SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னதான திட்டத்திலும் ஊழல் என்கிறார் wiki-யானந்தா

2018-09-13@ 01:09:02

‘‘அன்றாட அன்னதானம் திட்டத்திலும் ஊழலாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

 ‘‘திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என கண்டறிய, சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நீதிபதி மகிழேந்தி திடீர் ஆய்வு நடத்தினார். கோயிலுக்கு வரும் நீதிபதி, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சிறிது நேரம் கோயில் வளாகத்தை பார்வையிடுவார் என கோயில் நிர்வாகம் நினைத்திருந்தது. ஆனால் நீதிபதியோ, கோயிலுக்குள் நடைபெறும் நிர்வாக தில்லுமுல்லுகளை எல்லாம் அலசி ஆராய்ந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

அப்போது, ஊழியர்கள் தொடர்பான வருகைப்பதிவேடு முறையாக பராமரிக்கவில்லை, ஊழியர்களுக்கு அடையாள அட்டை இல்லை. சீருடை இல்லை, கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் வேலை செய்யவில்லை. வேலை செய்யும் கண்காணிப்பு கேமராக்களையும் கண்காணிக்க யாருமில்லை என அடுக்கடுக்கான தவறுகள் அம்பலமானது.
இவை எல்லாவற்றையும் விட, நிரந்தர ஊழியர்களைவிட கோயிலில் தற்காலிக ஊழியர்கள் எனும் பெயரில் இடத்தரகர்கள் ‘தனி ராஜ்ஜியம்’ நடத்தியதை நீதிபதி கண்டுபிடித்தார். வெளியூர்களில் இருந்து வரும் ‘பணக்கார பக்தர்களை’ வழியிலேயே மறித்து, சிறப்பு தரிசனம் செய்து வைக்க பேரம் பேசி பணம் வசூலிப்பதும், அதை நிரந்தர ஊழியர்களுக்கு பங்கு போட்டு கொடுப்பதும் இடைத்தரகர்களின் வேலை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வின் போது மட்டும் 12 இடைத்தரகர்கள் சிக்கினர். அதில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, அன்றாடம் நடைபெறும் அன்னதானம் திட்டத்திலும் ஊழல் நடந்தது தெரியவந்தது. பக்தர்கள் அன்னதானம் வழங்கும் செலவை ஏற்கும் நாட்களிலும், கோயில் நிர்வாகம் செலவு செய்ததாக கணக்கு எழுதப்
படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் நடைபெறும் முறைகேடு நடக்கிறது. இங்கு மட்டுமல்ல, தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கிறது என பக்தர்கள் தரப்பில் வேதனைப்படுகின்றனர். விரிவான விசாரணை நடத்தினால், இன்னும் பல மோசடிகள் அம்பலமாகும் என்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரி அரசியல் நிலவரம் எல்லாம் எப்பிடியிருக்கு..’’

 ‘‘இளைஞர் காங்கிரஸ் தேர்தல் மோதலை வைத்தே, புதுச்சேரியில் சிலர் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளார்களாம். இதற்காக முதல்வருக்கும், அமைச்சருக்கும் உள்ள இடைவெளியை சிலர் ஊதி பெரிதாக்கி வருகின்றனராம். அண்ணே.. நீங்கள் நிறுத்திய ஆதரவாளரை தோற்கடித்த கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருக்கக்கூடாது, என எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி குளிர் காய ஆரம்பித்திருக்கிறார்களாம். முதல்வரின் டெல்லி தலைமையின் நெருக்கத்தை வைத்து சுலபமாக முடித்துவிடலாம் என்பது அவர்களின் கணக்காக உள்ளது.
இதில் அமைச்சருக்கும், முதல்வருக்கும் ஈகோ யுத்தம் உச்சமடைந்திருக்கிறதாம். இதற்காக 4 பேர் கொண்ட பட்டியலை மனதில் கணக்கு போட்டு முதல்வர் களத்தில் இறங்கியிருக்கிறாராம். ராமாயண கதாநாயகனும், முன்னாள் தலைவர் ஒருவரும், இந்திராநகர் முருகனும், அரியாங்குப்பம், விநாயகரும் என பரிசீலனையில் இருக்கிறார்களாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில், இப்படியெல்லாம் செய்தால், தேர்தலில் கட்சி சுவாகா ஆகிவிடும் என எச்சரிக்கை சிலர் எச்சரிக்கை விடுத்தார்களாம். எனவே தற்போதைக்கு இதெல்லாம் வேண்டாம். நேரம் வரும் காத்திருப்போம் என காலை சுற்றிய பாம்பாக வருகிறார்களாம். கூட்டி கழித்து கணக்கு போட்டால், எல்லாம் நஷ்டத்திலே முடியும் என்பதால், தலைவர் பதவி மாற்றும் அசைன்மென்ட் தள்ளிப்போயுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஏதோ ஒரு மாவட்டத்துக்கு முதன்மை கல்வி அலுவலராக வர்றவங்க, டிரான்ஸ்பர் கேட்டு உடனே வேறு மாவட்டத்துக்கு போகுறதுலயே குறியாய் இருக்காங்களாமே... அப்படியா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஆமாம்பா.. சிவகங்கை மாவட்டத்துலதான் அந்த பஞ்சாயத்து. அதாவது, ராமநாதபுரத்துக்கு பக்கத்து மாவட்டங்கிறதால, அங்கேயும் வறட்சி தாண்டவமாடுதாம்... இது ஒரு பக்கம் இருந்தாலும், வருவாயும் தட்டுப்பாடாய் இருக்கிறதால, இந்த மாவட்டத்துக்கு யாருமே முதன்மை கல்வி அலுவலராக வர்ற ஆசைப்பட மாட்டேங்கிறாங்களாம்... அப்படி டிரான்ஸ்பர்ல வந்தாலும், எப்படியாவது வேறு மாவட்டங்களுக்கு செல்றதுலதான் குறியாய் இருக்காங்களாம்... வர்றவே விருப்பமில்லாதவங்களை மாற்றும்போது, அவங்க சென்னைக்கு போய் வேறு மாவட்டத்துக்கு மாறுதல் பெறுவதற்கான, முன் வேலைகளை பார்த்துட்டே சிவகங்கைக்கு வர்றாங்களாம்... வந்து சேர்ல உட்கார்ந்த ஓரிரு மாதங்களில் டிரான்ஸ்பர் ஆர்டர் வாங்கிட்டு ஓடிடுறாங்களாம்பா... கடந்த ஓராண்டிற்குள் மட்டும் 3 முதன்மை கல்வி அலுவலர்கள் மாறிட்டாங்களாம்... தற்போது சிவகங்கைக்கு முதன்மை கல்வி அலுவலரே இல்லையாம்... ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சிவகங்கை மாவட்டத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறாராம்... இதனால் பள்ளி ஆய்வுப்பணி, தேர்வுப்பணி, மாவட்ட அளவில் கல்வி வளர்ச்சி குறித்த பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருதுன்னு ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில புலம்புறாங்கப்பா...’’ என்றார் விக்கியானந்தா.     


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

 • apayin_kuppai11

  ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்