SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பராமரிப்பு, பழுது என்ற போர்வையில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

2018-09-12@ 04:39:08

சென்னை: பராமரிப்பு, பழுது என்ற போர்வையில் மின் பகிர்மானக் கழகம் இருட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன என்று வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.சென்னையிலும், மதுரையிலும் ஏன் கிராமப்புறங்களிலும் கூட மின்வெட்டு செய்யப்படுவதும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான மின்சாரம் கிடைக்காமல் தவிப்பதும், அதிமுக ஆட்சியில் இப்போதுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணியின் நிர்வாகம் அலங்கோலமாக மாறி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

மின் பகிர்மான கழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி, 12 ஆயிரத்து 250 கோடிக்கு மேல் இழப்பு; அதிக விலை கொடுத்து தனியார் கம்பெனிகளிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்ததில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு; உதய் திட்டத்தில் கிடைத்த நிதியை உருப்படியான திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் முறைகேடு; மின்வாரியத்திற்கு எலக்ட்ரானிக் மீட்டர்கள் கொள்முதல் செய்ததில் மெகா ஊழல். நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதால், மின் உற்பத்தியில் மிகப்பெரிய தேக்க நிலைமை ஏற்பட்டுள்ளது. தேவைப்படும் 13260 மெகாவாட் மின்சாரத்தில் இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. ஆகவே, 3260 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையினால் மின் பகிர்மானக் கழகம் முச்சந்தியில் வந்து நிற்கிறது.

மின் பகிர்மானக் கழகத்தில் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள வரலாறு காணாத நிதி நெருக்கடியால், பராமரிப்பு செலவுகளுக்கு பணமில்லாமல் தடுமாற்றம், மின்பகிர்மானக் கழகத்திற்குத் தேவையான கேபிள்கள் கூட வாங்க இயலாமல் தவிப்பு, மின் திட்டங்களை விரைவில் நிறைவேற்றி முடிக்க முடியாத நிர்வாகத் திறமையின்மை போன்ற கருப்பு அத்தியாயம், மின் பகிர்மானக் கழக வரலாற்றில் ஊழல், அமைச்சர் தங்கமணியின் நிர்வாகத் திறமையின்மையால் எழுதப்படுகிறது. அதனால், விரைவில் கடுமையான மின் வெட்டை சந்திக்கும் அபாயகரமான சூழ்நிலைக்கு தமிழக மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளார்கள். அதனால், மின் தேவையை சமாளிக்க பராமரிப்பு, பால்ட் என்ற போர்வையில் மின்வெட்டுக்களை அமல்படுத்துங்கள் என்று வாய்மொழி உத்தரவு போயிருப்பதாகவும், அதை முன்னிட்டு திடீர் திடீரென்று, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டுகள் அரங்கேறி, மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்து, மக்களுக்கு வெளிச்சம் தரும் மின் பகிர்மானக் கழகத்தையே இருட்டுக்குள் தள்ளியிருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், இன்றைய அமைச்சர் தங்கமணியும் மக்களுக்கு மிகப்பெரிய மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார்கள். மக்கள் தலையில் தாங்க முடியாத மின் கட்டணங்களைச் சுமத்தி வைத்து டெண்டர்கள் மூலம் தாராளமாக கொள்ளையடித்துள்ளார்கள்.
ஆகவே, பராமரிப்பு என்ற போர்வையிலும், பால்ட் என்ற போர்வையிலும் மக்களையும், விவசாயிகளையும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மின்பகிர்மானக் கழகத்தில் அதிமுக உருவாக்கியுள்ள நிதி நெருக்கடியை நீக்கி, மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, மின் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்