SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவை விட்டு வெளியேறும் முன்பாக மத்திய நிதி அமைச்சரை சந்தித்தேன் : மல்லையா தகவலால் பரபரப்பு... அருண் ஜெட்லி மறுப்பு

2018-09-13@ 00:30:46

லண்டன்: வங்கிகளில் 9,000 கோடி கடன் மோசடி செய்து விட்டு இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, நாடு கடத்தல் வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.  ‘இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு மத்திய நிதியமைச்சரை சந்தித்தேன்’ என பேட்டியில் அவர் தெரிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது ‘அப்பட்டமான பொய்’ என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துள்ளார். கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கியில் தனது நிறுவனத்துக்காக வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ₹9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது.  கடனை திருப்பி செலுத்தாமல் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.  லண்டனில் தங்கியுள்ள இவரிடம் இருந்து கடன் தொகையை மீட்கவும், இந்தியாவுக்கு நாடு கடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. பிரிட்டன் குடியுரிமை பெற்ற மல்லையா, இந்தியாவில் சிறையில் அடைக்கப்படலாம் எனவும், ஆனால், இந்திய சிறைச்சாலைகள் சுகாதாரமற்று உள்ளன எனவும் மல்லையா தரப்பில் வாதிடப்பட்டது.

அதன்படி, சிறைச்சாலை எப்படி இருக்கிறது என்பதை புகைப்பட, வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மும்பையில் ஆர்தர் சாலை சிறைச்சாலையில் மல்லையா அடைக்கப்படலாம் என்பதால், அதன் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், சிறைச்சாலை குறித்த வீடியோ காட்சிகள் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அறை எண் 12ல் மல்லையாவுக்கு உள்ள வசதிகள் அதில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. நாடு கடத்தும் வழக்கை விசாரித்து வந்த லண்டன் நீதிமன்றம், இந்த வீடியோ காட்சியை நேற்று ஆய்வு செய்தது. இந்த வழக்கில் நேற்று மல்லையா ஆஜரானார். முன்னதாக நீதிமன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடனை திருப்பிச்செலுத்த தயாராக இருக்கிறேன். ₹15,000 கோடி மதிப்பிலான எனது சொத்துக்களை விற்று கடனை அடைப்பதற்கான விரிவான திட்டத்தை கர்நாடகா நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பித்துள்ளேன். இதை நீதிமன்றம் பரிசீலிக்கும் என நம்புகிறேன்.

 நான் முன்பே கூறியது போல, என்னை அரசியல் கால்பந்தாக்கி விட்டனர். ஜெனிவாவில் நடந்த மாநாட்டில் பங்கேற்கவே நான் இந்தியாவை விட்டு வெளியேறினேன். அதற்கு முன்பு நிதியமைச்சரை சந்தித்தேன். நாடு கடத்துவது தொடர்பாக நீதிமன்றம் முடிவு செய்யும். என தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பெயரை அவர் குறிப்பிடவில்லை எனினும், அவர் 2016ல் இந்தியாவை விட்டு வெளியேறியபோது அருண்ஜெட்லி நிதியமைச்சராக இருந்தார்.வங்கிகளின் நிதி நிலையை சீர்குலைக்கும் வராக்கடன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, பாஜ மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தைப்போர் நடந்து வருகிறது. பாஜ ஆட்சியில்தான் வராக்கடன் ₹9.17 லட்சம் கோடி உயர்ந்துள்ளது என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மத்திய பாஜ அரசுதான் மல்லைவாவை தப்ப விட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடன் மோசடி செய்து லண்டனில் பதுங்கியுள்ள மல்லையா, இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நிதியமைச்சரை சந்தித்திருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெட்லி மறுப்பு: மல்லையா சந்தித்ததாக கூறியது பற்றி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:2014ம் ஆண்டில் இருந்து நான் ஒரு போதும் அவரை (மல்லையாவை) சந்திக்க வாய்ப்பு அளித்தது கிடையாது. எனவே, அவர் சந்தித்தாரா என்ற கேள்விக்கே இடம் இல்லை. அவரது கூற்று அப்பட்டமான பொய். மாநிலங்களவை எம்.பியாக இருந்த மல்லையா, தனக்கு அளித்த சிறப்புரிமையை தவறாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஒரு முறை நாடாளுமன்றத்தில் இருந்து அவரது அறைக்கு செல்லும்போது வழியில் என்னிடம் பேசினார். அப்போது, கடனை அடைக்க தயாராக உள்ளதாக கூறினார். அவர் மோசடி பேர்வழி என அறிந்திருந்ததால் நான் அவரை பேச விடவில்லை. அவரை பார்த்து ‘என்னிடம் பேசுவதில் எந்த பலனும் இல்லை. வங்கிக்குச் சென்று பேசுங்கள்’ என்றேன். அவர் கையில் வைத்திருந்த தாள்களை கூட நான் வாங்கவில்லை. இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

நாடு கடத்தப்படுவது குறித்து டிசம்பர் 10ம் தேதி தெரியும்:

விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தபோது, கிங்பிஷர் விமான நிறுவனத்தின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து அவர்களுக்கு தெரியும். ஆனால், வங்கிகளில் அவர்கள் கூறிய தகவல்கள் நேர் மாறாக உள்ளன. உண்மை நிலையை மறைத்து கடனுக்கு விண்ணப்பித்துள்ளனர் என வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் வரும் டிசம்பர் 10ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்