SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டாசு பரிதாபங்கள்

2018-09-10@ 02:04:22

தமிழகத்தில் நேற்று முன்தினம் சிவகாசி, சேலம் ஆகிய இரு இடங்களில் ஒரேநாளில் ஏற்பட்ட பட்டாசு தீ விபத்துக்களில் மொத்தம் 5 உயிர்கள் பலியாகியுள்ளன. கடந்த 2012ம் ஆண்டு சிவகாசி முதலிப்பட்டியில் நடந்த பட்டாசு  தொழிற்சாலை வெடிவிபத்தில் 56 பேர் பலியானது நாட்டையே உலுக்கியது. 2009ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் பல்லிபட்டியிலும் தீபாவளியை ஒட்டி நடந்த வெடிவிபத்தில் 32 பேர் பலியாகினர். இந்திய அளவில் இயங்கும் பல பட்டாசு தொழிற்சாலைகளில் அடிப்படை வசதிகள் சுத்தமாக இருப்பதில்லை. இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் ஒன்றரை லட்சம் பேரும், அங்கீகாரமற்று வீடுகளிலும்,  தொழிற்கூடங்களிலும் மறைமுகமாக ஒரு லட்சம் பேரும் பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொத்தடிமை போல நடத்தப்படும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி சம்பளம் மட்டுமே கிடைக்கிறது. எவ்வித  மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு உடனடியாக கிடைப்பதில்லை. பட்டாசு விபத்துகளுக்கு பெயர் போன சிவகாசியில் தீக்காயங்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் இல்லை என்பது பெருங்குறை.

புற்றீசல் போல அனுமதியின்றி ஆங்காங்கே முளைக்கும் பட்டாசு தொழிற்சாலைகளும் வெடிவிபத்துகளுக்கு முக்கிய காரணம். சிவகாசியில் மட்டுமே 600க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 30  சதவீதத்திற்கும் மேலானவை உரிமம் பெறாதவை என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குடிசை ெதாழிலாக தொடங்கப்படும் பட்டாசு தொழிலில் குடியிருப்புகளுக்கு அருகே பட்டாசு தயாரிப்பு பணிகளும் நடக்கின்றன. இதன்  விளைவு வெடி விபத்துகளில் அப்பாவிகளும் சிக்கி பலியாகின்றனர்.
சேலத்தில் தற்போது நடந்துள்ள விபத்தில் விவசாய தோட்டத்தில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் நடத்தப்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது.  தீயணைப்புத்துறை இத்தகைய பட்டாசு ஆலைகளை கண்டறிந்தாலும் ‘கண்டும் காணாமலும்’ நடந்து கொள்வது வழக்கம். பட்டாசு ஆலைகளில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்கள், வசதிகளை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு  சென்று பரிசோதிப்பதில்லை. எல்லாமே கரன்சி நோட்டால் கண்ணை மறைய வைத்து விடுகிறது.

தமிழகத்தில் மொத்தம் எத்தனை பட்டாசு ஆலைகள் உள்ளன என்பதிலேயே இன்றுவரை வரையறுக்கப்பட்ட கணக்குகள் இல்லை. விபத்துகள் நடக்கிறபோது மட்டுமே அனுமதி பெறாத ஆலை என சுட்டிக்காட்டப்படுகிறது. பட்டாசு  ஆலைகளில் தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு உள்ளிட்ட ரசாயன கலவைகளை கொண்டு வெடி மருந்து தயாரிப்பதும் வெடிவிபத்துகளுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக பட்டாசுகளை தடை செய்வது குறித்தான வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விபத்தில்லாத கொண்டாட்டங்களும், மனித உயிர்களை பலி கேட்காத பட்டாசு  தொழிற்சாலைளும் அமைவதும் அரசின் உண்மையான நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்