SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தார்மீகம் என்றால் என்ன?

2018-09-08@ 00:27:51

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த மாதவரத்தில் குட்கா வியாபாரி மாதவராவ் குடோனில் வருமான வரி சோதனை நடைபெற்றது. வருமான வரி சோதனையின்போது டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய, 2013ம் ஆண்டு முதல் 2016வரை யாருக்கெல்லாம் லஞ்சம் வழங்கப்பட்டது என்ற விவரம் இருந்தது. இந்த டைரி மூலம், சட்டவிரோத குட்கா வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இதில் அமைச்சர்கள், உயர்போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் அடிபட்டதால், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் எழுப்பினார். இந்நிலையில், குட்கா விற்பனைக்கு சட்டவிரோத அனுமதி விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க  உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் 30ம் தேதி வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், குட்கா விவகாரம் தொடர்பான ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடமிருந்து பெற்றனர்.

கடந்த 3 மாதமாக குட்கா வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து முதற்கட்டமாக குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. குட்கா விநியோகத்திற்கு தடையாக உள்ள காவல் துறை அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து இருப்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது குட்கா குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வீட்டில்  சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குட்கா விற்பனைக்கு சீருடை அணிந்த காவலர்களே ஆதரவும், பாதுகாப்பும் அளித்திருப்பதும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கு பின்னணியாக இருந்ததும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. இதையடுத்து அனைத்து அரசியல் தலைவர்களும் குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் தார்மீக அடிப்படையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் குட்கா வழக்கில் தொடர்புள்ளது வெளியாகிவிட்ட நிலையிலும் டிஜிபி ராஜேந்திரன் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தாமாக முன்வந்து ராஜினாமா செய்யவும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அதை வலியுறுத்தியதாக தெரியவில்லை. குற்றவாளி என்று ஆவணங்களோடு சிபிஐ அதிகாரிகள் அவர்களை நெருங்கிவிட்ட நிலையில் தார்மீக அடிப்படையில் பதவி விலகி, நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். அப்போது தான் தார்மீகம் என்பதற்கு உண்மையான அர்த்தம் நிலைநிறுத்தப்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்