SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ரூ.84.05க்கு விற்பனை பெட்ரோல் ரூ.90ஐ தாண்டியது

2018-09-12@ 00:49:17

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல் நேற்றும் அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.05க்கும், டீசல் ரூ.77.13க்கும் விற்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் பர்பனியில் பெட்ரோல் ரூ.90.11 ஆக உயர்ந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகிய காரணங்களை காட்டி பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மாதத்தில் 10 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால், 20 நாட்களில்  மட்டும் பெட்ரோல் ரூ.2.32ம், டீசல் ரூ.2.56ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதமும் கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரை 11 நாட்களில் பெட்ரோல் ரூ.2.47, டீசல் ரூ.2.95 உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஆனாலும், எண்ணெய் நிறுவனங்கள் எந்த விதத்திலும் சளைக்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காட்டும் விதமாக பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்த்தப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 14 காசு உயர்த்தப்பட்டு ரூ.84.05க்கும், டீசல் 15 காசு உயர்த்தப்பட்டு ரூ.77.13க்கும் விற்பனையானது.  இதுபோல், பிற நகரங்களிலும் அந்தந்த மாநில வாட் வரிகளுக்கு ஏற்ப விலை உயர்வு இருந்தது. நேற்று மும்பையில் பெட்ரோல் ரூ.88.26, டெல்லியில் ரூ.80.87, கொல்கத்தாவில் ரூ.83.75 என இருந்தது. அதிகபட்சமாக மும்பை பர்மனியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.11க்கு விற்கப்பட்டது. டீசல் டெல்லியில் ரூ.72.97, மும்பையில் ரூ.77.15, கொல்கத்தாவில் ரூ.75.82க்கு விற்பனையானது.

இந்தியாவிலேயே புதிய சாதனையாக மகாராஷ்டிரா மாநிலம் பர்பனியில் பெட்ரோல் நேற்று  ரூ.90.11 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல டீசல் விலையும் நேற்று லிட்டருக்கு ரூ.77.92ல் இருந்து ரூ.78.06 ஆக அதிகரித்துள்ளது என பர்பனி மாவட்ட பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய் தேஷ்முக் கூறினார்.   பர்பனியில் கடந்த திங்கட்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.89.97 ஆகவும் டீசல் விலை ரூ.77.92 ஆகவும் இருந்தது. கடந்த 15 நாட்களாகவே விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 14 பைசாவும் டீசலுக்கு 15 பைசாவும் அதிகரித்தது. மகாராஷ்டிராவின் பிற நகரங்களான  நாண்டெட்டில் பெட்ரோல் ரூ.89.93 ஆகவும் டீசல் விலை ரூ.77.90, அமராவதியில் ரூ.89.93 மற்றும் ரூ.78.84, தானேயில் ரூ.88.43 மற்றும் ரூ.77.64 என இருந்தது.

பெட்ரோல், டீசல் விலையில் பெரும்பகுதி வரிகளாகவே உள்ளன. மத்திய அரசு கலால் வரியாக பெட்ரோலுக்கு ரூ.19.48, டீசல் ரூ.15.33 வசூலிக்கிறது. மாநில வரிகளில் அந்தமான் நிகோபாரில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 6 சதவீத வாட் வரியும், பெட்ரோலுக்கு மும்பையில் அதிகபட்ச வாட் வரியாக 39.12 சதவீதம், தெலங்கானாவில் டீசலுக்கு அதிகபட்ச வாட் வரியாக 26 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோலுக்கு 27 சதவீதம், டீசலுக்கு 17.24 சதவீதம் வாட் வரி உள்ளது. தமிழகத்தில் பெட்ரோலுக்கு 32.16 சதவீதம், டீசலுக்கு 24.08 சதவீதம் வாட் வரி வசூலிக்கப்படுகிறது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. நேற்று மேற்கு வங்க மாநிலம் ஒரு ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே, வரிகளை குறைப்பதே விலை குறைப்புக்கு உடனடி தீர்வு என்ற நிலை உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகின்றன. இது எதிர்வரும் பண்டிகை நாட்களில் மக்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரி, கமிஷன் இல்லாமல் லிட்டர் 40 ரூபாய்தான்
டீலர் கமிஷன், மாநில வரிகள் இல்லாமல் பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ.40.45ஆகவும், டீசலுக்கு ரூ.44.28ஆகவும் உள்ளது. இத்துடன் டீலர் கமிஷனாக பெட்ரோலுக்கு ரூ.3.34, டீசலுக்கு ரூ.2.52 வழங்கப்படுகிறது. இதுதவிர மாநில அரசுகளின் வாட் வரிகள், மத்திய அரசின் கலால் வரி சேர்கின்றன. வரிகளே பெரும்பான்மை ஆக்கிரமிப்பதால்தான் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Netaji_Subhash _Chandra_Bose_Airport In  Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்