SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசுப் பள்ளி நூலகத்தை மேம்படுத்திய கிராமத்து ஆசிரியர்!

2018-09-03@ 17:21:08

பாட நூல்களைத் தவிர்த்து மற்ற நூல்களைப் படிப்பதில் பள்ளிக் குழந்தைகளுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். ஆனால், அதற்கான வாய்ப்புதான் குறைவு. அதுவும் கிராமப்புற மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்பே கிடைப்பதில்லை.பள்ளிகளில் நூலகம் இருக்கும், நூல்களும் இருக்கும். ஆனால், மாணவர்கள் படிப்பதற்கு நூல்களை வழங்குவது ஆசிரியர்களுக்குக் கூடுதல் சுமை என்பதால் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டத்திலுள்ள மன்னம்பாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்  சிறந்த நூல்களைப் படித்துவருகின்றனர் என்பது ஆச்சரியமாக உள்ளது. அங்கு பணியாற்றும் ஆசிரியர் இரத்தின புகழேந்தியின் முயற்சியினால் இந்த அரிய வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் புகழேந்தி நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…“இந்த ஊருக்கு நான் மாறுதலாகி வந்தபோதுதான் இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது பள்ளியில் நூலகமெல்லாம் கிடையாது. நான் எந்த பள்ளிக்குச் சென்றாலும் அப்பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்களோடு மற்ற நூல்களையும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது வழக்கம். முன்பு பணியாற்றிய வேப்பங்குறிச்சி பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்காக அருகிலுள்ள நெய்வேலி கிளை நூலகத்தில் 100 ரூபாய் செலுத்தி நிறுவன உறுப்பினராக சேர்ந்து பள்ளிக்கு மாதம் இருமுறை நூல்களைப் பெற்றுவந்து மாணவர்கள் படிக்கக் கொடுத்துவந்தேன். அதுபோல் இங்கு செய்ய முடியவில்லை. எனவே, நூல்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட பள்ளி என்பதால் ஒவ்வோர் ஆண்டும் பள்ளி நூலகத்திற்கு நூல்கள் வாங்கிட 7,500 ரூபாய் தருவார்கள் அந்தத் தொகையில் நல்ல நூல்களைத் தேர்வு செய்து தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் வாங்கத் தொடங்கினோம். சிறுவர்களுக்கான ஒரு இதழில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை செயல்திட்டப் போட்டி நடத்துவார்கள். அதில் வெற்றி பெறும் பள்ளிகளுக்கு 500 ரூபாய் மதிப்புடைய நூல்களைப் பரிசளிப்பார்கள். அப்போட்டியில் எங்கள் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பங்குபெறச் செய்து இதுவரை 6000 ரூபாய் மதிப்புடைய சிறந்த நூல்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறோம். இதுவரை நான் எழுதி வெளியிட்டுள்ள 14 நூல்களைப் பள்ளி நூலகத்திற்கு வழங்கியுள்ளேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நூல்களை சேர்க்கத் தொடங்கி  ஒரு நூலகத்தைப் பள்ளியில் உருவாக்கினோம்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘நாங்கள் தொடங்கிய நூலகத்துக்கு மகுடம் சூட்டியது போல்  மறைந்த எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களின் வாழ்நாள் சேமிப்பு நூல்களையும் எங்கள் பள்ளிக்கு வழங்கி பள்ளி நூலகத்தை விரிவுபடுத்த அவருடைய குடும்பத்தினர் ஊக்கமளித்தனர். சபாநாயகம் அவர்கள் நல்ல நூல்களைத் தேடித்தேடி சேகரிப்பவர். நூல்களைப் பெரிதும் மதித்து அவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் இயல்புடையவர். அப்படி சேமித்த நூல்களை என்ன செய்வது என்று அவர்கள் யோசித்தபோது ரோஜா முத்தையா நூலகம், விருத்தாசலம் பல்லடம் மாணிக்கத்தின் தமிழ் நூல் காப்பகம் ஆகிய இடங்களில் கேட்டுப்பார்த்தனர். அவர்கள் “எங்களிடம் உள்ள நூல்களையே பாதுகாக்க இடம் போதவில்லை” எனப் பெற்றுக்கொள்ள மறுத்தபோது பள்ளி நூலகத்திற்கு வழங்கலாம் என்று முடிவெடுத்து என்னிடம் கேட்டனர். “நீங்கள் விரும்பினால் எங்கள் பள்ளிக்குக் கொடுக்கலாம், நாங்கள் பாதுகாப்பதோடு பின்தங்கிய ஒரு கிராமம் பயனுறும்” என்றேன்.

என் யோசனையை ஏற்றுக்கொண்ட எழுத்
தாளர் அவர்களின் மகள் திருமதி மங்கள நாயகி அவர்களும் அவரின் மகன் திரு. அகிலநாயகம் அவர்களும் மனப்பூர்வமாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய நூல்களையும் அவற்றைப் பாதுகாப்பாக அடுக்கி வைப்பதற்கு இருபதாயிரம் ரூபாய் மதிப்புடைய அலமாரிகளையும் வழங்கியுள்ளனர். இன்று மன்னம்பாடி மாணவர்கள் புதுமைப்பித்தன் கதைகளையும் ந.பிச்சமூர்த்தி கவிதைகளையும் வல்லிக்கண்ணன் கட்டுரைகளையும் படிக்கின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

மேலும் சிங்கப்பூர் எழுத்தாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் தனது நூல்களை விற்றதன் மூலம் கிடைத்த ஒரு லட்ச ரூபாய்க்கும் நூல்களை வாங்கி 10 அரசுப் பள்ளிகளுக்கு கொடுத்துள்ளார். மன்னம்பாடி பள்ளி நூலகச் செயல்பாடுகளை முகநூல் வழியாக அறிந்து இப்பள்ளி நூலகத்திற்கு 14000 ரூபாய்  மதிப்புடைய நூல்களை வழங்கியுள்ளார்.அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ற குழுவினர் 2000 ரூபாய் மதிப்புடைய க்ரியா பதிப்பக நூல்களை ஆசிரியர் உமாமகேஸ்வரி அவர்களின் வழியாக இப்பள்ளி நூலகத்திற்குப் பரிசளித்துள்ளனர்’’ என்றார் புகழேந்தி. மாணவர்கள் எப்படி நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர் எனக் கேட்டதற்கு அவர் கூறிய புதுமையான தகவல்,
‘‘முதலில் நாங்களே நூல்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களின் வகுப்பிற்கே சென்று கொடுத்துவந்தோம். அதில் மாணவர்களின் ரசனையை அறியமுடியாமல் போனது. இப்போது நூலகத்திற்கென்று தனி இடத்தினை அளித்துள்ளார் தலைமை ஆசிரியர் திரு.வீரபாண்டியன் அவர்கள். அதனால் மாணவர்களை நூலகத்திற்கே வரவழைத்து அவரவர் விரும்பும் நூல்களை அவரவரே தேர்ந்தெடுத்துப் படிக்க வாய்ப்பளித்துள்ளோம்.

ஒரு மாணவர் நூலகத்தில் என்ன புத்தகத்தைப் படிக்கிறாரோ அதைப்பற்றிய சில விவரங்களை ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொள்ளவேண்டும். ஒரு நூலை முழுமையாகப் படித்தபின் அந்த நூலைப்பற்றி அவருக்கு தெரிந்த முறையில் மற்ற மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் நூல் திறனாய்வுக்கும் மாணவர்களைத் தயார்ப்படுத்துகிறோம். இந்த முயற்சியை ஆசிரியர்களிடமும் மேற்கொள்ளும் திட்டம் உள்ளது. ஆசிரியர்கள் செய்யும் திறனாய்வைப் பார்த்து மாணவர்களும் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் மாணவர்களிடம் உள்ள படைப்பாற்றலை வளர்த்தெடுக்க கவிஞர்கள் எழுத்தாளர்களைக்கொண்டு பயிலரங்குகள் நடத்தும் திட்டமும் உள்ளது”என்று மிகுந்த எதிர்பார்ப்போடு செயல்பட்டுவருகிறார் ஆசிரியர் இரத்தின புகழேந்தி. அவரது முயற்சிகள் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்!
 
 - முத்து


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

 • pulwama_kashmirthakuthal11

  காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்