SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியமான ஜனநாயகம்

2018-09-05@ 00:55:39

தமிழகத்தில், மத்திய அரசின் முக்கிய திட்டங்களான, கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்க திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்க திட்டம், புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் திட்டம், காவிரிப்படுகை கதிராமங்கலத்தில் எரிவாயு  எடுக்க ஆழ்கிணறுகள் தோண்டும் திட்டம், கடலூரில் பெட்ரோகெமிக்கல் திட்டம், மேற்கு மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,  நாமக்கல் மாவட்டங்களில் விவசாய விளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், தென்மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்வளத்தை தடுக்கும் வகையில் சேது சமுத்திர திட்டம் ரத்து என  தமிழகத்தின் பல மண்டலங்களை தேர்வுசெய்து, மக்களை ஆபத்தான குழியில் தள்ளுகிற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பது தமிழக அரசியல் கட்சி  தலைவர்களின் பலத்த குற்றச்சாட்டு.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம், ஜி.எஸ்.டி வரி அமல், பசுவதை தடை சட்டம், இதன் நீட்சியாக மாட்டுக்கறிக்கு தடை, கட்டாய நீட் தேர்வு, விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றுக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சேலம்-சென்னை இடையே ஆறுவழி பசுமைச்சாலை திட்டத்துக்கு விளைநிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கும் விவசாயிகளிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக, ஜனநாயக ரீதியாக கருத்து தெரிவிப்போரை மாவோயிஸ்ட்கள் என முத்திரை குத்தி, அவர்களை சிறையில் அடைப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்த கோரிக்கைகளை முன்வைத்து, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் நடத்தும் போராட்டங்களையும் தாண்டி, தற்போது தனி மனித போராட்டமும் விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவமே இதற்கு சான்று. தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி படிப்பு மாணவி சோபியா, தனி ஆளாக நின்று, கோஷம் எழுப்பி, சிறை சென்றுள்ளார். அதேவேகத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி, ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஜாமீன் மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, பொதுஇடங்களில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது, ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த விரும்புவோர், காவல்துறையினரின் அனுமதி பெற்று, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என அறிவுரை வழங்கியுள்ளார். மக்களுக்கு ஒவ்வாத மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை எதிர்த்து, ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த ஒவ்வொரு தனி மனிதனுக்கும் முழுஉரிமை உள்ளது. இதுவே, ஜனநாயக நாட்டில், சாமானிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும். கருத்துக்கு எதிர்கருத்து தேவை. அது தான் ஆரோக்கியமான ஜனநாயகம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2019

    26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்