SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதற்றம் நீடிப்பதால் போலீஸ் நடவடிக்கை செங்கோட்டையில் மீண்டும் 144 தடை உத்தரவு அமல்: தாக்குதலில் ஈடுபட்ட 25 பேர் கைது

2018-09-16@ 00:39:40

செங்கோட்டை: செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனால், அங்கு மீண்டும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில், விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க, நேற்று முன்தினம் மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது பம்ப்ஹவுஸ் ரோடு பகுதியில் திடீரென ஊர்வலத்தினர் மீது கற்கள் வீசப்பட்டன. பதிலுக்கு அவர்களும் கற்களை வீசினர். இதையடுத்து போலீசார் இரண்டு முறை தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தனர். கல்வீச்சில் 4 பேர் காயமடைந்தனர்.
விநாயகர் சிலைகளை குண்டாற்றில் கரைத்தபோது பைக்கில் வந்த இருவர், மேலூர் சேனைத்தலைவர் விநாயகர் கோயில் தெருவில் உள்ள சுப்பையா என்பவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர்.

இரவு முழுவதும் போலீசார், செங்கோட்டை மேலூர் சேனை விநாயகர் கோயில் தெருவில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு செங்கோட்டை பார்டர் பகுதியில் உள்ள அச்சக கடையின் ஷட்டர் வழியாக  மர்ம நபர்கள் இருவர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக காற்றில் தீ அணைந்துவிட்டது. இந்நிலையில், நேற்று மதியம் கடையநல்லூர் எம்எல்ஏ முகமது அபுபக்கர், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். விநாயகர் ஊர்வலம் முடிந்ததை  தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி தாலுகாவில் போடப்பட்டிருந்த 144 தடை  உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து,  செங்கோட்டையில் கடைகள் திறக்கப்பட்டது. ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.  இதனிடையே ஊர்வலத்தில் கல்வீசியது, பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக  செங்கோட்டை பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து  விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்,  இப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டதால், 144 தடை உத்தரவு நேற்று இரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

இது, வரும் 22ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் நடந்த மோதல், மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.  தென்காசியில் 2 கடைகளுக்கு தீவைப்பு: தென்காசி கன்னிமாரம்மன் கோயில் தெருவில் கடை நடத்தி வருபவர் ஜீவன்ராம் (45). நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது கடையில் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதேபோல் தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் பாஜ முன்னாள் நகர தலைவர் ராஜாசிங் என்பவரது பலசரக்கு கடையும் எரிந்தது. போலீஸ் விசாரணையில், இரண்டு கடைகளிலுமே பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்திருப்பது தெரிய வந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china_cloning11

  செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

 • snow_river_falls11

  மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

 • christmas_planeealm1

  உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

 • sutrula_12Icehotel1

  சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

 • mumbai_theevibathu11

  மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்