SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிர் பறிக்கும் செம்மரம்

2018-09-04@ 00:35:46

ஆந்திர மாநிலத்தின் சேஷாசல வனப்பகுதி திருப்பதி, கடப்பா, நெல்லூர், கர்நூல் வரை பரவியுள்ளது.  இங்கு அதிக அளவில் செம்மரங்கள் உள்ளன. தேக்கை விட அதிக விலைக்கு போகும் இந்த மரங்கள் பல ஆண்டுகளாக  வெட்டிக் கடத்தப்பட்டு வருகின்றன. இங்கு வெட்டப்படும் செம்மரங்கள் சீனா, கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தொடர்ந்து கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது.இன்றுவரை இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், இதுவரை எத்தனை டன் மரங்கள் கடத்தப்பட்டது என்ற விபரங்கள் பரம ரகசியமாகவே உள்ளது.வறுமை, வேலையின்மை காரணமாக தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஆந்திராவில் கூலித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலரை ஆசைவார்த்தை காட்டி, செம்மரக்கடத்தலுக்கு ஆந்திர ஏஜென்டுகள் பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்படும் இத்தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஆந்திர வனத்துறை மற்றும் காவல்துறையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. பதற்றம் மிக்க இந்திய எல்லைப் பகுதியில் கூட இத்தனை பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில்லை.ஆனால், அப்பாவி தொழிலாளிகளை குருவிகளைச் சுடுவது போல ஆந்திர காவல்துறை, வனத்துறையுடன் இணைந்து சுட்டுக் கொன்ற சம்பவத்தின் வடு ஆறாத நிலையில்,  கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் மிதந்தது. அவர்களை அடித்து கொன்றதாக புகார் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த காமராஜர் என்ற கூலித்தொழிலாளி என்கவுன்டரின் மூலம் கொல்லப்பட்டுள்ளார்.
இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்டோர் ஆந்திராவில் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகியுள்ளனர். அத்துடன்  ஏராளமான தமிழர்கள் சிறைக் கொட்டடியில், பல ஆண்டுகளாக வாடி வருகின்றனர். இவர்களை வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் மீதோ, செம்மரங்களைக் கடத்தி செழித்தவர்கள் மீதோ ஆந்திர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என்கவுன்டர் கொலை வழக்குகளில் கடைபிடிக்க வேண்டிய சட்டவிதிகளை மீறி ஆந்திராவில் நடத்தப்படும் ஜனநாயகப் படுகொலைகள் வன்மையாக கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை.சேஷாசல வனப்பகுதியில் நடக்கும் செம்மரக்கடத்தல் பின்னணியில் உள்ளவர்களைப் பற்றி ஆராய வேண்டியது அவசியம். அத்துடன் இதுவரை கொல்லப்பட்ட தமிழர்களின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதற்கு செம்மரக்கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஆந்திர அரசு ஒப்படைக்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழக அரசும் தரவேண்டும். தருமா?


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gslvrocket

  ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

 • 15-11-2018

  15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 129JawaharlalNehru

  நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

 • 2018TiruvannamalaiDeepam

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

 • israelfire

  காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்