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aalangatty_kanamalai11

  டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

 • northensnow

  பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • baloon_worstand

  ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

 • redmoon_lunar12

  சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்