SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை மோதல்: துபாயில் மாலை 5 மணிக்கு ஆரம்பம்

2018-09-15@ 03:30:42

துபாய்: இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடர், துபாயில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. மாலை 5.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 1984ம் ஆண்டு முதல் முறையாக ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது. இதுவரை 13 தொடர்கள் நடைபெற்றுள்ளன. இந்தியா அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளன. 12 தொடர்கள் 50 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், கடைசியாக 2016ல் நடந்த தொடர் மட்டும் டி20 போட்டியாக நடந்தது.

தற்போது 14வது ஆசிய கோப்பை தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட மொத்தம் 6 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றில் களமிறங்குகின்றன. இறுதிப் போட்டி 28ம் தேதி நடைபெறும். ரசிகர்கள் ஆர்வம்: ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 18ம் தேதி ஹாங் காங் அணியையும், 19ம் தேதி பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்கிறது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதல், இந்த தொடரில் லீக் சுற்று, சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டி என 3 முறை நிகழ்வதற்கான வாய்ப்பு உள்ளதால் எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது.

கோஹ்லி இல்லை: இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ள நிலையில், கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஆசிய கோப்பையில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளதால், கேப்டனாக ரோகித்தின் செயல்பாடும் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை தொடருக்கான ஒத்திகையாகவே அமைந்துள்ள இந்த தொடரில், சரியான நடுவரிசை பேட்ஸ்மேன்களை அடையாளம் காண்பதில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தும். மேலும், அதிரடி பேட்ஸ்மேன் டோனியை எந்த இடத்தில் களமிறக்குவார்கள் என்பதும் சுவாரசியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இம்முறை பாகிஸ்தான் அணி முழு பலத்துடன் களமிறங்குவதால், இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கற்றுக்குட்டி அணியான ஹாங்காங் தவிர்த்து இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் கோப்பையை வெல்ல வரிந்துகட்டுகின்றன. இன்று மாலை 5.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. எல்லா போட்டிகளுமே இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு தொடங்குவது குறிப்பிடத்தக்கது. நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

அணிகள்

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், அம்பாதி ராயுடு, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், ஷர்துல் தாகூர், தினேஷ் கார்த்திக், கலீல் ஆகமது. பாகிஸ்தான்: சர்பராஸ் அகமது (கேப்டன்/ கீப்பர்), பகார் ஸமான், ஷான் மசூட், பாபர் ஆஸம், ஹரிஸ் சோகைல், இமாம் உல் ஹக், ஆசிப் அலி, சதாப் கான், முகமது நவாஸ், பாகீம் அஷ்ரப், ஹசன் அலி, முகமது ஆமிர், சோயிப் மாலிக், ஜுனைத் கான், உஸ்மான் கான், ஷாகீன் அப்ரிடி.

வங்கதேசம்: மஷ்ராபி மோர்டசா (கேப்டன்), தமிம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரகிம் (விக்கெட் கீப்பர்), மகமதுல்லா ரியாத், மோமினுல் ஹக், ஆரிபுல் ஹக், முகமது மிதுன், முஸ்டாபிசுர் ரகுமான், ருபெல் உசேன், மெகதி ஹசன் மிராஸ், மொசாடெக் உசேன், நஜ்முல் இஸ்லாம், நஜ்முல் உசேன் ஷான்டோ, அபு ஹைதர் ரோனி.  இலங்கை: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா, திசாரா பெரேரா, தசுன் ஷனகா, தனஞ்ஜெயா டி சில்வா, அகிலா தனஞ்ஜெயா, தில்ருவன் பெரேரா, அமைலா அபான்சோ, கசுன் ரஜிதா, சுரங்கா லக்மல், துஷ்மந்த சமீரா, லசித் மலிங்கா.

ஆப்கானிஸ்தான்: அஷ்கர் ஆப்கன் (கேப்டன்), முகமது ஷாஷத், இசானுல்லா ஜனத், ஹஸ்மதுல்லா ஷாகிதி, நஜிபுல்லா ஸத்ரன், முனிர் அகமது, ஜாவேத் அகமதி, முகமது நபி, ரகமத் ஷா, குல்பாதின் நயிப், சமியுல்லா ஷென்வாரி, ஷராபுதின் அஷ்ரப், ரஷித் கான், முஜீப் ஸத்ரன், அப்தாப் ஆலம், யாஸ்மின் அகமத்சாய், சயீத் ஷிர்ஸத். ஹாங் காங்: அன்ஷுமன் ராத் (கேப்டன்), அய்சாஸ் கான், பாபர் ஹயாத், கேமரான் மெக்கால்சன், கிறிஸ்டோபர் கார்ட்டர், எசான் கான், எசான் நவாஸ், அர்ஷத் முகமது, கின்சிட் ஷா, நதீம் அகமது, ராக் கபூர், ஸ்காட் மெக்கெனி, தன்வீர் அகமது, தன்வீர் அப்சல், வகாஸ் கான், அப்தாப் உசேன்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2019

  22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்