SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் கரோலினா நகரில் புளோரன்ஸ் புயலுக்கு 5 பேர் பலி: பல பகுதிகள் வெள்ளக்காடானது

2018-09-16@ 00:40:37

வில்மிங்டன்: அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை தாக்கியுள்ள புளோரன்ஸ் புயலுக்கு ஒரு குழந்தையும், தாயும் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்ப்பதால் வட, தெற்கு கரோலினா மாகாணங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. அட்லாண்டிக் கடலில் உருவான தீவிரமான புளோரன்ஸ் புயல், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியான வடக்கு கரோலினாவை நேற்று முன்தினம் தாக்கியது. 4ம் நிலை புயலாக இருந்த புளோரன்ஸ் வலுவிழந்து 1ம் நிலை புயலானதால், அதன் வேகம் குறைந்து மணிக்கு 150 கி.மீ வேகமாக இருந்தது. இதனால், மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. புயலைத் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
இந்த புயல் தற்போது நகர்ந்து தெற்கு கரோலினாவை மையம் கொண்டுள்ளது. நேற்று தெற்கு கரோலினா மாகாணத்தை அடைந்தபோது, வெப்ப மண்டல புயலாக வலுவிழந்த போதிலும் கடும் சேதத்தை விளைவித்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வடக்கு, தெற்கு கரோலினா மாகாண பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளன.

வடக்கு கரோலினாவில் 7 லட்சம் வீடுகளும், தெற்கு கரோலினாவில் சுமார் 2 லட்சம் வீடுகளும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி உள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. புளோரன்ஸ் புயலுக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். வடக்கு கரோலினாவின் நியூ ஹனோவர் கவுன்சியில் புயலால் மரம் சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் குழந்தையும், தாயும் பரிதாபமாக இறந்தனர். செல்லப்பிராணியான நாயை தேடி வெளியில் வென்றவர் மீது மரம் விழுந்து பலியானார். மூதாட்டி ஒருவர் மாரடைப்பாலும், மற்றொருவர் ஜெனரேட்டர் இயக்கும் போது மின்சாரம் பாய்ந்து பலியானார்.

வெர்ஜினியா மாகாணம் நோக்கி நகரும் இப்புயல் வலுவிழந்த போதிலும் தொடர்ந்து கடும் சேதத்தை விளைவிக்கக் கூடியது என்றும், உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அடுத்த 36 மணி நேரத்திற்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் வடக்கு கரோலினா ஆளுநர் ராய் கூப்பர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, வடக்கு, தெற்கு கரோலினாவில் புயலுக்கு முன்பாக 17 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அதிபர் மாளிகை, ‘‘மீட்பு பணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் அடுத்த வாரம் அதிபர் டிரம்ப் பார்வையிட வருவார்’’ என அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்சில் மங்குட் புயல்
பிலிப்பைன்சில் இந்த ஆண்டின் மிகப்பெரிய புயலான மங்குட் தாக்கிக் கொண்டிருக்கிறது. மணிக்கு 260 கிமீ வேகத்தில் வீசும் புயலால் மரங்கள் வேரோடு சரிந்துள்ளன. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை காரணமாக பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 4 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர். புயலுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பிலிப்பைன்சில் 20க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aalangatty_kanamalai11

  டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

 • northensnow

  பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • baloon_worstand

  ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

 • redmoon_lunar12

  சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்