SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த தேர்தலுக்கும் திமுக தயாராக இருக்கிறது கரன்சி எண்ணியவர்கள் கம்பி எண்ணுவார்கள்: விழுப்புரம் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

2018-09-16@ 00:46:33

விழுப்புரம்:  தந்தை பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா விழுப்புரத்தில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர் பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருதும், பொன்.ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருதும், குத்தாலம் கல்யாணத்துக்கு கலைஞர் விருதும், புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருதும், கவிக்கொண்டல் செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருது வழங்கினார்.

பின்னர், முரசொலி அறக்கட்டளை சார்பில் மாநில அளவில் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு நற்சான்று மற்றும் ரொக்கப்பரிசும், பதக்கங்களும் வழங்கினார்.

பின்னர், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 2003ம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த மண்டல மாநாட்டிற்கு முதன் முதலாக அந்த மாநாட்டுக்கு தலைமை பொறுப்பை ஏற்றேன். அதன்பிறகு இது, நான் தலைவராகி கலந்து கொள்கிற முதல் கூட்டம். என்னால் விழுப்புரத்தை மறக்க முடியாது. மறக்கவும் மாட்டேன். அந்த மாநாட்டிலே பேசிய கலைஞர் என்னை பாராட்டினார். ஒரு தலைவருக்கு நிகரான தொண்டனாக என்னை பாராட்டினார். 26 வயதிலேயே நான் மாநாடுகளுக்கு பொறுப்பு ஏற்று இருக்கிறேன். ஆனால், உனக்கு 50 வயதில்தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாமதமாக கிடைப்பதற்கு வலு அதிகம் என்று கலைஞர் சொன்னார். அதன்படியே நான் வலிமையோடு பேசுகிறேன்.  எல்லோரும் அங்கீரித்து விட்டார்கள் என்று நினைத்து கொண்டு நடக்கக்கூடாது. கட்சியில் யாரோ ஒருவர் அங்கீகரிக்க மறுத்து இருக்கலாம்.

அவர்களுடைய அங்கீகாரத்தையும் நீ பெற வேண்டும் என்ற கட்டளைல கல்வெட்டுகள்போல என் காதில் ஒலிக்கிறது. கலைஞர் தலைவரானபோது முதலில் தற்போது உள்ள பேராசிரியர் ஏற்று கொள்ளாததுபோல் இருந்தார். என்னுடைய செயல்பாட்டை பார்த்து என்னை ஏற்று கொண்டார் என கலைஞர் சொன்னார். நான் அவரைவிட கொடுத்து வைத்தவன். என்னை தலைவராக ஆக்கியதே பேராசிரியர்தான். மதவாத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்: நம்முடை கொள்கைகளான சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம் ஆகியவற்றுக்கு மதவாத ஆட்சியால் சோதனை வந்து இருக்கிறது. அதற்கு ஒரு முடிவு கட்டுவதில் நாம் உறுதியாக  இருக்க வேண்டும். மதச்சார்பற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டும். மதவாத பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் இது. பாசிச ஆட்சியான மோடி அரசும், மாநிலத்தில் பேடி அரசும் செயல்படுகிறது. இதற்காக வேதனைப்படுகிறேன்.

நாங்கள் காவி புரட்சி செய்வோம் என்று கூறி வருகிறார்கள். தேர்தல் நிதி கொடுத்த வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாக தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்றார்கள். அவர்கள் இந்துக்கள் இல்லையா? நீட் தேர்வை எதிர்த்து இறந்து போன பிரதிபா, கிருஷ்ணசாமி இந்துக்கள் இல்லையா? நெடுவாசல், கதிராமங்கலத்தில் தினம் தினம் செத்து போராடுகிறார்களே அவர்கள் இந்துக்கள் இல்லையா? விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் நிர்வாண போராட்டம் நடத்தினார்களே... அவர்கள் இந்துக்கள் இல்லையா? இந்த ஆட்சியில் இம் என்றால் சிறைவாசம்? ஏன் என்றால் துப்பாக்கிச்சூடு.  தமிழக மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள். இனி ஒருபோதும் ஏமாற  மாட்டார்கள். அவர்களுக்கு பாடம் புகட்ட நேரம் நெருங்கி வருகிறது. மத்திய பாசிச மதவெறி ஆட்சி, மாநிலங்களை அடக்கி ஆள்கிறார்கள். இதில் முதலிடம் தமிழ்நாட்டுக்குதான்.

ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், கொள்ளையடிப்பதுதான் லட்சியம். ஊழல் செய்வதே அன்றாட பணி. நாளொரு ஊழல், பொழுதொரு ஊழல். குட்கா, முட்டை, ஸ்மார்ட் சிட்டி ஊழல், வாக்கி டாக்கி ஊழல். நடந்தால் ஊழல், நின்றால் ஊழல், படுத்தால் ஊழல். முதல்வர், துணை முதல்வர்களுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் ரெய்டு. ஏன் அமைச்சர் வீட்டில் ரெய்டு. அதனைவிட தலைமை செயலர், வெட்கக்கேடாக டி.ஜி.பி. வீட்டில் ரெய்டு நடக்கிறது. விரைவில் எல்லோரும் சிக்க போகிறார்கள்.  கரன்சி எண்ணியவர்கள்  எல்லாம் கம்பி எண்ணுவார்கள். தேர்தலுக்கு நாம் தயாராகி விட்டோம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல் என அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம். ஊழல் ஆட்சி ஒழியட்டும். தி.மு.க. ஆட்சி மலரட்டும்.

இவ்வாறு அவர்  பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ.  ராசா, மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா மற்றும் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேலு, காந்தி, ஜெ.அன்பழகன், மஸ்தான், உதயசூரியன், சீத்தாபதி சொக்கலிங்கம், வசந்தம் கார்த்திகேயன், மாசிலாமணி, கணேசன் மற்றும் ஸ்டாலின் நற்பணிமன்றத் தலைவர் கௌதமசிகாமணி, மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலைஞர் பிறந்தநாள்   தமிழ் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்
மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘`ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்த நாளை தமிழ் செம்மொழி நாளாக கொண்டாடுவோம். அவர் பெயரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறக்கட்டளை தொடங்கி  மருத்துவம், கல்வி ஊக்கத்தொகை, ஐஏஎஸ் அகாடமி உள்பட பல துறைகளில் சிறந்து  விளங்குபவர்களுக்கு இளம் சாதனையாளர் விருதும், பத்திரிகை, நாடகம், சிறுகதையில் சாதிப்பவர்களுக்கு திராவிட படைப்பாளிகள் விருதும், இயக்கமே தான் வாழ்க்கை என சிறப்பாக ஒன்றிய, நகர, பகுதி வட்டம் பேரூர் அளவில் செயல்படுபவர்களுக்கு விருது வழங்கப்படும். அதேபோல் சமூக பணி மேற்கொள்ளும் தொண்டர்களுக்கு சிறப்பு  விருதுகளும் வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-11-2018

  14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kumbamelawork

  அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

 • karwasaathhus

  கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

 • statuevisitors

  உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

 • californiafire

  கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்