SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாதி, அந்தஸ்து மீறி மகளுடன் திருமணம் நடுரோட்டில் கர்ப்பிணி கண்முன் கணவன் வெட்டி ஆணவக்கொலை

2018-09-16@ 00:44:10

* ஆள் வைத்து பழிதீர்த்தார் பெண்ணின் தந்தை
* 8 தனிப்படை அமைத்து கொலையாளிக்கு வலை

திருமலை: தெலங்கானாவில் சாதி, அந்தஸ்து மீறி மகளை திருமணம் செய்து கொண்ட மருமகனை மாமனார் ஆள் வைத்து நடுரோட்டில் வெட்டி ஆணவக்கொலை செய்தார். கர்ப்பிணி மனைவி கண்முன் நடுரோட்டில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், மிரியாலகூடாவை சேர்ந்தவர் பிரனாய் நாயக்(30), சாப்ட்வேர் இன்ஜினியர். அதே ஊரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மாருதிராவ். இவரது மகள் அமிர்தவர்ஷினி (20). பிரனாய் நாயக்கும், அமிர்தவர்ஷினிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு சாதி மற்றும் அந்தஸ்து தடையாக இருந்ததால் இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எதிர்ப்பு மீறி இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டனர்.  ஐதராபாத்தில் தங்கி அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பிரனாய் நாயக் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கர்ப்பமான தனது மனைவி அமிர்தவர்ஷினியை மருத்துவ பரிசோதனைக்காக நேற்றுமுன்தினம் மிரியாலகுடா தனியார் மருத்துவமனைக்கு பிரனாய் நாயக் அழைத்துச்சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி, நடுரோட்டில் திடீரென பிரனாய் நாயக்கை வழிமறித்து அவரது மனைவி கண்முன்னே கழுத்து, தலை உட்பட பல்வேறு இடங்களில்  சரமாரியாக வெட்டினார். அதிர்ச்சியடைந்த அமிர்தவர்ஷினி, செய்வதறியாமல் கதறி அழுதார். இந்த பயங்கர சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிரனாய் நாயக் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த பிரனாய் நாயக்கின் பெற்றோர், மகனின் சடலத்தை கண்டு கதறி அழுதனர். அவர்கள் மிரியாலகூடா போலீசில் புகார் செய்தனர். அதில், ‘இந்த கொலைக்கு காரணம் அமிர்தவர்ஷினியின் தந்தை மாருதிராவ்தான்.

தனது பேச்சை மீறி சாதி, பொருளாதாரத்தில் குறைந்தவரான பிரனாய் நாயக்கை திருமணம் செய்துகொண்டதால் அவர் கடும் ஆத்திரத்தில் இருந்தார். எனவே ரவுடிகளுக்கு பணம்  கொடுத்துஅவர் தான் எங்கள் மகனை கொலை செய்துள்ளார்’ என தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை மீட்டு, பிரேத  பரிசோதனைக்காக நல்கொண்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மகள் அமிர்தவர்ஷினியை பிரிந்துசெல்லும்படி அவரது தந்தை மாருதிராவ் மற்றும் சித்தப்பா சரவண் ஆகியோர், மருமகன் பிரனாய் நாயக்கை கடந்த 3 மாதங்களாக மிரட்டி வந்தது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் 8 தனிப்படைகள் அமைத்து மாருதிராவ், சரவண் மற்றும் கொலையாளியை தேடிவருகின்றனர். கண்ணெதிரே கணவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்த அமிர்தவர்ஷினி நல்கொண்டா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்ததில், பிரனாய் நாயக்கை கடந்த 1 மாதமாக கொலையாளிகள் பின்தொடர்ந்தது வந்துள்ளனர். கடந்த மாதம் 22ம் தேதி கூட பிரனாய் காரில் இருந்து தன் வீட்டுக்கு செல்லும்போதும் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.  

நேற்றுமுன்தினம் பிரனாய் நாயக் மருத்துவமனைக்கு அமிர்தவர்ஷினியுடன் காரில் செல்வதை அமிர்தாவின் தந்தை மாருதிராவ் கொலையாளிகளுக்கு போனில் தகவல் தெரிவித்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த ஆணவக்கொலையை கண்டித்து  நல்கொண்டாவில் எதிர்க்கட்சியினர் நேற்று பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர்.  இந்த பந்த்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

கர்ப்பிணி மனைவி கண்ணீர் பேட்டி
நல்கொண்டா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமிர்தவர்ஷினி கூறுகையில், ‘‘எனது தந்தையும், சித்தப்பாவுமே இந்த கொலைக்கு காரணம். மகிழ்ச்சியுடன் வாழலாம் என நினைத்தோம். ஆனால் இப்படி செய்துவிட்டனர். நான் 5 மாத கர்ப்பணியாக இருப்பது தெரிந்த எனது தந்தை கருவை கலைத்துவிட்டு தன்னுடன் வருமாறு அழைக்கிறார். கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பு எனக்கு போன் செய்து வருமாறு வற்புறுத்தினார். ஆனால் காதல் திருமணம் செய்த நான் கணவருடன் வாழவே விருப்பப்பட்டேன். அதற்குள் கொலை செய்துவிட்டனர்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்